ஆந்திராவில் ‘ரியல் கிங் மேக்கர்’ பவன் கல்யாண் தான் தெரியுமா!
ஆந்திராவில் பா.ஜ.க., தலைமையில் வலுவான கூட்டணி உருவாக்கி வெற்றிக்கு பாடுபட்டவர் பவன்கல்யாண் தான்.;
தனிப் பெரும்பான்மை இல்லாததால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது பாஜக. இதனால், சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார்.
அது மட்டுமில்லாமல், ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 9-ம் தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 133 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதன்படி 160-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.
இவ்வளவு பெரிய வெற்றி எப்படி சாத்தியப்பட்டது என்பதற்கு பதில் இன்று சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில் இருக்கிறது. தனது பேட்டியில், “தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமாக இருந்து இந்த வெற்றியை பெற்றுள்ளோம். தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா இணைந்து பணியாற்றியதால் தான் இந்த வெற்றி கிடைத்தது. ஜனசேனா தலைவர் பவன் கல்யாணுக்கும், பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எனது நன்றிகள்” எனக் கூறியுள்ளார் சந்திரபாபு நாயுடு.
அவர் கூறியது போலவே, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உதவியது என்டிஏ கூட்டணியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியை (டிடிபி) மீண்டும் இணைத்தது. ஆனால், அத்தனை எளிதாக பாஜக தெலுங்கு தேசத்தை கூட்டணியில் இணைக்கவில்லை. சொல்லப்போனால், ஜெகன் மோகன் தலைமையிலான ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸுடன் கூட்டணிக்கு செல்லவே பாஜக அதிகம் விரும்பியது.
ஏனென்றால், ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து தொடர்பாக பாஜக - தெலுங்கு தேசம் இடையே உரசல்கள் ஏற்பட்டன. என்டிஏவில் இருந்த போதும், முதல்வராக பதவி வகித்த போதும் பாஜகவால் உதாசீனப்படுத்தப்பட்டார் சந்திரபாபு. 2017-ல் முதல்வராக இருந்த அவர் பலமுறை மோடியை சந்திக்க முயன்றும், அவருக்கு அப்பாயின்மென்ட் கொடுக்காமல் தவிர்த்தது பிரதமர் அலுவலகம். கிட்டத்தட்ட ஐந்து முறைக்கு மேல் சந்திரபாபுவை சந்திப்பதை தவிர்த்தார் மோடி. இறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியை உதறினார் சந்திரபாபு நாயுடு.
இதன்பின் ஜெகன் ஆட்சிக்கு வர, காட்சிகள் மாறியது. பகை அரசியலால் சொல்லொண்ணா துயரத்தை சந்தித்தார். சட்டசபையில் குடும்பத்தை இழிவுபடுத்தியதில் தொடங்கி, அவரின் பிரஜா வேதிகா வீடு இடிப்பு, இறுதியில் ஊழல் வழக்கில் கைது என ஜெகன் ஆட்சியில் தனி மரமாக ஆக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு.
பவன் என்ட்ரி... - கடந்த 2014-17-ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பரில் அதிகாலை நேரத்தில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். கர்னூலில் கைது செய்யப்பட்ட அவர், சுமார் 500 கி.மீ தொலைவில் உள்ள ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்டதை கேள்விப்பட்ட அன்றைய தினமே நடிகரும், ஜனசேனா நிறுவனருமான பவன் கல்யாண் அவரை சந்திக்க முற்பட்டார். இதற்காக ஐதராபாத்தில் இருந்து விஜயவாடா சென்று கொண்டிருந்த அவரை, மாநில எல்லையில் வைத்தே ஆந்திர காவல்துறை தடுத்து நிறுத்தியது. சட்டம் - ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு, பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கக் கூடாது எனக் கூறி ஆந்திர மாநிலத்துக்குள் நுழையத் தடை விதித்தது. இதனால், பவன் தனது கட்சித் தொண்டர்கள் உடன் சாலையில் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்தி ஜெகனின் கைது முடிவுக்கு வலுவான எதிர்ப்பை பதிவு செய்தார்.
