வாரிசு அரசியல்… ஓர் விரிவான பார்வை…

ஒரு கட்சியில் ஒருவர் இருக்கிறார் என்பதால் அவர் வாரிசுகள் அரசியலில்‌ ஈடுபடகூடாது என்று சொல்வது சரியல்ல;

Update: 2022-12-18 13:30 GMT

பைல் படம்

தற்போதைய தமிழக அரசியல் களத்தில் பேசுபொருள் வாரிசு அரசியல். அரசியலில் குதிப்பது, வெற்றி பெறுவது, முன்னேறுவது வாரிசுகளுக்கு எளிதாக வாய்க்கிறது. வாரிசுகள் அவர்களின் ரத்த சொந்த பந்த நிழலில் பயணிக்கிறார்கள்.

கட்சியின் பிற சிறந்த நிர்வாகிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, வாரிசுகள் முன்னிலை பெறுவது ஒரு அப்பட்டமான பாகு பாட்டை மக்களுக்கு மத்தியில் குறிப்பாக அந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் மத்தியில் விதைக்கிறது.

வாரிசுகளுக்கு பெரிய உழைப்பில்லாமல் பதவி கிடைத்து விடுவதால், அவர்கள் தனக்குக் கிடைத்த பதவியின் அருமையை உணராமல், தவறான வழியில் பதவியை உபயோகிக்கிற வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு தரப்பினர் கவலை கொள்கின்றனர். இதனால் வாரிசு அரசியல் மக்களின் பார்வையில் ஒரு மோசமானதாக தெரிகிறது. ஆனால் உண்மையில் வாரிசு அரசியல் என்பது தவிர்க்க முடியாதது.

மன்னராட்சி காலத்தில், மன்னருடைய வாரிசுகளுக்கு அரசுரிமை கோர உரிமை இருந்தது. இது ஒரு கண்டிப்பான வழிமுறை என்பதை விட, இது ஒரு சௌகரியமான அணுகு முறை என்று சொல்லலாம். யார் வெல்கிறார்களோ, அவர்களுக்குத்தான் நாடாளும் உரிமை. அரசுரிமைக்கான போட்டி இல்லாத காலங்களில் அடுத்த மன்னனை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு எளிய வழிமுறை யாகவும், அனைவரும் ஏற்றுக் கொள்கிற ஒரு முறையாகவும் இருந்திருக்கிறது. மன்னரின் வாரிசு, அடுத்த மன்னராக இப்படித்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

மக்களாட்சியில் ஒரு சீரிய மாற்றத்தை எதிர் பார்க்கும் போது, வாரிசு அரசியல் உட்பட அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு, மக்கள் வேறு ஒரு புதிய கட்சியை, தலைமையை தேர்ந்தெடுப்பார்கள். அவ்வாறான காலகட்டங்கள் தவிர்த்து பிற நேரங்களில் வாரிசு அரசியல் என்பது தவிர்க்க முடியாததாகிறது. மன்னராட்சி போலவே இங்கும் கட்சியின் புதிய தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு சௌகரியமான அணுகு முறையாக இது பார்க்கப்படுகிறது. வாரிசு அரசியல் இல்லாத பட்சத்தில், கட்சி பிளவு படுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

இதைத் தவிர்க்கும் பொருட்டு கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கட்சித் தலைமையின் வாரிசை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. அரசியல் வாரிசு ஒருவேளை பலவீனமாக இருக்கும் பட்சத்தில், கட்சியை வழி நடத்துவதற்கான சரியான உறுப்பினர் இருக்கும் போது, வாரிசு அல்லாதவர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இந்த நடைமுறை நிலைப்பாடுகள் எல்லாம் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்றல்ல, கடந்த கால மற்றும் நிகழ்கால அரசியல் களத்தில் கண்கூடாக நாம் காண்பவை தான்.வாரிசு அரசியல் தவறு என்று எண்ணுவது, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் மக்கள் இருப்பதைத் தான் காண்பிக்கிறது. நாம் பொதுவாக எது இல்லையோ, அதுதான் நமக்கு இருக்கும் எல்லா பிரச்னைக்கும் காரணம் என்று எண்ணுகிறோம்.

அதை சரி செய்து விட்டால், எல்லாம் சரியாக நடந்து விடும் என்ற எண்ணத்தில் இருப்போம். படித்தவன் அரசியலுக்கு வந்தால் நல்லது நடந்துவிடும். அரசியல்வாதி படிக்காமல் இருப்பதால்தான் நாடு முன்னேறாமல் இருக்கிறது. சாதியை ஒழிக்க வேண்டிய அரசே, சாதி சான்றிதழ் தருகிறது, இந்தியாவின் மக்கள் தொகை தான் நம் ஏழ்மைக்கு காரணம் போன்றவை சில உதாரணங்கள்.

வாரிசு அரசியல் உலகம் முழுவதும் இன்றும் மக்களாட்சியில் கூட இருந்து கொண்டுதான் இருக்கிறது. வாரிசு அரசியல் என்பது சிறந்தது கிடையாது. ஆனால் அது தவிர்க்க முடியா தது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.அரசியல் கட்சிகளோ மற்றும் அவர்களின் வாரிசுகளோ மக்களுடைய பிரச்னைகளை, மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் வரை அதில் எந்த ஒரு பிரச்னையும் கிடையாது. அது இரண்டாம்பட்சமாக ஆகிவிடும் பட்சத்தில் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். அது நிதர்சனம், நடந்தே தீரும். டார்வின் கூற்று பரிணாமத்திற்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும் . தக்கன பிழைக்கும் – செழிக்கும்.

ஜனநாயகத்தின் வேர் என்பதே மக்கள் விரும்புபவரை தேர்வு செய்வதே. வாரிசு அரசியல் என்பது கிட்டத்தட்ட மன்னராட்சி யை தான் பிரதிபலிக்கிறது. இருப்பினும் இங்கு முக்கியமானது ஒருவர் வாரிசு என்பதற்காக அரசியலுக்கு வரக்கூடாது என்பதல்ல.வாரிசு அரசியல் விஷயத்தில் எந்த கட்சியும் உத்தமர்களோ யோக்கியர்களோ இல்லை. இந்த இடத்தில் நம்மில் உத்தமர்கள் எவரோ அவர்கள் இங்கு முதல் கல் எறியட்டும் என சொல்லத் தோன்றுகிறது.

ஒரு கட்சியில் ஒருவர் இருக்கிறார் என்பதால் அவர் வாரிசுகள் அரசியலில்‌ ஈடுபடகூடாது என்று சொல்வது சரியல்ல. வரும் வாரிசுகள் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபட்டால் ஏற்றுக் கொள்ளலாம்… தவறில்லை.அதற்கு இந்தியாவில் பல உதாரணங்கள் உள்ளன.ஆதலால் ஒரு இயக்கத்தின் மீதான வாரிசு அரசியல் குற்றச்சாட்டு என்பது போலி ஜனநாயகவாதிகளின் பகல் வேஷம்.

ஆக..வாரிசு அரசியல் மீதான குற்றச்சாட்டு பொய்யும் அல்ல அபாண்டமும் அல்ல. வளர்ச்சி பாதையில் வளரும் போது வரவேற்போம்..தளர்ச்சி பாதையில் தடுமாறும் போது நிராகரிப்போம்.  கட்டுரை… சங்கர் / இங்கிலாந்து.

Tags:    

Similar News