அ.தி.மு.க இனி என்னவாகும்? அடம் பிடிக்கும் எடப்பாடி..! சினத்தில் சீனியர்கள்..!
‘ஒருகாலத்தில், கூட்டணி இல்லாமலேயே ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.
இனி கூட்டணி அமைத்தால்தான் வெற்றி பெற முடியும் என்கிற நெருக்கடி அதிமுகவுக்கு உருவாகிவிட்டது. அந்த அளவுக்குக் கட்சி தேய்ந்ததற்கு யார் காரணம்..?'
தமிழ்நாட்டில் முக்கியமான ஒரு தொகுதி இடைத்தேர்தல் நடக்கும்போது, பிரதான எதிர்க்கட்சி அதைப் புறக்கணித்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்துமா? அ.தி.மு.க அதைச் செய்தது. கடந்த 25 ஆண்டுகளாகவே இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சி அதிகார துஷ்பிரயோகம் செய்து வெற்றி பெறும் களமாகவே மாறிப்போயிருந்தாலும், எதிர்க்கட்சி அதைப் புறக்கணிப்பது என்பது அதிர்ச்சியான விஷயம்.
அதிலும் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகளை விட அ.தி.மு.க வெறும் 7,000 வாக்குகள் மட்டுமே பின்தங்கி இருந்தது. ஆனாலும், மூன்றே மாதங்களில் நடந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்தது. இந்தச் சூழலில் நடைபெறும் ஆய்வுக்கூட்டம், அ.தி.மு.க இனி என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
‘இடைத்தேர்தல் புறக்கணிப்பால் மடைமாறிய அ.தி.மு.க வாக்குகள்', ‘நாடாளுமன்றத் தொகுதி ஆய்வுக் கூட்டத்தில் சலசலப்பு' என அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளால் மொத்தமாகவே குழம்பிப்போய் நிற்கிறது அ.தி.மு.க கூடாரம். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் ரொம்பவே திணறிப்போயிருக்கிறார் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி.
‘‘அ.தி.மு.க என்பது ஒரு எஃகுக்கோட்டை. தலைமை எடுக்கும் முடிவை மீறி யாரும் செயல்பட்டதும் இல்லை, குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் பதவியில் தொடர்ந்ததும் இல்லை. ஆனால், ‘நீங்க செய்றது தப்புங்க...' என எடப்பாடியை எதிர்த்துக் கட்சி சீனியர்கள் ஆறு பேர் கொடி பிடித்திருக்கிறார்கள்.
‘பிரிந்துசென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும்' என இணைப்பை வலியுறுத்துகிறார்கள். அவர்கள் மீது எடப்பாடியால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. அந்த அளவில் தான், கட்சியின் கட்டுப்பாடு அவர் கன்ட்ரோலில் இருக்கிறது. ‘கட்சி இனி என்னாகுமோ...' என்கிற பதைபதைப்பு தொண்டர்களுக்கு வந்துவிட்டது’’ என்கிறார்கள் இலைக்கட்சியின் சீனியர் புள்ளிகளே.
என்னதான் நடக்கிறது அ.தி.மு.க-வில்? விரிவாகவே விசாரித்தோம்.
அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென்கிற குரல், கட்சிக்குள் முணுமுணுப்பாக எழுவதும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி பேட்டிகளுக்குப் பிறகு அந்தக் குரல்கள் அடங்குவதும் தொடர்கதைதான். முதல்முறையாக, அந்த முணுமுணுப்புகளை கட்சித் தலைமை வரை கொண்டுபோயிருக்கிறார்கள் சீனியர்கள் ஆறு பேர். கடந்த ஜூலை 8-ம் தேதி, சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் அவரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இதுகுறித்து விவரமறிந்த அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 35 தொகுதிகளில் இரட்டை இலை போட்டியிட்டது. அதில், ஏழு தொகுதிகளில் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்திருக்கிறார்கள். தென்மாவட்டங்களில்தான் கட்சிக்குப் பெருத்த அடி. அதையெல்லாம் கணக்கிட்டுத்தான், ‘இணைப்பு அவசியம்' என்பதை வலியுறுத்த, கட்சி சீனியர்கள் எடப்பாடியைச் சந்தித்துப் பேசினர்.
