கமலாலயத்தில் நடக்கும் குழாயடிச் சண்டை..!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் தான், குழுச் சண்டைகள், கோஷ்டி மோதல்களுக்குப் பேர் போன இடம்.
காங்கிரசில் நடக்கும் கோஷ்டிச் சண்டைகள் பிரபலமானது. ஆனால், இன்று சத்தியமூர்த்தி பவனே மிரளும் அளவுக்கு முட்டல் மோதல் நடக்கும் முரட்டுக் களமாக மாறியிருக்கிறது கமலாலயம். சீனியர் நிர்வாகிகளிடையே ஈகோ மோதல், ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டதில் அதிருப்தி, உறுப்பினர்கள் சேர்க்கையில் சொதப்பல் என அடுத்தடுத்துக் கிளம்பும் சர்ச்சைகளாலும் குழப்பங்களாலும் கமலாலயத்துக்குள் குழாயடிச் சண்டை அனல் பறக்கிறது.
“கட்சியில் 66 மாவட்ட அமைப்புகள் இருக்கின்றன. அவற்றை விட அதிகமாகவே கோஷ்டிகளும் இருக்கின்றன. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஒரு கோஷ்டி. மாநில மையக்குழு உறுப்பினர்கள் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், இராம.ஸ்ரீநிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் தலைமையில் ஆளுக்கொரு கோஷ்டி.
இவர்களுக்கு இடையே மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் தனி கோஷ்டி. மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையில் புது கோஷ்டி. பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள், அணி நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் தலைமையில் சிறு சிறு கோஷ்டிகள் என நாள்தோறும் கட்சிக்குள் கோஷ்டி மோதல்கள் வெடித்துக் கிளம்புகின்றன.
இதில் உச்சமாக, கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவிலேயே ஒருங்கிணைப்பு இல்லை. `தாமரையை மலர வைக்கிறேன்’ என்கிற பெயரில், ஆளுக்கொரு இதழாகத் தாமரையைப் பிய்த்து எறிகிறார்கள்...” எனப் புலம்புகிறது பா.ஜ.க வட்டாரம்.
அரசியல் தொடர்பான படிப்புக்காக லண்டனுக்குச் சென்றிருக்கிறார் அண்ணாமலை. அவர் ஊரில் இல்லாத நாள்களில், கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக, பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக்குழுவை அமைத்திருக்கிறது பா.ஜ.க தேசியத் தலைமை.
மாநிலத் துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கனகசபாபதி, பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், இராம.ஸ்ரீநிவாசன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோரை உறுப்பினர்களாகக்கொண்டு அமைக்கப் பட்டிருக்கும் அந்தக் குழுவில் அநியாயத்துக்குச் சர்ச்சைகள் வெடித்துக் கிளம்புகின்றன.
அது தொடர்பாக நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் நிர்வாகிகள் சிலர், “கேரளாவுக்கான கட்சி மேலிடப் பொறுப்பாளர் பதவி ஹெச்.ராஜாவிடமிருந்து பறிக்கப்பட்டதிலிருந்தே முக்கியத்துவம் வாய்ந்த எந்தப் பொறுப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை. கவர்னர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அதையும் டெல்லி கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் தான், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஆலோசனையின் பேரில், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பதவி ஹெச்.ராஜாவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் பெயரை அண்ணாமலை முன்மொழிந்ததற்கு, சிறப்புக் காரணங்களும் இருக்கின்றன.
தொடக்கத்திலிருந்தே கட்சியை வழிநடத்தக் குழுவோ, செயல் தலைவரோ தேவையில்லை என்பதில் உறுதியாக இருந்தார் அண்ணாமலை. தன் ஒற்றைக்கையே ஓங்கியிருக்க வேண்டும் என்பதில் அவர் மிகத் தெளிவாக இருந்தார். அதில் சிறு பங்கமும் வந்துவிடக் கூடாது என்பதில் இப்போதும் கவனமாக இருக்கிறார். அதனால்தான், வெளிநாட்டுக்குச் சென்றாலும்கூட, ‘லண்டனில் இருந்தபடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாகவே கட்சியை நடத்தி விடுவேன்’ என அவர் மேலிடத்தை சமாளிக்கப் பார்த்தார். ஆனால், அவர் வார்த்தைகளை டெல்லி மேலிடம் நம்பவில்லை.
