காலியாகும் த.மா.கா கூடாரம்! ஓட்டம் பிடிக்கும் முக்கிய நிர்வாகிகள்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து நிர்வாகிகள் பலரும் தொடர்ச்சியாக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
1996-ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ என்ற பெயரில் புதிதாகக் கட்சி தொடங்கி, தி.மு.க கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த ஜி.கே.மூப்பனார், மாபெரும் வெற்றியையும் பெற்றார். மூப்பனார் மறைவுக்குப் பிறகு கட்சியின் தலைவர் பொறுப்புக்கு வந்த அவருடைய மகன் ஜி.கே.வாசன், த.மா.கா-வை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியுடன் இணைத்துக் கொண்டார். பிறகு காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் பொறுப்புக்கு வந்தவர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய மந்திரி சபையின் கேபினட் அமைச்சராகவும் ஆனார்.
இந்த நிலையில், 2014-ம் ஆண்டு திடீரென காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஜி.கே.வாசன், மீண்டும் த.மா.கா-வைத் தொடங்கினார். கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழக அரசியல் களத்தில் இயங்கி வரும் த.மா.கா-விலிருந்து அண்மைக்காலமாகக் கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருவது, அந்தக் கட்சியினரைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
த.மா.கா மாநில பொதுச்செயலாளர் பழனிவேல், மாநில செயலாளர் டி.வி.முருகன், வடசென்னை மாவட்ட வர்த்தக அணித் தலைவர் விநாயகம், மாவட்ட பொதுச்செயலாளர் சந்திரகுமார், மகளிர் பிரிவு நிர்வாகி காஞ்சனா, மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் தனுஷ்கோடி, பழனி நகரத் தலைவர் சுந்தர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் த.மா.கா-விலிருந்து விலகி காங்கிரஸில் ஐக்கியமாகியிருக்கின்றனர்.
இதற்கிடையே ‘கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இளைஞரணி மாநிலத் தலைவர் பதவியை யுவராஜா ராஜினாமா செய்திருக்கிறார். அவர் விரைவில் ‘அ.தி.மு.க-வுக்குச் செல்ல நேரிடும்’ என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில், ‘த.மா.கா-விலிருந்து மேலும் பலர் வெளியேறுவார்கள். விரைவில் வாசன் கூடாரமே காலியாகி விடும்’ எனப் பற்ற வைக்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
த.மா.கா-விலிருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்த பழனிவேலிடம் பேசுகையில், “ஜி.கே.வாசன் பா.ஜ.க-வை நோக்கி நகர்ந்து வருவது பிடிக்காமல் தான் கட்சியிலிருந்து பலரும் வெளியேறி வருகிறார்கள். த.மா.கா சார்பில், திருச்சியில் காமராஜர் விழாவை நடத்திய போது, விழா மேடையில் காமராஜர், மூப்பனார் படங்களுடன் மோடியின் படத்தையும் வைத்திருந்தார்கள். த.மா.கா நடத்தும் காமராஜர் விழாவில் மோடிக்கு என்ன வேலை. ஜி.கே.வாசன் பா.ஜ.க.,வை நோக்கிப் பயணிப்பதை இந்த நிகழ்வு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தற்போது த.மா.கா-வில் புதிதாக மாவட்டத் தலைவர்களை நியமித்து வருகிறார்.
இது கட்சியை வலுப்படுத்துவதற்கான வேலை இல்லை. ‘117 மாவட்டத் தலைவர்கள் என்னுடன் இருக்கிறார்கள்’ என்று கூறி பா.ஜ.க-வில் இணைவதற்கான வேலை தான் இது. மூப்பனார் காங்கிரஸிலிருந்து வெளியேறி த.மா.கா-வைத் தொடங்கி நடத்திவந்தாலும் காங்கிரஸ் சித்தாந்தத்திலிருந்து கடைசிவரை அவர் வெளிவரவில்லை. ஆனால், ஜி.கே.வாசன் அப்படியில்லை. அவருடைய சிந்தனை, அவருடைய தனிப்பட்ட வளர்ச்சியை நோக்கி மட்டுமே இருக்கிறது” என்றார்.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஒருவர், “காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில், கப்பல்துறை அமைச்சர் பதவி வகித்துவந்த ஜி.கே.வாசன், அந்தக் காலகட்டத்தில்தான் பிரபல தொழிலதிபர் ஒருவருக்குச் சில சலுகைகளைச் செய்து கொடுத்தார். இந்த விவகாரம் காங்கிரஸ் தலைமைக்குத் தெரியவந்ததால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் த.மா.கா-வைத் தொடங்கினார்.
இதற்குப் பின்னால் சம்பந்தப்பட்ட தொழிலதிபரும், பா.ஜ.க-வும் தான் இருந்தார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் த.மா.கா-வுக்கு மக்கள் தோல்வியையே பரிசாகக் கொடுத்தார்கள். இனியும் தனித்துப் பயணித்தால் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்தவர், இப்போது தன் கட்சியை பா.ஜ.க-வுடன் இணைக்கத் திட்டம் வகுத்திருக்கிறார். காங்கிரஸ் சித்தாந்த வழிவந்த அந்தக் கட்சியினர், வாசனின் இந்த முடிவுக்கு எதிராகக் கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் காங்கிரஸுக்கே திரும்புகிறார்கள்” என்றார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக கமலாலய சீனியர்கள் சிலரிடம் பேசியபோது, “ஜி.கே.வாசனுக்கு பா.ஜ.க-வில் தனது கட்சியை இணைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. ஆனால், சரத்குமார்போல் கடலில் கரைத்த கற்பூரம் ஆகிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, பா.ஜ.க-வில் மாநிலத் தலைவர் பதவியை எதிர்பார்க்கிறார். அதற்குப் பிரபல தொழிலதிபரின் ஆதரவும் இருக்கிறது. ஆனால், அண்ணாமலை முட்டுக்கட்டை போட்டுவருகிறார். வாசனுக்கு மாநிலத் தலைவர் பதவியைத் தருவதற்கு டெல்லிக்கும் விருப்பம் இல்லை” என்றனர்.
‘த.மா.கா-வை பா.ஜ.க-வுடன் இணைப்பதாக’ வெளியாகிவரும் தகவல்கள் குறித்து த.மா.கா செய்தித் தொடர்பாளரும், ஜி.கே.வாசனின் உதவியாளருமான புகழேந்தியிடம் கேட்டபோது, “தலைவர் பா.ஜ.க-வில் இணையவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் புரளி. அதுபோல் எந்தவொரு முயற்சியும் நடக்கவில்லை. தற்போதுகூடக் கட்சியை பலப்படுத்துவதற்காக புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் தலைவர்” என்றார்.
ஒரு காலத்தில் எப்படி இருந்த கட்சி? இது தான் காலத்தின் கோலமோ?