தமிழகத்தில் பா.ஜ.க.,வுக்கு சாதகமான சூழல் என்ன?
பிரதமர் மோடி பங்கேற்ற பல்லடம் கூட்டமும், சென்னை கூட்டமும் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
பிரதமர் மோடி கலந்து கொண்ட பல்லடம் பொதுக்கூட்டம் மற்றும் சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் என இந்த இரண்டு கூட்டங்களிலும் பங்கேற்ற மக்கள் பிரியாணி, குவாட்டர், தலைக்கு 200 முதல் ஐநுாறு ரூபாய் என கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம் இல்லை. தானாக வந்த கூட்டம். இத்தனை லட்சம் பேர் கூடிய கூட்டத்தில் ஒருவர் கூட மது அருந்தவில்லை என பா.ஜ.க.,வினர் பொங்கி வருகின்றனர். உண்மையில் இந்த கூட்டம் சிறப்பானது என்றாலும், அதில் கட்சியினர் மட்டும் பங்கேற்றனரா? மக்களும் பங்கேற்றார்களா? என உளவுத்துறையினர் பரபரக்க கணக்கெடுத்து வருகின்றனர்.
இதில் இரண்டு இடங்களிலும் பொதுமக்களும் அதிகளவில் பங்கேற்றதும் தெரியவந்துள்ளது. மெல்ல... மெல்ல... தமிழகத்தில் உயர்ந்து வந்த பா.ஜ.க.,வின் செல்வாக்கு திடீரென பொங்கி பெருக என்ன காரணம் என அரசியல் விமர்சகர்கள் விவாதித்து வருகின்றனர். அதில் பிரசாத் கிஷோர் கூறிய சில தகவல்கள் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இப்போது நடைபெறும் தேர்தல் பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல். இப்போது வரை பிரதமர் மோடிக்கு மாற்றாக வேறு ஒருவரை இன்டியா கூட்டணியாலும் காட்ட முடியவில்லை. அ.தி.மு.க., திசைமாறி சென்ற குழந்தை போல் பரிதவித்து வருகிறது. என்ன சொல்ல ஓட்டு கேட்பது என்றே அ.தி.மு.க.,விற்கு புரியவில்லை.
தி.மு.க.,வும் தனது பிரதான எதிரியாக அ.தி.மு.க.,வை தான் முன் நிறுத்தி உள்ளது. இது தான் தி.மு.க.,வின் மிகப்பெரிய மைனஸ். காரணம் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,- அ.தி.மு.க., மோதிக்கொள்ளலாம். ஆனால் தற்போது நடப்பது லோக்சபா தேர்தல். இதில் பிரதமர் மோடியை மாற்றி வேறு ஒருவரை கொண்டு வர என்ன காரணம் என்பதை தெளிவாக தி.மு.க.,வால் மக்களிடம் எடுத்துக் கூற முடியவில்லை. என்ன சொல்லி ஓட்டு கேட்பார்கள். சனாதனத்தை பற்றி பேசுவது இனி எடுபடாது. தவிர வரும் மகாசிவராத்திரிக்கு பொதுவிடுமுறை விடலாமா என தி.மு.க.,வே யோசிக்கும் அளவுக்கு இந்துக்கள் மத்தியில் ஒற்றுமை பெருகி வருகிறது.
தவிர அண்ணாமலை என்ற ஒரு அசுர சக்தி மக்களிடம் மிகவும் எளிமையாக ஊடுறுவுகிறது. பா.ஜ.க., தலைவர்கள் மக்களை மிகவும் எளிதில் அணுகுகிறார்கள். ஆனால் தி.மு.க., அ.தி.மு.க., தலைவர்களிடம் அப்படி ஒரு பழக்கம் உருவாகவில்லை. மாறாக இந்த இரு கட்சிகளும் தங்களது கட்சி உள்கட்டமைப்புகளை நம்பியிருக்கின்றன.
அ.தி.மு.க.,வின் உள்கட்டமைப்பு கடுமையாக சிதைந்து வருகிறது. அ.தி.மு.க.,வின் ஒட்டுகள் பா.ஜ.க.,வை நோக்கி திரும்பி வருகிறது. இதனை இந்தியாவின் அரசியல் வியூக வகுப்பாளர்களே வெளிப்படையாக கூறியுள்ளனர். தி.மு.க., தனது கூட்டணி கட்சிகளின் பலம், நலத்திட்டங்களின் மூலம் கிடைக்கும் ஓட்டுகள் என பல்வேறு கணக்கீடுகள் வைத்துள்ளது. இருப்பினும் சட்டசபை தேர்தலுக்கு இந்த கணக்கீடுகள் உதவும். ஆனால் லோக்சபா தேர்தலுக்கு உதவுமா என்பது சந்தேகம் தான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.