புதிய உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் பணிகள் இருப்பதால், ஒருங்கிணைப்புக்குழுவை நியமிக்க மேலிடம் முடிவு செய்தது. குழுவில் இடம்பெற தமிழிசை, பொன்னார், வி.பி.துரைசாமி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன், நரசிம்மன் என சீனியர்கள் பலரும் காய்நகர்த்தினார்கள். ஆனால், ‘அவர்களைக் குழுவில் நியமித்தால், லண்டனிலிருந்து தான் திரும்பி வருவதற்குள், கட்சி தன் கட்டுப்பாட்டைவிட்டுப் போய்விடும் என அண்ணாமலைக்குத் தெரியும்.
தன் அதிகாரம் மொத்தமாகப் பறிபோய்விடும் என அவர் அச்சப்பட்டுப் பதறினார். குழு போடுவதைத்தான் தடுக்க முடியவில்லை... அந்தக் குழுவில் யார் யார் இருக்க வேண்டும் என்கிற விஷயத்திலாவது காய்நகர்த்தலாம் என யோசித்தவர், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் மூலமாக, தன் கைக்குள் அடங்குபவர்களாகப் பார்த்து ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற வைத்திருக்கிறார். அந்தக் குழுவில் இடம் கிடைக்காத பல சீனியர்கள் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு கட்சிக்குள் தனக்குக் கொஞ்சம் வெளிச்சம் கிடைத்திருப்பதால், ஹெச்.ராஜா உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். ஆனால், கட்சிக்கு அதனால் துளி பிரயோஜனமும் இல்லை. குழுவிலுள்ள துணைத் தலைவர் கனகசபாபதிக்கும் ஹெச்.ராஜாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், தேர்தல் அறிக்கையைத் தயார் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவில் ஹெச்.ராஜா, கனகசபாபதி உள்ளிட்டோரும் இடம்பெற்றனர். அப்போதே இருவருக்குமிடையே கருத்து மோதல் எழுந்து பற்றிக்கொண்டது. அந்த நெருப்பு இன்னும் அணையவில்லை. இன்று வரையிலும் கூட இருவரும் சரியாக முகம் கொடுத்துப் பேசிக்கொள்வதில்லை. கனகசபாபதியும் எஸ்.ஆர்.சேகரும் எதிரும் புதிருமாக இருப்பார்கள். கருப்பு முருகானந்தம் யாருடனும் கலந்து பேசும் பழக்கமில்லாதவர். சமீபத்தில் ஒருங்கிணைப்புக்குழுவின் உறுப்பினரான பேராசியர் இராம.ஸ்ரீநிவாசன், தனது பிறந்தநாளை வெகு விமரிசையாக மதுரையில் கொண்டாடினார்.
சரத்குமார், கே.பி.ராமலிங்கம் எனப் பலரும் நேரில் சென்று வாழ்த்திய நிலையில், ஒருங்கிணைப்புக்குழுவில் இருப்பவர்களில் ஒருவர்கூட நேரில் சென்று வாழ்த்தவில்லை. கருப்பு முருகானந்தம் மட்டும் ஒப்புக்கு வீடியோ பதிவில் வாழ்த்தினார். இப்படிப்பட்டவர்களை வைத்துத்தான் குழுவைக் கட்டியமைத்திருக் கிறார்கள். ஒருங்கிணைப்பு என்பது ‘ஒருங்கிணைப்பு’க்குழு என்கிற பெயரில் மட்டும்தான் இருக்கிறது.
இன்னொரு விஷயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும்... டெல்லி மேலிடம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, முக்கியமான கட்சிப் பணிகளில் மாநில மையக்குழுவின் ஆலோசனையைப் பெற்றுத்தான் ஒருங்கிணைப்புக்குழு செயல்பட வேண்டும். இதற்கு மையக்குழுவிடமே கட்சியை வழிநடத்தும் பொறுப்பை அளித்திருக்கலாமே... எதற்கு ஒருங்கிணைப்புக்குழு... மையக்குழுவில் தமிழிசை, பொன்னார், வானதி என அண்ணாமலைக்கு எதிர்க்கோஷ்டிகள் அமர்ந்திருப்பதால்தான், அவர்கள் இல்லாத ஒருங்கிணைப்புக்குழுவே அண்ணாமலையின் வேண்டுகோளின்படி அமைக்கப்பட்டது.
