ஒரே நாடு, ஒரே தேர்தல் இபிஎஸ்,ஓபிஎஸ் ஆதரவு..!
ஒரே நாடு ஒரே தேர்தல் முடிவுக்கு, அதிமுக தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள என்ன காரணம்?;
அரசியல் களத்தில் இதன் தாக்கங்கள் என்னவாக இருக்கும்? "ஒரு நாடு ஒரே தேர்தல்" என்ற விவகாரம் மீண்டும் முளைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் என இரு தரப்பிலான கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மத்திய பாஜக அரசு இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை முன்னெடுத்தால், தேர்தல் செலவு குறையும் என்று காரணம் சொல்லப்படுகிறது. அத்துடன், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையானது வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது.
மற்றொருபுறம் இதற்கு எதிர்ப்பு எழுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டுவந்தால், மக்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பதாகிவிடும். தேர்தலுக்காக செலவுசெய்யப்பட்ட மக்களின் வரிப்பணமும் வீணாகும் என்பதால், இதை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள்.
எதிர்ப்பு: இப்படிப்பட்ட சூழலில் தான், அதிமுக தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ஆதரவு தந்துள்ளது. இதனால், தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் குறைக்கப்படும் என்று நம்புகிறது. கடந்த 2018ல், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' விவகாரம் தொடர்பாக சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு, அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
டெல்லியில் நடைபெற்ற சட்ட ஆணையக் கூட்டத்திற்கு சென்று, மூத்த தலைவர்கள் தம்பிதுரை, சிவி சண்முகம் இருவருமே பங்கேற்று, இந்த எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு வந்தார்கள். அத்துடன், 2024-ல் வேண்டுமானால் லோக்சபா, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். அப்போது மத்திய அரசை ஆதரிப்போம் என்றும் அதிமுக சொல்லிவிட்டு வந்தது.
ஆதரவு கரம்: ஆனால், நேற்று அதிமுக, இந்த திட்டத்துக்கு ஆதரவை வழங்கியிருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து சில அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது:
"பாஜக பக்கம் மொத்தமாகவே எடப்பாடி சாய்ந்து விட்டார். எதுக்கெடுத்தாலும், பாஜகவுக்கு ஓடோடி சென்று ஆதரவு வழங்கி வருகிறார். ஓபிஎஸ்ஸோ இன்னும் இது குறித்து ஆதரவு தெரிவித்தாலும், எடப்பாடி அளவுக்கு பிரசாரம் செய்வது போல் பேசவில்லை. பாஜக பக்கம் எடப்பாடி சாயும் சூழல் வந்து விட்டது.
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஓபிஎஸ், புரட்சி பயணத்தை துவங்கப் போகிறார். புது கட்சி துவங்கப் போவதாகவும் சொல்கிறார்கள். இந்த நேரத்தில், ஓபிஎஸ் மீதான கோபத்தை அதிகப்படுத்தி, தன் மீதான பாஜகவின் கவனத்தை திருப்புவதற்காகவே, எடப்பாடி பழனிசாமி, இந்த ஆதரவை தந்திருப்பதாகவும் தெரிகிறது. பாஜகவை விட்டு ஓபிஎஸ் மெல்ல மெல்ல விலகி வருகிறார். ஆனால், எடப்பாடியோ, பாஜக ஆதரவாளராகவே மாறிவிட்டார். இதை அதிமுக தொண்டர்களும் கவனித்துகொண்டுதான் இருக்கிறார்கள் " என்றனர்.
விவாதங்கள்: இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறை, சோஷியல் மீடியாவில் பலத்த விவாதத்தை கிளப்பிவிட்டுவருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு, 5 வருடங்கள் என்பதற்கான உத்தரவாதம் இருக்குமா? மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும், ஒரு கட்சி தன்னுடைய மெஜாரிட்டியை இழந்துவிட்டால், அடுத்த 5 ஆண்டு, தேர்தல் சுழற்சி வரும் வரை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தும் சூழலை உருவாக்கிடுவது சரியா? என்றெல்லாம் விவாதங்கள் வலுத்து வருகின்றன.
அதுமட்டுமல்ல, 2024ல் எம்பி தேர்தலோடு சேர்ந்து சட்டமன்ற தேர்தல்கள் நடத்துவது என்று முடிவானால், மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்படுமா? இதற்கு மற்ற மாநில அரசுகள் ஒப்புக் கொள்ளுமா? அல்லது மாநில அரசை, தேர்ந்தெடுத்த அந்தந்த மாநில மக்கள் இதை ஒப்புக்கொள்வார்களா? என்றெல்லாம் தெரியவில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம்.(வழக்கம் போல இதை சொல்லி நாம் எப்படியோ தப்பித்து வருகிறோம்)