இணைப்புக்குப் பேசுற மாதிரி தெரியல : என்னதான் நடக்கிறது அ.தி.மு.க-வுக்குள்..?
தனது 53-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் அ.தி.மு.க., தமிழ்நாட்டைக் கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் ஆண்டிருக்கிறது.;
அதிமுக எனும் மாபெரும் இயக்கம் எண்ணற்றச் சமூக நலத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. பல அரசியல் ஆளுமைகளை உருவாக்கியிருக்கிறது. இதையெல்லாம் முன்வைத்து, விழா எடுத்துக் கொண்டாடத் தொண்டர்களும் நிர்வாகிகளும் தயாராகி வரும் சூழலில், சீனியர்கள் மத்தியில் நடக்கும் ‘ரகசிய’ ஆலோசனைக் கூட்டங்கள் கட்சிக்குள் ரணகளத்தை உருவாக்கியிருக்கின்றன.
இணைப்பு தொடர்பாக நடக்கும் இப்படியான ஆலோசனைக் கூட்டங்களில் வாக்குவாதம் முற்றி, வார்த்தைகள் தடிக்கின்றன. ஆளாளுக்கு ஒரு திசையை நோக்கிக் கட்சியை இழுத்துச் செல்ல முயல்வதால், கடும் மனக்கசப்புகள் உருவாகியிருக்கின்றன. அந்த மனக்கசப்புகளை மேலும் பெரிதாக்கி, கட்சிக்குள் விரிசலை உண்டாக்க சில சக்திகள் முயல்கின்றன” என்கின்றார்கள் அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களும், இரண்டாம்கட்டத் தலைவர்களும்.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தொகுதிவாரியாக ஆலோசனைக் கூட்டங்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய போது, கட்சியின் கீழ்மட்டத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் நிலவுவதை, பெரும்பாலான நிர்வாகிகளும் எடுத்துச் சொன்னார்கள்.
அதோடு, “கட்சி பிரிந்துகிடப்பதாக, தொண்டர்களும் மக்களும் எண்ணுகிறார்கள். அதைச் சரிசெய்தே ஆக வேண்டும்” என்கிற கருத்தையும் முன்வைத்தார்கள். அதற்கிடையேதான், பிரிந்துகிடப்பவர்களை ஒன்றிணைத்து மீண்டும் பேரியக்கமாகக் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த, கடந்த ஜூலை 7-ம் தேதி சேலத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார்கள் ஆறு சீனியர்கள்.
முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகிய அந்த ஆறு சீனியர்களுமே, “பிரிந்தவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர, ஓர் அறிக்கை மட்டும் விட்டால் போதும்” என்கிற கோரிக்கையை எடப்பாடியிடம் முன்வைத்தனர்.
ஆனால், “இணைப்புக்கு ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பே இல்லை” எனத் திட்டவட்டமாக மறுத்து விட்டார் எடப்பாடி. அவரை சீனியர்கள் சந்தித்ததும், இணைப்பு குறித்து வலியுறுத்தியதும் கட்சி வட்டாரத்தில் காட்டுத்தீயாகப் பரவவும், தலைமையின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் விவாதமே நடந்தது.
இந்தச் சூழலில்தான், இணைப்பு தொடர்பாக மீண்டும் ஆலோசனைக் கூட்டம் ‘செவ்வந்தி இல்ல’த்தில் நடந்ததாகச் சொல்கிறது இலைக் கட்சி வட்டாரம்.
அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் கூறுகையில், “சமீபத்தில், அ.தி.மு.க ஐடி விங் நிர்வாகிகள் கூட்டம் எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கட்சியின் சீனியர்களும், மூத்த நிர்வாகிகளும் ஒன்றாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். விஷயம் அதுவல்ல, அந்த நிகழ்வுக்கு முன்தினம், சென்னையிலுள்ள எடப்பாடி பழனிசாமியின் செவ்வந்தி இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம்தான் விவகாரமே!
முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, நத்தம் விசுவநாதன் உட்பட சீனியர்கள் சிலர் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க-வுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை வேகப்படுத்துவது குறித்துப் பேசியிருக்கிறார் எடப்பாடி. மதுரையில் புரட்சித்தலைவி பேரவை சார்பாக நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டம், சொத்து வரி உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெறும் மனிதச் சங்கிலிப் போராட்டம் குறித்தெல்லாம் விவாதித்திருக்கிறார்கள். தி.மு.க ஆட்சியிலிருந்து, அ.தி.மு.க உள் விவகாரம் தொடர்பாகப் பேச்சு திரும்பியிருக்கிறது.
‘இணைப்பு தொடர்பாக என்னண்ணே முடிவு பண்ணியிருக்கீங்க..?’ என வேலுமணி கேட்டதுதான் தாமதம், எடப்பாடியின் முகம் இருண்டிருக்கிறது. சற்று நேரம் அமைதியாக இருந்தவர், ‘அதான் பலமுறை சொல்லிட்டேனேப்பா. அதுக்குமேல பேசுறதுக்கு என்ன இருக்கு..?’ எனச் சிடுசிடுத்திருக்கிறார் எடப்பாடி. விடாத வேலுமணி, ‘2026 சட்டமன்றத் தேர்தல் நாம நினைக்குறது மாதிரி அமையும்னு சொல்ல முடியாது.
நாம பலமா இருந்து, கட்சி ஓட்டுகளும் சிந்தாம, சிதறாம நமக்கு விழுந்தாத்தான் நாம நினைச்சது நடக்கும். தவிர, நாம ஒற்றுமையா இருந்தாத்தான் வலுவான கூட்டணியும் அமையும். இணைஞ்சு செயல்பட்டாத்தான் எல்லாருக்கும் நல்லது. நீங்கதான் நல்ல முடிவா எடுக்கணும்...’ எனப் பேசிக்கொண்டிருக்கும்போதே, கடுப்பாகி எழுந்திருக்கிறார் எடப்பாடி.
‘இணைப்பு தொடர்பா என்னுடைய கருத்தை நான் தெளிவா சொல்லிட்டேன். நீங்க இணைப்புக்குப் பேசுற மாதிரி தெரியல... பிரிக்கிறதுக்குப் பேசுற மாதிரி இருக்கு. என்னைய காலிபண்ணப் பாக்குறீங்களா... பொதுச்செயலாளரா நான் இருக்குற வரைக்கும் இணைப்புங்கற பேச்சுக்கே இடம் கிடையாது...’ என ஆவேசமாகியிருக்கிறார்.
வேலுமணியும் நத்தம் விசுவநாதனும் குறிக்கிட்டு, ‘நாங்க சொல்ல வந்ததையே டோட்டலா தப்பாப் புரிஞ்சுக்கிறீங்க... உங்க தலைமையை நாங்க எதிர்க்கவே இல்லையே...’ என விளக்கமளிக்க முயன்றபோதும், அதைக் கேட்க விரும்பாமல், `விருட்’டென எழுந்து தன் அறைக்குள் சென்றிருக்கிறார் எடப்பாடி. வேறு வழியின்றி, அங்கிருந்து டென்ஷனில் கிளம்பிச் சென்றிருக்கிறார்கள் சீனியர்கள்.
சமீபகாலமாக, எடப்பாடியின் நடவடிக்கைகள்மீது சீனியர்களுக்குக் கடுமையான வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. மது ஒழிப்பு விவகாரத்தில் அவர் நினைத்திருந்தால் வி.சி.க-வை வைத்து தி.மு.க-வுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடியைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அதேநேரம், அ.தி.மு.க-வை வைத்து வி.சி.க நன்றாக அரசியல் விளையாட்டை ஆடிவிட்டது.
