விஜய் மன்றத்துக்கு 'ஷாக்' தந்த தேர்தல் கமிஷன்: ஏமாற்றத்தில் ரசிகர்கள்
உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு, ஆட்டோ சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக, பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறை, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றனர்.
இதையடுத்து, தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட விரும்பினர். இதற்கு, நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளார். அத்துடன், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து, மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார்.
இது ஒருபுறம் இருக்க, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு பொதுவான சின்னமாக, ஆட்டோ சின்னத்தை ஒதுக்க வேண்டுமென்று, தேர்தல் ஆணையத்திடம், விஜய் மன்றம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இக்கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.
இது தொடர்பாக, விஜய் தரப்புக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே, பொதுவான சின்னத்தை ஒதுக்க முடியும் என்று பதிலில் கூறப்பட்டுள்ளது. இதனால், விஜய் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.