இதுவா திராவிட மாடல் ஆட்சி? தி.மு.க. அரசுக்கு சுப்பராயன் எம்.பி. சூடு
தூய்மை பணியாளர்களின் பணியை தனியாரிடம் ஒப்பந்தம் செய்வது திராவிட மாடல் ஆட்சி அல்ல என்று திருப்பூர் எம்.பி சுப்பராயன் கூறினார்.
தூய்மை பணியாளர்களின் பணியை தனியாரிடம் ஒப்பந்தம் செய்வது திராவிட மாடல் ஆட்சி அல்ல என்று திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கூறினார்.
ஈரோட்டில் துப்புரவு பணியினை தனியாருக்கு ஒப்பந்தம் செய்வதை கைவிடக்கோரி இன்று (திங்கட்கிழமை) 4வது நாளாக துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கூறுகையில், மாநகராட்சிக்கு கட்டடம் நிரந்தரமானது, அங்கு பணிபுரியும் அதிகாரிகள் நிரந்தரமானவர்கள். ஆனால் அங்கு துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்கள் மட்டும் தற்காலிகமானவர்களாக அறிவிக்கப்படுகின்றனர்.
இது எந்த விதத்திலும் நியாயப்படுத்துவதாக தெரியவில்லை. இந்த போக்கு திராவிட மாடல் ஆட்சிக்கு உகந்த தல்ல. மேலும் 30 ஆயிரம் பேர் பணி செய்யக்கூடிய ஒரு பணியினை தனியாரிடம் ஒப்பந்தம் செய்வதாக கைகோர்த்து கொண்டு அந்தப் பணியினை ஆயிரம், இரண்டாயிரம் பேரை வைத்து செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசு நிர்ணயித்த ஊதியத்தை கொடுக்காமல் அந்த ஊதியத்திலிருந்தும் குறைவான ஊதியம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு இந்த மாநகராட்சிக்கு அதிகாரம் கொடுத்தது யார்?.
இந்த தூய்மை பணியாளர் பணியினை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதை கைவிட வேண்டும். உடனடியாக தமிழக முதல்வரும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவும் இந்த பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக தூய்மை பணியாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட் டுக் கொள்ளப்படுகிறது என்றார். இந்த போராட்டத்தில் ஈரோடு மாவட்ட உள்ளாட்சித்துறை பொது நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் செயலர் ஆர்.கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க செயலாளர் சின்னச்சாமி, மாணிக்கம், கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.