முதலில், நத்தம் விஸ்வநாதன்தான் பேச்சைத் தொடங்கியிருக்கிறார். ‘தொண்டர்களும், கிளைக்கழகச் செயலாளர்களும் ரொம்ப சோர்வடைஞ்சு போய்ட்டாங்க. தென்மாவட்டங்கள் முழுவதும், முக்குலத்தோர் சமூகத்திற்கு நீங்க எதிரானவர் போன்ற தோற்றம் வந்துடுச்சு. அதைச் சரிசெய்யலைன்னா, 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது ரொம்பவும் கஷ்டமாகிடும்.
‘பிரிந்தவர்கள் ஒன்றுசேர வாருங்கள்'னு ஒரு அறிக்கை வெளியிடுங்க. மத்ததை பிறகு பார்த்துக்கலாம்’ என்று நத்தம் சொல்லி முடிக்கவும், டென்ஷனாகியிருக்கிறார் எடப்பாடி. ‘கட்சியிலிருந்து யாருங்க பிரிஞ்சுபோனது? பன்னீரும் சசிகலாவும் கட்சிக்கு துரோகம் செஞ்சவங்க... அவங்க பின்னாடி எந்தத் தொண்டன் இருக்கான்? பொதுக்குழு கூடிதானே அவங்களை நீக்க முடிவெடுத்திருக்கு. அவங்களை மீண்டும் கட்சிக்குள்ள இணைக்க தொண்டர்கள் யாரும் விரும்ப மாட்டாங்க...' எனப் படபடத்திருக்கிறார்.
இடைமறித்த சி.வி.சண்முகம், ‘ஏன் இவ்வளவு டென்ஷனாகுறீங்க? சசிகலா, பன்னீரை இணைக்கச் சொல்லி யாரும் உங்களைக் கேட்கல. பொதுவாக ஒரு அறிக்கை வெளியிடுங்க. உங்க தலைமையை ஏத்துக்கிட்டு வர்றவங்க வரட்டும். நீங்க குறுக்கே நிக்காதீங்கன்னுதான் சொல்றோம்.
உங்க சுயவிருப்பத்தையெல்லாம் ஓரங்கட்டி வெச்சுட்டு, கட்சி நலனுக்காக யோசிங்க. இந்த நாடாளுமன்றத் தேர்தல்ல, தென்மாவட்டங்கள்ல இருக்குற 17 சட்டமன்றத் தொகுதிகள்ல 20,000 வாக்குகள்கூட நாம வாங்கல. சுயேச்சை சின்னத்தை வெச்சுக்கிட்டு, ராமநாதபுரம் தொகுதியில பன்னீரு இரண்டாமிடம் போய்ட்டாரு. அங்க, நம்மளால டெபாசிட்கூட வாங்க முடியல. இதேநிலைமை நீடிச்சுதுன்னா, கட்சி காணாமப் போய்டும்' என வெடித்திருக்கிறார்.
கே.பி.அன்பழகனும் தங்கமணியும் சண்முகத்தின் கருத்தை ஆமோதித்திருக்கிறார்கள். ஆனால், விடாப்படியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, ‘ஏம்பா... அம்மா இருந்தபோதே, 2004 நாடாளுமன்றத் தேர்தல்ல ஒரு தொகுதியிலகூட நாம வெற்றி பெறலை. பிறகு நாம மீண்டு வரலையா..?' எனக் கேட்டதும், வேலுமணி பதிலுக்குப் பேசியிருக்கிறார்.
‘2004 தேர்தல்ல ஒரு தொகுதியிலகூட நாம வெற்றி பெறலைதான். ஆனால், அப்ப 33 தொகுதியில போட்டியிட்டு 35.7 சதவிகித வாக்குகளை வாங்கினோம். இந்தமுறை 35 தொகுதியில போட்டியிட்டும் நம்மளால 20.7 சதவிகித வாக்குகளைத்தான் வாங்க முடிஞ்சிருக்கு. நம்மோட வாக்குவங்கி கரைஞ்சிருக்கு. கட்சியிலிருந்து சசிகலா, பன்னீரை நீக்க பொதுக்குழு கூடி முடிவெடுத்ததுன்னு சொல்லாதீங்க.