இதற்குப் பிறகும்கூட, ‘வி.சி.க., கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ், ம.தி.மு.க கட்சிகளையெல்லாம் விமர்சித்துப் பேசிவிடாதீர்கள்’ என நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் எடப்பாடி. ‘இதையெல்லாம் அவர் ஏன் செய்கிறார், அவரது ஸ்ட்ராட்டஜிதான் என்ன எனப் புரியவே இல்லை.
தி.மு.க-வின் வாரிசு அரசியலைக் கடுமையாக எதிர்த்தவர் அம்மா. வலுவான அந்த ஆயுதத்தையும் கீழே போட்டுவிட்டார் எடப்பாடி. தன் வாரிசை அரசியலில் களமிறக்க முடிவெடுத்திருப்பதாலோ என்னவோ, உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டதற்குக் காட்டமான விமர்சனம் எதையும் மறந்தும்கூட அவர் செய்யவில்லை.
கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கடந்த சில வாரங்களாக எடப்பாடியிடம் தொடர்ச்சி யாகப் பேசிவருகிறார் வேலுமணி. அவருடன் சி.வி.சண்முகம், தங்கமணி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட சீனியர்களும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கட்சியின் நிலைமை குறித்துப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களிடமே, தன்னுடைய திட்டம் என்ன, அது வொர்க்அவுட் ஆகுமா என்பதையெல்லாம் எடப்பாடி ஆலோசிப்பதே இல்லை. எந்த விவகாரமாக இருந்தாலும் கட்சி சீனியர்களை அழைத்துப் பேசுவார் அம்மா. ஆலோசனைகளை வழங்கவும் கட்சி நிர்வாகத்தை கவனிக்கவும் ஐவர் குழுவையும் அமைத்திருந்தார். அது போன்ற ஒரு கட்டமைப்பை எடப்பாடி வைத்திருக்கிறாரா... நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், ‘வலுவான கூட்டணியை அமைத்துத் தருகிறேன்’ என்றார்.
சொன்னபடி அமைத்துக் கொடுத்தாரா... இப்படியிருந்தால், சீனியர்களை விடுங்கள்... கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்குக் கூட அவர்மீது நம்பிக்கை வராது” என்றனர்.
அ.தி.மு.க-வுக்குள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளும், ரகசிய ஆலோசனைக் கூட்டங்களும் சமீபகாலமாக வேகமெடுத்திருக்கின்றன. இணைப்பை வலியுறுத்தும் வேலுமணிக்கு ஆதரவாக நத்தம் விசுவநாதன், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஆர்.காமராஜ், கே.பி.அன்பழகன், தங்கமணி, ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜூ என ஒரு படையே பின்புலத்தில் இயங்குகிறது.
இணைப்புக்கு எதிராக கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், சேலம் இளங்கோவன் என மற்றோர் அணியும் எடப்பாடிக்கு ஆதரவாக மல்லுக்கட்டுகிறது. இந்த இரு தரப்புக்கும் இடையேயான குஸ்தியில் ரணகளமாகிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க கூடாரம்.
சில வாரங்களுக்கு முன்னர், சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள ஒரு பங்களாவில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடந்ததாகவும், அந்தக் கூட்டத்தில் எடப்பாடியின் ரத்தச் சொந்தம் ஒருவரும் கலந்துகொண்டதாகவும் சொல்கிறார்கள் விவரமறிந்த இலைக் கட்சி சீனியர்கள். “அந்தக் கூட்டத்தில் கட்சியின் நிலைமை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, ‘நல்ல முடிவாக எடுக்கச் சொல்லுங்க...’ என அந்த ரத்தச் சொந்தத்திடம் சொல்லியனுப்பியிருக்கிறார் சி.வி.சண்முகம். அதன் பிறகும் எடப்பாடியின் மனஓட்டத்தில் கொஞ்சமும் மாற்றமில்லை” என்கிறார்கள் அவர்கள்.
அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர், “இணைப்பை வலியுறுத்தும் சீனியர்கள் பலருமே, ‘2026-ல் ஆட்சியைப் பிடிக்கவில்லையென்றால், இனி அ.தி.மு.க-வால் எப்போதும் ஆட்சிக்கு வர முடியாத சூழல் உருவாகிவிடும். நாம் இருக்கும்போது கட்சி அழிந்ததாக வரலாறாகிவிடக் கூடாது. கட்சி நலனுக்காக, யாரிடம் வேண்டுமானாலும் சமரசம் செய்துகொள்ளலாம்.
இப்போது அ.தி.மு.க-வுக்குத் தேவை ஓர் இமாலய வெற்றி. எல்லாப் பிரச்னைகளையும் விமர்சனங்களையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்கிற மனநிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அதற்காகத்தான், ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்கிறார்கள்.
வேலுமணி தலைமையிலான சீனியர்கள் குழு, இதைத்தான் எடப்பாடிக்குப் புரியவைக்க முயன்று வருகிறது. ஆனால், ‘தனது பதவிக்கு... தனக்குச் சிக்கல்’ என்றே நினைக்கிறார் எடப்பாடி. தன்னுடைய குடும்ப உறவுக்கு அண்டை மாநிலத்தில் ஒரு சிக்கல் வரப்போவது தெரிந்தவுடன், அன்று டெல்லியை நோக்கி ஓடி சரணாகதி அடைந்தார். ஆனால், இன்று கட்சி நலனுக்காக இணைப்பு வேண்டும் என சீனியர்கள் வலியுறுத்தும்போது, அதை ஏற்க மறுக்கிறார்.
சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள அவருடைய இல்லத்தில் சீனியர்கள் சிலர் சமீபத்தில் அவரைச் சந்தித்திருக்கிறார்கள். ‘ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும், நமக்குச் சறுக்கல்தான். அதற்குள் பிரிந்தவர்களை மீண்டும் கழகத்துக்குள் கொண்டுவர வேண்டும்’ என அவர்கள் பேச, ‘எனக்கு எதிரா செயல் படணும்... என்னைய காலி பண்ணணும்னு முடிவு பண்ணிட்டீங்களா?’ எனக் கொதித்திருக்கிறார் எடப்பாடி. அங்கிருந்த சீனியர்களும், அவர் வயதையும் அனுபவத்தையும் ஒட்டியவர்கள் என்பதால், ‘கட்சியை பலப்படுத்தத்தான் இதைச் சொல்றோம். உங்களோட தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காகக் கட்சியை காலிபண்ணப் பாக்குறீங்களா?’ என அவர்களும் பதிலுக்குக் கடுகடுத்திருக்கிறார்கள்.
கட்சியின் பொதுச்செயலாளரிடமே குரலை உயர்த்தும் அளவுக்குக் கட்சிக்குள் பிரச்னைகள் வீரியமாகிக்கொண்டே போகின்றன. இணைப்பால் தனக்கு என்ன சிக்கல் என்பதை இதுவரையில் சீனியர்களுடன் எடப்பாடி மனம் திறந்து ஆலோசிக்கவில்லை. ‘அது சரிப்படாதுங்க... நான் இருக்குற வரைக்கும் அது நடக்காதுங்க...’ எனப் பொத்தாம் பொதுவாகத்தான் பேசுகிறாரே ஒழிய, ஒரு திட்டமிடலோடோ, புள்ளிவிவரங்களோடோ, தன் மனதில் இருப்பதை அவர் நேரடியாக இதுவரை வெளிப்படுத்தியதில்லை.
இதனால், இணைப்பை வலியுறுத்தி நடக்கும் ஆலோசனைக் கூட்டங்களில் நாளுக்கு நாள் வார்த்தைகள் தடித்த வண்ணம் இருக்கின்றன. இதனால், ‘கட்சியில் இன்னொரு கீறல் விழுந்து விடுமோ...’ என்ற அச்சம் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மத்தியில் உருவாகி யிருக்கிறது” என்றனர்.
