“அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
அ.தி.மு.க., நிர்வாகிகள் தலைமை கேட்ட விவரங்களை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.;
“நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, பூத்வாரியாக எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்ற விவரங்களைத் தாக்கல் செய்யச் சொல்லி, ஒவ்வொரு தொகுதிப் பொறுப்பாளருக்கும் தலைமையிலிருந்து உத்தரவு பறந்திருக்கிறது. ஆனால், அதை யாருமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சிலர் தொடர்பு எல்லைக்குள்ளேயே வரவில்லையாம். `தேர்தல் ரிசல்ட் வந்த பின்னர் தான் லிஸ்ட் வரும் போலத் தெரிகிறது’ எனப் புலம்புகிறார்கள் தலைமைக் கழகத்தில்.”
“ஐயோ பாவம்... விளம்பர விவகாரத்திலும் ஏதோ சலசலப்பு என்றார்களே?”
“உண்மைதான். இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு ‘தேர்தல் விளம்பரக்குழு’ என்ற குழுவை அமைத்திருந்தார்கள் அல்லவா... அவர்கள் தரப்பிலிருந்து, ‘பத்திரிகைகள், தொலைக்காட்சி, டிஜிட்டல் மீடியாக்கள், பாடல்கள் என அனைத்துத் தளங்களிலும் செய்யப்பட்ட விளம்பரத்துக்காக மொத்தம் 52 ஸ்வீட் பாக்ஸுகள் வரை செலவு செய்யப் பட்டிருக்கிறது’ எனக் காட்டிய கணக்குதான் அந்தச் சலசலப்புக்குக் காரணமாம்.
கணக்கு ஃபைலைப் பார்த்த எடப்பாடி, குழுவுக்குப் பொறுப்பாக இருந்த மாஜியை அழைத்து, ‘அப்படி என்னதான் விளம்பரம் செய்தீர்கள்?’ எனக் கேட்க, அவரிடமிருந்து சரியான பதில் வரவில்லையாம். அவர் தாக்கல் செய்த பில்களும் தலைமைக்குத் திருப்தியாக இல்லையாம். எனவே, தேர்தலுக்காக உண்மையிலேயே எவ்வளவு செலவானது என்று விசாரிக்க ரகசியக்குழு ஒன்றை அமைத்து விட்டு, கேரளாவுக்குப் போய் விட்டாராம் எடப்பாடி.