இதே பொதுக்குழுதான் ஒருகாலத்துல சசிகலாவை தற்காலிக பொதுச் செயலாளராக நியமிச்சது. பின்னாடி நீக்கியது. கட்சியை பலப்படுத்தணும்னா, பிரிந்தவர்களை ஒன்றுசேர்க்கணும். அதுக்கு நீங்க சம்மதிக்கணும்' என ஒரே போடாகப் போட்டிருக்கிறார்.
இறுதியாகப் பேசிய செங்கோட்டையன், ‘நம்ம காலத்துல இந்தக் கட்சி அழிஞ்சு போய்டுச்சுனு வரலாறுல பேசிடக்கூடாது. அதை மனசுல வெச்சுக்கிட்டு முடிவெடுங்க. என் அரசியல் வாழ்க்கையில பல சங்கடங்களை உருவாக்கியதே சசிகலாதான். அதையெல்லாம் மறந்துட்டுத்தான் நானே இணைப்பு அவசியம்னு சொல்றேன். உங்க தலைமையை ஏத்துக்கிட்டு யார் வர்றதா இருந்தாலும் வரட்டும். நீங்கதான் பொதுச் செயலாளர், நீங்கதான் அடுத்த சி.எம். அதுல எந்த மாற்றமும் இல்ல' என்றிருக்கிறார்.
அனைத்தையும் கேட்டுக்கொண்ட எடப்பாடி, ‘கட்சிக்கு துரோகம் செஞ்சு வெளியேற்றப்பட்டவங்களை மீண்டும் இணைக்குறதுல எனக்கு உடன்பாடு இல்லை. குறிப்பாக பன்னீர், சசிகலா, தினகரனுக்கு இங்க இடமே இல்ல. இந்தப் பேச்சை இதோட நிறுத்திக்கலாம்னு நான் நினைக்குறேன்' என்று முற்றுப்புள்ளி வைக்க முயலவும், ‘நீங்க யோசிங்கண்ணே. இன்னைக்கே முடிவை எடுக்க வேண்டாம். நாங்க திரும்ப வர்றோம். நல்ல பதிலா சொல்லுங்க' என்றபடி கிளம்பியிருக்கிறார்கள் ஆறு சீனியர்களும்.
அம்மா உயிருடன் இருந்தபோது, அவரது கருத்துக்கு எதிர்க்கருத்தை யாரும் துணிச்சலாகச் சொன்னதில்லை. எதிர்க்கருத்து இருந்தாலும்கூட, பக்குவமாக, நேரமறிந்து, வார்த்தைகள் அறிந்துதான் சீனியர்கள் பேசுவார்கள். ஆனால், எடப்பாடியிடம் ‘நீங்க செய்றது தப்புங்க...' என முகத்தில் அடித்ததுபோல பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் அந்த ஆறு சீனியர்களும்.
அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் முடியாமல், அவர்களின் கருத்துகளை ஏற்கவும் முடியாமல் திணறிப்போயிருக்கிறார் எடப்பாடி. பொதுச் செயலாளராக இருந்தாலும், கட்சி அவரது முழுக் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பது முதல்முறையாக வெடித்து வெளிவந்திருக்கிறது. எடப்பாடியுடன் பேச்சு வார்த்தையை நடத்திவிட்டு வந்தவுடன், சி.வி.சண்முகத்திற்குப் போன் போட்ட டெல்டா சீனியர்கள் சிலர், ‘எங்களையும் கூட்டிக்கிட்டுப் போயிருக்கலாமே... எங்க மனசுல இருக்குறதையும் சொல்லியிருப்போமே' எனச் சொன்னார்கள். இதிலிருந்தே, கட்சிக்குள் எடப்பாடிக்கு எதிரான மனக்குமுறல் வீரியமடைவது தெரிகிறது’’ என்றனர்.