கொங்கு மண்டல மாவட்டச் செயலாளர்கள் சிலர், “எடப்பாடிக்கும் வேலுமணிக்கும் இடையே தற்போது ஏற்பட்டிருக்கும் உரசல் என்பது, கட்சியின் நலனுக்கும் வெற்றிக்கும் யார் சொல்லும் ஆலோசனையால் நன்மை ஏற்படும் என்பதுதான். அவர்களுக்கு இடையேயான உரசலை, பெரிய விரிசலாக்கி, அதன் மூலம் ஆதாயமடையக் கட்சிக்கு வெளியே ஒரு கூட்டமே காத்திருக்கிறது. ‘ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடுபவர்களுக்குக் கொண்டாட்டம்’ என்பார்கள். அப்படித்தான், எடப்பாடிக்கும் வேலுமணிக்கும் இடையே நடக்கும் பூசலுக்கு மத்தியில், கட்சிக்குள் விஷக் கருத்துகளை விதைக்க முயல்கிறார்கள் சிலர்.
அந்தக் கூட்டத்தில், சசிகலாவின் மன்னார்குடி வகையறாக்களும் அடக்கம். சசிகலாவின் சகோதரர் திவாகரன் மூலமாக வேலுமணியிடம் ஆசைவார்த்தைகள் வீசப்படுகின்றன. ‘சின்னம்மாவால தேர்தல்ல போட்டியிட முடியாது. திவாகரனுக்கும் அந்த ஆசையெல்லாம் இல்ல. எடப்பாடியை ஓரங்கட்டிட்டா, நீங்கதான் முதல்வர் வேட்பாளர். உங்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்யறதுக்கு சின்னம்மா தயார்’ என வேலுமணியிடம் தூபம் போடுகிறது சசிகலா தரப்பு.
கட்சியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பிருந்த சமயங்களிலேயே, மறந்தும் தன் பர்ஸைத் திறக்காத சசிகலா, வேலுமணிக்குச் செலவு செய்யத் தயாராக இருப்பதாகச் சொல்வதெல்லாம் காமெடிதான். அதை வேலுமணியும் நன்றாகப் புரிந்துதான் வைத்திருக்கிறார்” என்கிறார்கள்.
அ.தி.மு.க-வுக்குள் ‘இணைப்பை’ மையப்புள்ளியாக வைத்து, அடுத்த ரவுண்ட் அதகளம் ஆரம்பித்திருக்கிறது. “பொதுச்செயலாளராக நான் இருக்கும் வரையில் இணைப்பு என்பதே கிடையாது” என எடப்பாடி உறுதியாகத் தெரிவித்து விட்ட நிலையில், “ஏன் புரிஞ்சுக்க மாட்றீங்க... கட்சி நலனுக்காகத்தானே ஒன்றுபடச் சொல்றோம்” எனத் தொடர் முயற்சி செய்கிறார்கள் சில சீனியர்கள்.
இதற்கிடையே, “அவர் பொதுச்செயலாளராக இருப்பதுதானே பிரச்னை... அவரையே நீக்கிவிட்டால் பிரச்னை இருக்காதே...” என புது ரூட் எடுக்கப் பார்க்கிறது மன்னார்குடி வட்டாரம்.
‘பொன்னியின் செல்வன்’ நாவலில், பழுவேட்டரையர் தலைமையில் நடக்கும் ரகசிய ஆலோசனைக் கூட்டங்களைப்போல, நிறைய சந்திப்புகள் நடக்கின்றன எம்.ஜி.ஆர் மாளிகையைக் குறிவைத்து. அ.தி.மு.க-வுக்குள் அடுத்தகட்ட `விறுவிறு’ அரசியல் சதுரங்கம் ஆரம்பித்திருக்கிறது. வெல்லப்போவது யார்?