பணம் இல்லைன்னா கஷ்டம் : உளவுத்துறை அனுப்பிய ரிப்போர்ட்...!
திராவிட கட்சிகளுக்கு இணையாக செலவு செய்யாவிட்டால் தேறுவது கஷ்டம் என உளவுத்துறை டெல்லிக்கு தகவல் அனுப்பி உள்ளது.
தேசிய அளவில் பாஜக மிகப்பெரிய கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலை சந்திக்க பொருளாதார ரீதியாக பாஜக சில பின்னடைவுகளை சந்தித்து வருகிறதாம். இது தொடர்பாக தேசிய தலைமைக்கும் தகவல் சென்றுள்ளதாம்.
திராவிட கட்சிகளைப் போல தேர்தல் செலவுகளுக்கென பாஜக தலைமை மாநில தலைமைகளுக்கு பணம் கொடுப்பதில்லை. ஆனால், இந்த முறை கட்சி தலைமையில் இருந்து தமிழகத்திற்கு பல கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் களத்தில் திராவிட கட்சிகளை எதிர்கொள்ள வேண்டுமாயின் தமிழக பாஜக வேட்பாளர்களும் கணிசமாக செலவு செய்ய வேண்டும் என்கிற எதார்த்த நிலையை மேலிடத்திற்கு உளவுத்துறையினர் கொடுத்த ஆலோசனையைத் தொடர்ந்தே பணம் ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளதாம்.
இதற்கிடையில், ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என அண்ணாமலை வீரமாகப் பேசினார். இதனைக்கேட்டு டென்சனான, கோவை பாஜகவினர், ஓட்டுக்கு நீங்க பணம் கொடுங்க ; கொடுக்காமல் போங்க. எங்களுக்கு கவலை இல்லை.
ஆனால், தேர்தல் பணிகளை கவனிக்கனும்னா எங்களுக்கு பணத்தை வெட்டுங்க. பணம் இல்லைன்னா எதுவும் நடக்காது என்று அண்ணாமலையிடமே தெரிவித்து விட்டார்களாம். இதில் அப்-செட்டான அண்ணாமலை, நிலைமையை டெல்லிக்குத் தெரிவித்து, தேர்தல் செலவுகளுக்கு பணம் கேட்டுள்ளாராம் என்கிறது பாஜக தரப்பு.
கோவை நிலவரம்: கோவையில் ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது. கோவையின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தீவிரமாக களத்தில் பிரசாரம் செய்து வந்தார்.
கோவை முன்னாள் அதிமுக மேயர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் கணபதி ராஜ்குமார் ஆவார். 2020 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாநகரின் 5வது மேயராக 2011 - 16 வரை அதிமுகவில் இருந்து சேர்ந்த கணபதி பி.ராஜ்குமார் பதவி வகித்து வந்தார். அங்கே அதிமுகவின் டாப் தலைகளில் ஒருவராக இருந்தார்.
அதன்பின் 2020ல் கட்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு இடையே திமுகவிற்கு வந்தார். அங்கே திமுக வளர செந்தில் பாலாஜி எப்படி காரணமாக இருந்தாரோ அதேபோல் இவரும் முக்கியமான மாஸ்டர் மைண்டாக இருந்தார். இந்த நிலையில் அவரை திமுக வேட்பாளராக தேர்வு செய்துள்ளது. அதேபோல் அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார். அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக பணியாற்றிய இவர், மார்ச் 2016ல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக உள்ளார்.
வாக்கு சதவிகிதம்: கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கே கடந்த தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்று பார்க்கலாம்.
2019 பொதுத் தேர்தல். கோவையில் அதிமுக + பாஜக + பாமக +தேமுதிக + தமிழ் மாநில காங்கிரஸ் சேர்ந்து வாங்கிய வாக்குகள் 31% மட்டுமே. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாங்கியது 46%. இப்போது திமுக கூட்டணி அப்படியே உள்ளது.
ஆனால் பாஜக கூட்டணியில் அதிமுக , தேமுதிக இல்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் சேர்ந்திருக்கு. இவர்களிடம் 11% வாக்கு வேறு கோவையில் உள்ளது. அப்படி இருக்க அண்ணாமலைக்கு கோவை களநிலவரம் சாதகமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.