ஆடு பகை, குட்டிகள் உறவு..! எடப்பாடியின் ‘பலே’ அரசியல்..!
சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் மூன்று பேரையும் கட்சிக்குள் சேர்க்கவே கூடாது என்பது தான் கட்சியின் நிலைப்பாடு.;
அ.தி.மு.க-வில் பல குழப்பங்கள் ஏற்படக் காரணமாக இருந்தது இந்த மூவர் தான். தர்ம யுத்தம் ஆரம்பித்து, நீதிமன்றப் படியேறி, மீட்புக் குழு அமைத்து, இரட்டை இலைக்கு எதிராகத் தேர்தலில் நின்று தோற்று... என நீண்ட தனது தோல்விப் பயணத்தில், மொத்தமாகவே டயர்டாகிவிட்டார் ஓ.பிஎஸ். ‘மீண்டும் நான் அ.தி.மு.க-வுக்கே வந்து விடுகிறேனே.’ என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் பேசி தொடர்ந்து ஓ.பி.எஸ் தூது விட்டாலும், கொஞ்சம்கூட மனமிறங்கவில்லை இ.பி.எஸ். மனமிரங்கவும் மாட்டார் என்பது வேறு விஷயம். \
‘ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராக இப்படிக் கடுமை காட்டிவரும் இ.பி.எஸ்., அவரின் ஆதரவாளர்களிடம் மட்டும் கனிவு காட்டுவதில் ‘பலே’ அரசியல் செய்கிறார்’ என்கிறார்கள் அ.தி.மு.க-வின் உள்ள அரசியல் அறிந்த புள்ளிகள்.
இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர் அமைப்புச் செயலாளர்கள் சிலர், “ஒற்றைத் தலைமை விவகாரத்துக்குப் பிறகு, அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் கட்சியின் பெயர், சின்னம், கொடி உள்ளிட்ட எதையுமே பயன்படுத்த முடியாதபடி, வழக்குகளால் அவரை இறுக்கி விட்டார் இ.பி.எஸ்.
சட்டமன்றத்தில் தனது பக்கத்து இருக்கையில் இருந்தவரை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பின்னுக்குத் தள்ளி விட்டார். இந்த நிலையில், கலர் பார்டர் வேட்டிக்கு மாறிய ஓ.பி.எஸ்-ஸும், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில்கூட கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார்.
இப்படி, சட்டமன்றத்துக்கு உள்ளேயே வரவிடாதபடி சட்ட நடவடிக்கைகளால் ஓ.பி.எஸ்-ஸை முடக்கிப்போட்ட எடப்பாடி, ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் இதே கடுமையைக் காட்டவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது.
அ.தி.மு.க-வில் நிலவும் எல்லாப்பிரச்னை களுக்கும் காரணம் ஓ.பி.எஸ்-தான். அவர் கட்சியிலிருந்து வெளியேறிய பிறகும்கூட மாறவில்லை. தன்னைப் பற்றி மட்டுமே யோசித்து, மற்றவர்களை நடுத்தெருவில் இழுத்து விடுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில், அவரின் ஆதரவு வட்டத்தினர் ‘பா.ஜ.க-வுடன் கூட்டணி வேண்டாம்’ என்று எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. தன் சுயலாபத்துக்காக பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததோடு, ராமநாதபுரத்தில் போட்டியிட்டு படுதோல்வியும் அடைந்தார்.
இப்படி நாளுக்கு நாள் அவர் எடுக்கும் தவறான முடிவுகளால், அவரது ஆதரவு வட்டமும் நாளுக்கு நாள் சுருங்கிக்கொண்டே போகிறது. இந்த நிலையில், ஓ.பி.எஸ் மீண்டும் அ.தி.மு.க-வுக்கு வந்தால், சுயநலமாகச் செயல்பட ஆரம்பிப்பார். அதனால் இங்கேயும் புதுப் பிரச்னைகள் முளைக்கும். எனவேதான், ‘அவர் வேண்டாம். அவரைத் தவிர யார் வந்தாலும் சேர்க்கத் தயார்’ என்கிறார் இ.பி.எஸ்.
அதேசமயம், ஓ.பி.எஸ்-ஸுக்கு மூளையாக இருந்து வருவது வைத்திலிங்கமும் மனோஜ் பாண்டியனும் தான். அதனால் தான், ஓ.பி.எஸ்-ஸோடு சேர்த்து அவர்களையும் கட்சியிலிருந்து நீக்க, அப்போதே பொதுக்குழுவில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சி விதிப்படி, இந்த மூவரும் தற்போது அ.தி.மு.க இல்லை. அதேசமயம், இவர்கள் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இல்லை எனச் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சட்டமன்றத்துக்குள் இந்தப் பிரச்னையைக் கொண்டு வந்தால், அது மேலும் பல சிக்கல்களை உருவாக்கும். இது தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் இருக்கும் பொதுக்குழு வழக்கும் உயிர்பெற்றுவிட வாய்ப்பு உண்டு.
