ஜூன் 4ம் தேதிக்கு பின் மீண்டும் அரசியல் போர்..! அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., ரெடி..!
ஓட்டு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதிக்கு பின் தமிழகத்தில் அரசியல் களம் புது விதமான ஒரு போரை சந்திக்க உள்ளது.என்னப்பா இது, பெரிய அக்கப்போரா இருக்கும் போலிருக்கே..?
தனது சொந்த கட்சி வேட்பாளர்களுக்கு துரோகம் செய்தவர்களின் பட்டியலை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., மேலிடங்கள் தயாரித்துள்ளன.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் களம் நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கிட்டத்தட்ட பெரும் போரே நடத்தி முடித்திருக்கின்றன. பா.ஜ.க.,வை பொறுத்தவரை கிடைத்தவரை லாபம். காரணம் பா.ஜ.க., தேர்தல் களத்தில் இழப்பதற்கு ஒன்றுமில்லை. தவிர இந்த தேர்தலில் நிச்சயம் பா.ஜ.க.,வின் ஓட்டு சதவீதம் மிக வலுவாக அதிகரித்து, தமிழகத்தின் அசைக்க முடியாத அரசியல் கட்சியாக வந்து நிற்கும் என அக்கட்சி தலைமை மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.
ஆனால் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் சறுக்கினால் அழிவு தான் என்ற நிலையில் நிற்கின்றன. இந்த நிலையில் இரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ‘ தேர்தல் களத்தில் தீயாகப் பணி செய்தவர்கள், பிளான் இல்லாமல் சொதப்பியவர்கள், அக்கறை இல்லாமல் அலட்சியம் காட்டியவர்கள், திறப்பதாகச் சொல்லி விட்டு பர்ஸை மூடியே வைத்துக் கொண்டவர்கள், கொடுத்த ஸ்வீட்டுகளையும் பதுக்கி விட்டவர்கள், கட்சியின் வெற்றிக்கு எதிராக உள்ளடி வேலை செய்தவர்கள்’ எனப் பெரிய பட்டியலே தயாரித்து முடித்துள்ளன.
தி.மு.க.,வில் “முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி தலையிட்டும் கூட, சில தொகுதிகளில் கட்சி சீனியர்கள் வேலைகளில் வேகம் காட்டவில்லை. ஒருகட்டத்தில், முதல்வரின் முகாம் அலுவலகமே, ‘தலைமையிலிருந்து உங்களை நோக்கி ஓர் உத்தரவு வந்தால், அதைக் கடைப்பிடிக்க வேண்டும். உத்தரவை மதிக்காமல், எதிர்த் தரப்பை வலுவாக்குவதற்குப் பெயர் துரோகமில்லையா..?’ எனக் கடிந்தும், நிலைமை சீராகவில்லை. அப்படி அலட்சியம் காட்டியவர்களின் லிஸ்ட்டை எடுத்து கையில் வைத்துள்ளது தி.மு.க தலைமை” என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள். அ.தி.மு.க-விலும் இதே சிக்கல் தான் நிலவுகிறது.
“பொதுச்செயலாளரான பிறகு தான் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், பல முன்னாள் அமைச்சர்களிடம் நம்பிக்கையுடன் பொறுப்பை ஒப்படைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவர்களில் பலர் துரோகமிழைத்து விட்டனர்...” என அ.தி.மு.க.,வின் சீனியர்களும் பொருமுகிறார்கள். அந்த கட்சியிலும், யார் யாரெல்லாம் அலட்சியம் காட்டினார்கள்... துரோகம் செய்தார்கள்... தலைமைக்கு எதிராக வேலை செய்தார்கள்... மாற்றுக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்ற பட்டியல் எடப்பாடியின் கைகளுக்கு சென்று விட்டது. விரைவில் அ.தி.மு.க.,வும் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது என தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக நிற்கும் அ.தி.மு.க., தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக வேலை செய்த... பணப்பட்டுவாடா செய்த தொழிலதிபர்கள்... உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் பட்டியலை பா.ஜ.க.,வும் தயாரித்து வைத்துள்ளது. இதேபோல் பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக வேலை செய்த... பல்வேறு வகைகளில் பா.ஜ.க., வேட்பாளர்களுக்கு உதவிய தொழிலதிபர்கள்... உள்ளூர் வி.வி.ஐ.பி.,க்களின் பட்டியலையும் தி.மு.க., தயாரித்து இருப்பதாக தெரிகிறது.
ஆக கட்சிகளின் வெற்றி தோல்வி நிலவரங்களை பொறுத்து இந்த பட்டியல் மீது நடவடிக்கை பாயும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. ஜூன் 4ம் தேதிக்கு பிறகு மீண்டும் ஒரு அதகளத்தை, பெரிய அரசியல் போரினை தமிழக அரசியல் களம் சந்திக்கத்தான் போகிறது எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.