பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற்றது தமிழக அரசு

தமிழக அரசு பத்திரிகையாளர்கள் மீது தொடுத்திருந்த 93 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2021-07-29 12:49 GMT

 பத்திரிகையாளர்கள் மீது தொடுத்திருந்த 93 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற்றது தமிழக அரசு

தமிழக அரசு பத்திரிகையாளர்கள் மீது தொடுத்திருந்த 93 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு : கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் ஆக்கப்பூர்வமான செயல் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. அவற்றுள் 'தி இந்து' நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும், 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழின் ஆசிரியர் மீது 5 வழக்குகளும், 'எக்கனாமிக்ஸ் டைம்ஸ்' நாளிதழின் ஆசிரியர் மீது 1 வழக்கும், 'தினமலர்' நாளிதழின் ஆசிரியர் மீது 12 வழக்குகளும், 'ஆனந்த விகடன்' வார இதழின் ஆசிரியர் மீது 9 வழக்குகளும், 'ஜுனியர் விகடன்' இதழின் ஆசிரியர் மீது

11 வழக்குகளும், 'நக்கீரன்' இதழின் ஆசிரியர் மீது 23 வழக்குகளும், 'முரசொலி' நாளிதழின் ஆசிரியர் மீது 17 வழக்குகளும், 'தினகரன்' நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும் போடப்பட்டிருந்தன,

மேலும், 'புதிய தலைமுறை' தொலைக்காட்சி, 'நியூஸ் 7' தொலைக்காட்சி, 'சத்யம்' தொலைக்காட்சி, 'கேப்டன்' தொலைக்காட்சி, 'என்.டி.டி.வி' தொலைக்காட்சி, 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி மற்றும் 'கலைஞர்' தொலைக்காட்சி ஆகியவற்றின் ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.

திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில் "பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்'' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.7.2021) ஆணையிட்டுள்ளார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரின் இந்த ஆணையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டி வரவேற்றுள்ளது.. கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் இந்த ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளது.

வாய்ப்பூட்டு சட்டங்களும் , மிரட்டும் அவதூறு வழக்குகளும் பத்திரிகைகளை – ஊடகங்களை இனி மிரட்டாது என்ற நம்பிக்கையை முதல்வரின் ஆணை உறுதிபடுத்தியுள்ளதாக கருதுகிறோம் என சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச்செயலாளர் பாரதிதமிழன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News