பா.ஜ.க.,வை எதிர்ப்பதற்காக தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டு?
பா.ஜ.க.,வை எதிர்ப்பதற்காக தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ஒரே நோக்கத்தில் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.;
எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற வகையில், இபிஎஸ்ஸுக்கு பக்கத்து இருக்கையை ஓபிஎஸ்ஸிடம் இருந்து மாற்றி, ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் சுமார் 2 ஆண்டுகளாக அதிமுக தரப்பு கோரி வந்தது. இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தற்போதைய கூட்டத்தொடரில் கடந்த 13-ம் தேதியும் இதே கோரிக்கையை பழனிசாமி வைக்க, முதல்வர் ஸ்டாலின் எழுந்து, ‘‘எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்.
அவரது கோரிக்கையை மறுபரிசீலனை செய்து, அதற்கு ஆவண செய்யுமாறு தங்களிடம் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று சபாநாயகரிடம் தெரிவித்தார்.
அடுத்த நாளே, பேரவையில் இருக்கைகள் மாற்றப்பட்டன. எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் அருகே ஆர்.பி.உதயகுமார் அமர, அங்கு ஏற்கெனவே அமர்ந்திருந்த ஓபிஎஸ்ஸுக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. ‘‘மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தான் நிச்சயம் வெற்றி பெறும்.
மோடி 3-வது முறையாக பிரதமராக வருவார். நாங்கள் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறோம்’’ என்று ஓபிஎஸ் தொடர்ந்து கூறிவருகிறார். அவர் பின்வரிசைக்கு மாற்றப்பட்டதை, இதனுடன் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு வா.புகழேந்தி கூறும்போது, ‘‘பேரவையில் தற்போது இருக்கை மாற்றி வழங்கப்பட்டுள்ளது. பல புகார்கள், குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பழனிசாமி மீது நடவடிக்கை எடுப்பதில்லை. கோடநாடு வழக்கிலும் விசாரணை இல்லை. அவருக்கு தேவையான அத்தனை வசதிகளையும் திமுக அரசு செய்து தருகிறது. திமுகவின் பி-டீம் என்று ஓபிஎஸ் தரப்பினரை கூறிவந்தனர். ஆனால், திமுகவின் உண்மையான பி-டீம் யாரென்று இப்போது தெரியவந்திருக்கிறது’’ என்றார்.
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் கடந்த 14ம் தேதி 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான தீர்மானத்தை அதிமுக ஆதரித்தது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்த தீர்மானத்தில், தங்களது பரிந்துரைகளை மத்திய ஆணையம் ஏற்பதை பொருத்து ஆதரவு தெரிவிப்போம் என்று கூறியது.
சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் தொடர்பாக பேரவையில் பேசிய பழனிசாமி, ‘‘சிறு சிறு வசதிகளை சரிசெய்து திறந்திருந்தால், பிரச்சினைகள் எழுந்திருக்காது’’ என்றார். இதற்கு பதில் அளித்த முதல்வரோ, ‘‘இன்னும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், நேரடியாக வாருங்கள் சொல்லுங்கள் தீர்த்து வைக்க காத்திருக்கிறோம்’’ என்று தெரிவித்தார். தலைவர்கள் இவ்வாறு ‘மென்மையாக’ விவாதம் நடத்தியது மக்களிடம் பேசுபொருளானது.
நாம் மூன்றாவது இடத்துக்குப் போய்விடக் கூடாது என்ற நோக்கில் அதிமுகவும், தனக்குப் பிரதான எதிர்க்கட்சியாக வந்துவிடக் கூடாது என்று திமுகவும் பாஜகவை எதிர்ப்பதில் மையப் புள்ளியில் இணைகின்றன. மொத்தத்தில் தமிழகத்தில் பாஜகவை வ(ள)ரவிடக்கூடாது என்ற ஒருமித்த கருத்துடன், வருங்காலத்தில் இருபெரும் திராவிட கட்சிகளும் ஓரணியில் சேரவும் வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் விமர்சகர்கள்.
‘பாஜகவை தமிழகத்துக்கு உள்ளேயே விடக்கூடாது. அதிமுக நமக்கு பங்காளி. பாஜக பகையாளி’ என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஒரு கூட்டத்தில் வெளிப்படையாக பேசியதும் இந்தக் கருத்தை வலுப்படுத்துகிறது.