எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி! மோடியை சுற்றிவளைக்கும் பிரச்னைகள்

மணிப்பூரிலும் காஷ்மீரிலும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்.

Update: 2024-07-01 04:06 GMT

நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்து நான்கு வாரங்கள்கூட நிறைவடையாத நிலையில், ‘ரயில் விபத்து முதல் நீட் தேர்வு மோசடிகள் வரை அனைத்துக்கும் மோடி அரசே காரணம்’ என்று எதிர்க்கட்சிகள் எழுப்பும் விமர்சனத்தால், தேசிய அரசியல் களம் படு சூடாகியிருக்கிறது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி, கடந்த பத்தாண்டுகளாகக் காலியாக இருந்த நிலையில், தற்போது அந்த இடத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அமர்ந்து விட்டார். இந்த நிலையில், புதிய ஆட்சி அமைந்து, ‘முதல் 15 நாள்களில் 10 பிரச்னைகள்’ என்று பட்டியல் வெளியிட்டு, பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறார் ராகுல் காந்தி.

அதில், மேற்கு வங்க ரயில் விபத்து, ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்கள், ரயில்வேதுறை குளறுபடிகளால் மக்கள் பாதிப்பு, நீட் தேர்வு மோசடிகள், நீட் முதுநிலைத் தேர்வு ரத்து, யு.ஜி.சி நெட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு, பால், பருப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருள்களின் விலையேற்றம், சுங்கக் கட்டண உயர்வு, உத்ரகாண்ட் காட்டுத்தீ, டெல்லி குடிநீர் தட்டுப்பாடு, மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் ஏற்பட்ட வெப்ப அலை மரணங்கள் என 10 பரபர பிரச்னைகளை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

முக்கியப் பேசுபொருளாகியிருக்கும் இந்தப் பிரச்னைகள் பற்றிச் சுத்தமாக வாய் திறக்காத பிரதமர் மோடி, 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி அரசால் கொண்டு வரப்பட்ட எமர்ஜென்சியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதற்கும் “கடந்த பத்தாண்டுக்கால மோடி ஆட்சியே எமர்ஜென்சி காலம்தான்” என்று சுடச்சுட உடனே பதிலடி கொடுத்திருகிறார் ராகுல்காந்தி. காங்கிரஸ் தலைவர்கள், ‘‘நிகழ்காலப் பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்’’ என்று பிரதமரைச் சாடியிருக்கிறார்கள்.

இப்படியான சூழலில், “மோடி அரசின் தொடக்கம் எப்படி இருக்கிறது?” என்ற கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ்,  “கடவுளால் அனுப்பிவைக்கப் பட்டவர் என்று தன்னைப் பற்றி மோடி நம்பிக் கொண்டிருக்கிறார். இது, பல பிரச்னைகளுக்கும் காரணமாக இருக்கிறது. 303 எம்.பி-க்களை வைத்திருப்பதான பழைய நினைவிலேயே அவர் இன்னமும் இருப்பதால், தன்னைக் கேள்விக்கு அப்பாற்பட்டவராகவே கருதிக்கொள்கிறார். பா.ஜ.க-வில் 240 எம்.பி-க்கள் தான் இருக்கிறார்கள் என்ற யதார்த்த நிலையை உணர வேண்டும்.

தற்போது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரித்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் வந்து விட்டார். அவர் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்களின் கேள்விக்கணைகளை அவர் எதிர்கொள்ள வேண்டும். எனவே, கடந்த பத்தாண்டுக்காலம் நாடாளுமன்றத்தை நடத்தியதைப் போல இப்போது நடத்த முடியாது.

இதையெல்லாம் உணர்ந்து ஆளுங்கட்சி தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிக்கு, துணை சபாநாயகர் பதவியைக் கொடுத்திருக்க வேண்டும். அப்படிக் கொடுத்திருந்தால், மோடிக்கு ஒரு கூடுதல் மைலேஜ் கிடைத்திருக்கும். மேலும், நாடாளுமன்றக் கூட்டத்தொடரும் அமைதியாக நடைபெற்றிருக்கும். ஆக, பா.ஜ.க அரசு மீண்டும் தவறிழைக்கிறது.

மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வைக்கூட ஒழுங்காக நடத்த முடியாத அளவுக்கு ஒரு கையாலாகாத அரசாக இந்த அரசு இருக்கிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. எல்லாமே வாய் ஜம்பம் தான். செயல்பாடு வெறும் பூஜ்ஜியமாகத்தான் இருக்கிறது” என்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.

இதையடுத்து, பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச்செயலாளரான பேராசிரியர் இராம. ஸ்ரீநிவாசன் கூறியதாவது: “புதிய அரசு பதவியேற்றவுடன், மணிப்பூரிலும் காஷ்மீரிலும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உள்துறை அமைச்சர் அமித் ஷா முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். புதிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்முரமாக இருக்கிறார். அடுத்த நூறு நாள்களுக்குள் என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டுமென்று ஒவ்வொரு துறையின் அமைச்சருக்கும் பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார்.

எனவே, மத்திய அரசில் அனைத்து வேலைகளும் தீவிரமாக நடைபெறத் தொடங்கியிருக்கின்றன. ரயில் விபத்து, நீட் தேர்வு என எதைப் பற்றி வேண்டுமானாலும் ராகுல் காந்தி விமர்சிக்கட்டும். அது குறித்து நாடாளுமன்றத்தில் அவர்கள் கேள்வி எழுப்பினால், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உரிய பதிலை அளிப்பார்கள்” என்றார்.

“ஏற்கனவே, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், பங்குச்சந்தையில் ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்ட விவகாரத்தைக் கையிலெடுத்த ராகுல் காந்தி, பங்குச்சந்தையின் இழப்புக்குப் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் குற்றம் சாட்டினார். அந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார். அந்த விவகாரம் உட்பட, ஆளும் தரப்புக்கு எதிரான பல விவகாரங்களை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எழுப்பவிருக்கிறார். இது வெறும் ஆரம்பம்தான். பா.ஜ.க அரசை ஒரு நொடி தூங்கவிட மாட்டார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி” என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.

ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி யுத்தத்தில், மக்களுக்கு நல்லது நிகழ வேண்டும். புதிய நாடாளுமன்றம் ஆக்கபூர்வமாக நடக்க வேண்டும்.

Tags:    

Similar News