“நல்லா ஏமாத்திப்புட்டாங்க...” கலகலக்கும் கமலாலயம்

தமிழக பா.ஜ.க.,வில் தலைவர்களுக்கிடையே உட்கட்சி பூசலும், அதிருப்தியும் வேகமாக அதிகரித்து வருகிறது.

Update: 2024-10-10 07:51 GMT

பாஜ மாநில தலைமை அலுவலகம் -கோப்பு படம் 

மந்தமான உறுப்பினர் சேர்க்கை, புஸ்வாணமாகிப்போன ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் ஹெச்.ராஜாவின் சுற்றுப்பயணம், தமிழிசை குறித்த திருமாவின் விமர்சனம் என்று ஏற்கெனவே தமிழக பா.ஜ.க-வுக்குள் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டிருக்க, “எங்களை நல்லா ஏமாத்திப்புட்டாங்க” எனப் புதுப் பஞ்சாயத்து ஒன்றும் கிளம்பியிருக்கிறது.

கமலாலய சீனியர்கள், “மாநிலத் தலைவராகும் கனவோடு பா.ஜ.க-வுக்கு வந்தவர், முன்னாள் அ.தி.மு.க அமைச்சரான நயினார் நாகேந்திரன். 2017-ல் பா.ஜ.க-வில் இணைந்த அவரை, பத்தோடு பதினொன்றாக பாவித்து மாநிலத் துணைத் தலைவர் பொறுப்பு கொடுத்து ஏமாற்றி விட்டார்கள். தொடர்ந்து மாநிலத் தலைவர் பதவிக்கு முயலும் அவருக்கு, மாநில ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பொறுப்பைக்கூடக் கொடுக்க டெல்லி முன்வரவில்லை.


தேர்தல் நேரப் பண விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி-யின் கிடுக்கிப்பிடி விசாரணை ஒருபுறம், கட்சிக்குள் உரிய அங்கீகாரம் கிடைக்காதது மறுபுறமென மனப் புழுக்கத்தில் உழல்கிறார் நயினார். பேசாமல், மீண்டும் திராவிடக் கட்சிக்கே சென்று விடலாமா என அவர் யோசிக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது நிலைமை. அவர் மட்டுமல்ல, வி.பி.துரைசாமி, சசிகலா புஷ்பா, குஷ்பு என மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்த பலரும் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள்.

நீங்கள் விரும்பும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த குழுவில் இணையுங்கள். குழுவுக்கு செல் | ஃபாலோ செய் 

2021 சட்டமன்றத் தேர்தலின் போது, தன் மகனுக்கு ஆத்தூர் தொகுதியைக் கேட்டார் வி.பி.துரைசாமி. சீட் வழங்கப்படாததால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு சேலம் தொகுதியைக் கேட்டார். அதையும் கொடுக்கவில்லை. அதிருப்தியில் பொங்கியவரை, ‘பொறுமையாக இருந்தால், உங்களுக்கு ஆளுநர் பதவிகூடக் கிடைக்கலாம்’ என்று சொல்லி அமைதிப்படுத்தியது மாநிலத் தலைமை. ஆனால், அதுவும் வெற்று வாக்குறுதி என்பதை அறிந்து கடும் அப்செட்டில் இருக்கிறார் துரைசாமி.

இவர்களைப்போலவே, 2020-ல் பா.ஜ.க-வில் இணைந்த குஷ்புவும் அதிருப்தியில் தான் இருக்கிறார். ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவருக்கு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அது தன்னை கட்சியிலிருந்து ஓரங்கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்ட பதவி என்று தாமதமாக உணர்ந்த குஷ்பு, அதை உதறிவிட்டு தீவிர அரசியலுக்குள் நுழைந்தார். ஆனாலும், ‘தேசிய செயற்குழு உறுப்பினர் என்ற அலங்காரப் பதவி தான் தனக்கு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, அங்கீகாரப் பதவி ஏதும் வழங்கப்படவில்லை’ என்ற அதிருப்தி மனநிலையிலேயே குஷ்பு இருக்கிறார்.

முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவும் கடும் ஏமாற்றத்தில் இருக்கிறார். விஜயதரணியின் மனநிலையைச் சொல்லவே தேவையில்லை. மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்தும் காங்கிரஸ் கட்சி தனக்கு சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவிகூடத் தர மறுத்த அதிருப்தியில் இருந்த அவரை, ‘உரிய அங்கீகாரம் அளிக்கிறோம்’ எனச் சொல்லித்தான் பா.ஜ.க-வுக்குள் அழைத்து வந்தார் அண்ணாமலை.

அதற்காக, தன்னுடைய விளவங்கோடு எம்.எல்.ஏ பதவியையே ராஜினாமா செய்தார் விஜயதரணி. மத்திய அமைச்சராகி விடும் கனவோடு பா.ஜ.க-வுக்கு வந்தவருக்கு, கன்னியாகுமரி எம்.பி சீட் மட்டுமல்ல, விளவங்கோடு இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ சீட்கூட கொடுக்கப்படவில்லை. இவர்களைப் போலவே தி.மு.க-விலிருந்து வந்த ஏ.ஜி.சம்பத், தன் கட்சியையே பா.ஜ.க-வில் இணைத்த சரத்குமார் போன்றவர்களும் மனக்கசப்பில்தான் இருக்கிறார்கள்.

ஏற்கெனவே, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியை எதிர்பார்த்து ஏமாந்த தடா பெரியசாமி, கடுப்பில் அ.தி.மு.க-வில் இணைந்தார். தனக்கான மரியாதை கிடைக்கவில்லை என்பதால்தான், பா.ஜ.க-விலிருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க-வில் ஐக்கியமாகியிருக்கிறார் மைத்ரேயன். ‘என்ன சொல்லி கட்சியில் சேர்த்தார்களோ, அந்த வாக்குறுதியை பா.ஜ.க தலைமை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டது’ என்கிற வருத்தத்தில் இருக்கும் மற்றவர்களும் அடுத்தடுத்து கட்சி மாறினால் ஆச்சர்யப் படுவதற்கில்லை” என்றனர்.

இது குறித்து பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கூறியதாவது: “மைத்ரேயன் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியில் சென்றிருக்கலாம். சசிகலா புஷ்பாவுக்கு மாநில துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. வி.பி.துரைசாமிக்குப் பெரிய பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு பிற கட்சிகளிலிருந்து வந்த எல்லோருக்கும் பொறுப்புகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. தற்போது பழைய நிர்வாகிகளை மாற்றிவிட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் காலம். இது எல்லோருக்கும் தெரியும் என்பதால், யாரும் அதிருப்தி காரணமாக தவறான முடிவெடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

ஆனாலும், “வரும் டிசம்பர் மாதம் தேசியத் தலைவருக்கான தேர்தல் முடிந்தவுடன், மாநில நிர்வாகிகளும் புதிதாக நியமிக்கப்படுவார்கள். அப்போதும் எங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லையென்றால்...” என்ற அதிருப்தியாளர்களின் கடுகடுப்பால், கலகலத்துப் போயிருக்கிறது கமலாலயம்!

Tags:    

Similar News