சென்னையில் ராம்நாத் கோவிந்த்- கருணாநிதி படத்திறப்பு நிகழ்ச்சி விவரம்
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு,புத்தகங்களை கொடுத்து வரவேற்றார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.;
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு, புத்தகங்களை கொடுத்து வரவேற்றார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சட்டப்பேரவை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருப்படத்தை திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். சென்னை வருகை தரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் இன்றைய நிகழ்ச்சிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணமாக இருந்தபோது மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை, 1921ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி உருவாக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை மாகாண சட்டப்பேரவை அமைக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சென்னை மாகாண சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் டெல்லி சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுத்தார். மேலும், விழாவில், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராகவும் 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றிய மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று ஆகஸ்ட் 2 ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதாக ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு டெல்லி சென்று முறைப்படி தமிழக அரசு சார்பில் குடியரசு தலைவருக்கு அழைப்பிதழ் கொடுத்தார். அதே போல, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
அதன்படி, இன்று ஆகஸ்ட் 2 ம் தேதி மாலை தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ளும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 5 நாள் பயணமாக இன்று (ஆகஸ்ட் 2) தமிழகம் வருகை தந்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து இன்று காலை புறப்பட்டு பகல் 12.45 மணிக்கு சென்னை புறப்பட்டார். குடியரசுத் தலைவரை சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பிறகு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சென்றார். அங்கே மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
இதனையடுத்து, இன்று மாலை 4.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, விழா நடக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு செல்கிறார்.
மாலை 5 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சட்டப்பேரவை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசுகிறார். சட்டப்பேரவை அரங்கில் பேரவைத் தலைவர் இருக்கையின் இடதுபுறம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரிசையின் பின்புறம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, நீதிபதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி பேரவை அரங்கம் அமைந்துள்ள தலைமைச் செயலக கட்டிடம், புனித ஜார்ஜ் கோட்டை வாயில்,கொத்தளப்பகுதி, போர் நினைவுச் சின்னம் முதல் தலைமைச் செயலகம் வரையில் காமராஜர் சாலையின் இருபுறமும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க உள்ளவர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளதால், அழைப்பிதழ் கொண்டுவருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இன்று மாலை 5 மணிக்கு விழா தொடங்குவதால் விழாவில் பங்கேற்பவர்கள் அனைவரும் மாலை 4 மணிக்கே வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க உள்ள பத்திரிகையாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பேரவை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநியின் படத்தை திறந்து வைத்து பேசுகிறார். விழா நிறைவடைந்ததும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று (ஆகஸ்ட் 2) இரவு சென்னை ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். இதையடுத்து, நாளை (ஆகஸ்ட் 3) காலை விமானத்தில் கோவை செல்கிறார்.
கோவையில் உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் தரையிறங்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிண்த், அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஊட்டிக்கு செல்கிறார். ஊட்டி ராஜ்பவனில் ஆகஸ்ட் 6ம் தேதி வரை தங்கி ஓய்வெடுக்கிறார். அப்போது, ஒருநாள் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரியை பார்வையிடுகிறார்.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆகஸ்ட் 6ம் தேதி அங்கிருந்து சூலூர் விமானப்படைத் தளம் வந்து, விமானப்படை விமானத்தில் மீண்டும் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.