அண்ணாமலை எடுத்த முடிவு சரி! பிரதமர் மோடி அதிரடி ஆதரவு
தமிழகத்தில் என்.டி.ஏ., கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என அண்ணாமலை எடுத்த முடிவு சரியானது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.;
தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காவிட்டாலும், பாஜகவுக்கு வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், நாடாளுமன்றக் குழு தலைவராக, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை ராஜ்நாத் முன்மொழிய, அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் அதனை வழிமொழிய, ஒருமித்த குரலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வருங்காலங்களில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.க்கள் கிடைக்காத போதும், வாக்கு விகிதம் அதிகரித்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சரியான பாதையில்தான் சென்று கொணடிருக்கிறது என்பதற்கு தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்திருப்பதே உதாரணம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்றும், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்திருக்கிறது என்றும் மோடி கூறினார்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது, அண்ணாமலை எடுத்த முடிவு சரிதான் என உறுதிபட கூறியிருப்பது தமிழக பா.ஜ.க.,வினரை குஷிப்படுத்தி உள்ளது. அண்ணாமலையின் முடிவு தவறு என பலரும் விமர்சித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அண்ணாமலையின் முடிவு சரி என தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தி உள்ளன என ஆதாரத்துடன் பேசி சப்போர்ட் வழங்கியிருப்பது அண்ணாமலையின் எதிர்ப்பாளர்களை குப்புற கவிழ்த்து போட்டு விட்டது என பா.ஜ.க.,வினர் விமர்சிக்கின்றனர்.