ஜெகன் அரசை பகைத்து கொண்டு சில தினங்களில் சிறையில் சென்று சந்திரபாபுவை சந்திக்கவும் செய்த பவன், சிறைக்கு வெளிய வந்து 'ஆந்திர நலுனுக்காக ஜனசேனாவும், தெலுங்கு தேசமும் ஒன்றாக செயல்படும்' என்று அறிவித்தார். பவன் இப்படி அறிவிக்கும் முன்னரே, அவரின் ஜனசேனா தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்தது.
2024 தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு பாஜக நடத்திய தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார் பவன். ஆனால் அதன்பின் பாஜகவிடம் ஆலோசிக்காமலே தெலுங்கு தேசம் உடன் கூட்டணி என அறிவித்தது, பாஜகவுக்கு ஒருவித தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
பாஜக விரும்பாத தெலுங்கு தேசத்தை மீண்டும் என்டிஏ கூட்டணியில் சேர்க்க நிர்பந்தப்படுத்தினார் பவன். ஒரு கட்டத்தில் என்டிஏவில் தெலுங்கு தேசத்தை சேர்க்க முடியவில்லை என்றால், என்டிஏவில் இருந்து வெளியேறுவேன் என்று தனிமரமாக இருந்த சந்திரபாபு நாயுடுவுக்காக வரிந்து கட்டினார். பாஜக கண்டுகொள்ளாமல் இருக்க, பாஜக இல்லாமலே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட வைத்து அழுத்தத்தை அதிகப்படுத்தினார்.
பவனின் 'பவர் மூவ்'க்கு பணித்தது பாஜக. இதனால், ஆறு ஆண்டுகால கசப்புகளை மறந்து என்டிஏவில் ஐக்கியமானது தெலுங்கு தேசம். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்படும் வரை தெலுங்கு தேசமும், ஜனசேனாவும் தனித்தனி பாதைகளில் பயணித்துக்கொண்டிருந்தது. நாயுடுவின் கைதே இருகட்சியையும் இணைத்தது. சந்திரபாபு நாயுடு கைதை துணிச்சலாக எதிர்க்க காரணமாக பவன் சொன்னது, "ஆந்திர மாநில வளர்ச்சிக்கு அனுபவம் வாய்ந்த தலைவர் வேண்டும். நாங்கள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அல்லது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆட்சியில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்கள், பொய் வழக்குகள், சாமானிய மக்களை அச்சுறுத்துதல், வளங்களை கொள்ளை அடிப்பது மற்றும் மதுபானக் கொள்கைகளை எதிர்க்கிறோம்." என்று தனது அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
அப்போது மட்டுமல்ல தெலுங்கு தேசம் - ஜனசேனா - பாஜக கூட்டணி அமைத்த பிறகும் தனது அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்த பவன் தவறவில்லை. பாஜக கூட்டணியில் இணையும் முன்பு ஜனசேனாவுக்கு 24 சட்டப்பேரவை தொகுதிகளும், 3 மக்களவை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. கூட்டணியில் பாஜக இணைந்த பின் அக்கட்சிக்கு இடமளிக்கும் வகையில் தனது கட்சி போட்டியிடும் இடங்களை விட்டுக்கொடுத்தார். அதன்படி, 21 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 2 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிட்டது ஜனசேனா. அதற்கு கிடைத்த பலனாக தான் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வென்று மாநிலத்தின் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தை பிடித்துள்ளது ஜனசேனா.
தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைக்க பவன் எடுத்த நடவடிக்கைகள் அவரின் அரசியல் புத்திசாலித்தனத்தையும் முதிர்ச்சியையும் வெளிப்படுத்தியது. மூன்று கட்சிகளும் இணைந்தால்தான் ஜெகனை வீழ்த்த முடியும் என்று பாஜகவை நம்ப வைத்த அவர், கூட்டணியில் ஒரு நட்சத்திரப் பேச்சாளராக இருந்து ஈகோ இல்லாமல் பணியாற்றினார். ஒரு ஆல்ரவுண்டராக அனைத்தையும் தனி ஆளாக எதிர்கொண்டு, தனிமரமாக இருந்த சந்திரபாபு நாயுடுவை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்க போராடினார். தற்போது அதனை சாதித்தும் காட்டியிருக்கிறார்.