ஓ.பி.எஸ் ஆதரவாளரான ஐயப்பன் எம்.எல்.ஏ இன்னமும் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்படவில்லை. எனவே, அவர் அ.தி.மு.க கொறடாவுக்குக் கீழ்தான் வருவார். ஆனாலும் அவரை கொறடா கட்டுப்படுத்தவில்லை. அப்படிக் கட்டுப்படுத்தப்போய் பிரச்னை எழுந்தால், இதுதான் வாய்ப்பு என்று ஐயப்பனை தி.மு.க தகுதிநீக்கம் செய்தால், இடைத் தேர்தலுக்கும் வாய்ப்பிருக்கிறது. எதற்குப் பிரச்னை என யோசிக்கிறது தலைமை.
வைத்திலிங்கத்தைப் பொறுத்தவரை டெல்டாவில் முக்கிய முகமாக இருக்கிறார். அவரை அதிகமாகச் சீண்டி பெரிய ஆளாக ஆக்கிவிடக் கூடாது. அதேநேரம் மரியாதை கொடுத்து அவருக்கு முக்கியத்துவம் தந்துவிடக் கூடாது. அவர் பின்னால் தேவைப்படுவார் என்பதில் எடப்பாடி தெளிவாக இருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒற்றைத் தலைமை விவகாரத்திலேயே பெரும் பாதி நேரம் போனதால்தான் கட்சியின் வேகம் தடைப்பட்டது. இந்த நிலையில், ஓ.பி.எஸ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைபோல மற்ற மூவர்மீதும் நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கினால் தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மனதிலும் தேவையில்லாத விமர்சனப் பார்வை உருவாகும். இது, இ.பி.எஸ்-ஸின் பிம்பத்தை பாதிப்பதோடு, 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வையும் பாதிக்கும்.
அதேபோல, பரமக்குடி தர்மருக்கு மாநிலங்களவை சீட் வாங்கிக் கொடுக்க ஓ.பி.எஸ் உறுதியாக இருந்ததால் தான், ஒற்றைத் தலைமை விவகாரமே வெடித்தது. எனவே, `அந்த தர்மரை நம் பக்கம் இழுத்து விட்டால், எல்லாம் ஒரேயடியாக ஓய்ந்து விடும்’ என்பது எடப்பாடியின் எண்ணம். அதனால்தான், நான்காவது நபரான தர்மரைக் கட்சியிலிருந்து இன்னும் நீக்கவில்லை. ஒருவேளை இந்த நால்வரும் தேவையில்லை என்று எடப்பாடி எண்ணினால், அடுத்த கணமே நடவடிக்கையில் இறங்கி விடுவார்” என்றனர் விரிவாக.
இந்த விவகாரம் தொடர்பாக மனோஜ் பாண்டியன் கூறுகையில் “கட்சியிலிருந்து எங்களை நீக்கம் செய்தது, பொதுக்குழு விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து வழக்கு நடைபெற்று வருகிறது. சட்டப்படி அதை எதிர்கொண்டு வருகிறோம். இந்த நிலையில், ‘நான் எடப்பாடி பக்கம் சென்று விடுவேன்’ என்று இதுவரை யாருமே சொன்னதில்லை. அந்த அளவுக்கு அண்ணன் ஓ.பி.எஸ்-ஸுடன் உறுதியாக இருக்கிறேன்” என்றார் சுருக்கமாக.
முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் கூறுகையில், “சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் மூன்று பேரையும் கட்சிக்குள் சேர்க்கவே கூடாது என்பது தான் கட்சியின் நிலைப்பாடு. அ.தி.மு.க-வில் பல குழப்பங்கள் ஏற்படக் காரணமாக இருந்தது இந்த மூவர் தான். இவர்கள் தவிர்த்து, மீதமுள்ளவர்களை அந்த மூவருடன் ஒப்பிட முடியாது. மற்றவர்கள், தங்களின் தவறை உணர்ந்து பொதுச் செயலாளரிடம் கடிதம் கொடுத்து விட்டு எப்போது வேண்டுமானாலும் கட்சியில் சேரலாம்” என்றார் சூசகமாக.
ஆக ஆடு பகையும் உறுதி. குட்டிகளுடன் உறவு என்பதும் கன்ஃபர்ம். எப்படி எடப்பாடியின் அரசியல் பார்முலா சூப்பர் என கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.