ஆனாலும், டெல்லி உருவாக்கிய விதியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட மையக்குழு உறுப்பினர்கள், நிர்வாகரீதியாக ஒருங்கிணைப்புக்குழுவுக்குக் குடைச்சல் கொடுக்கத் தயாராகிவிட்டார்கள். கிடைத்திருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரத்தையும் அவர்கள் கோட்டைவிட்டுவிடுவார்களா என்ன..?
செப்டம்பர் மாத இறுதிக்குள், தமிழகத்தில் ஒரு கோடிப் பேரை உறுப்பினர்களாகச் சேர்க்கக் கட்டளை இட்டிருக்கிறது பா.ஜ.க மேலிடம். உறுப்பினர் சேர்க்கைக்கும் தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகளையெல்லாம் ஒருங்கிணைப்புக்குழுதான் கவனிக்க வேண்டும். மண்டலத்துக்கு மண்டலம் கோஷ்டிகளை வைத்துக்கொண்டு, கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட குழுவிலேயே ஒருங்கிணைப்பு இல்லாத போது, கட்சிப் பணிகள் எப்படி நடக்கும்... ஒரு மாதத்துக்குள் எங்கிருந்து ஒரு கோடிப் பேரைச் சேர்ப்பது..?” என்றனர் .
அவர்களின் புலம்பலை உறுதிப்படுத்துவதுபோல அமைந்துவிட்டது, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி கமலாலயத்தில் நடந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி. முதல் உறுப்பினராக ஹெச்.ராஜா அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டார். அங்கேயே குழாயடிச் சண்டைச் சத்தம், கமலாலயக் காதுகளை ரத்தம் சொட்ட வைத்து விட்டன.
இது குறித்து பேசிய பா.ஜ.க மாவட்டத் தலைவர்கள் சிலர், “நிகழ்ச்சி நடத்துவதற்கான பொறுப்பை, மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம் ஒப்படைத்தார் கேசவ விநாயகம். ‘தி.நகரில் ரோடு ஷோ நடத்தினால் பிரமாண்டமாகக் கூட்டம் வரும் எனத் தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியை வரவழைத்து, எந்தத் திட்டமிடலும் செய்யாமல் மொத்தமாகச் சொதப்பி, பிரதமரை நடுரோட்டில் நிறுத்தியவர் தான் கரு.நாகராஜன்.
அவரிடமா பொறுப்பை ஒப்படைக்கிறீர்கள்..?’ என அப்போதே சீனியர்கள் சிலர் ஆதங்கப்பட்டனர். ஆனால் கேசவ் ஜி காது கொடுக்கவில்லை. முடிவில், போதுமான இடவசதி இல்லாத கமலாலயத்திலேயே உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. 200 பேர்கூட அங்கே நிற்க முடியவில்லை. டெல்லியில் பிரதமர் மோடி பேசுவதைப் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி டி.வி-யும் சரியாகத் தெரியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துக் கடுப்பான தொண்டர்கள் பலரும், பாதியிலேயே வெளியேறி விட்டார்கள். ரொம்பவே சொதப்பலாக நடந்தது உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி.
முதல் உறுப்பினர் அட்டையை பொன்.ராதாகிருஷ்ணனுக்குத்தான் வழங்க வேண்டும் என சீனியர்கள் பலரும் விரும்பினார்கள். ஆனால், ‘ஹெச்.ராஜாவுக்கு வழங்கலாம்’ என அங்கேயும் சிண்டு முடிந்து விட்டார் அண்ணாமலை. பி.எல்.சந்தோஷும் சம்மதித்து விட்டதால், ராஜாவுக்கே முதல் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதில் அப்செட்டான பொன்னார், நிகழ்ச்சிக்கே வரவில்லை. மாநிலச் செயற்குழு உறுப்பினர் காயத்ரி தேவிக்கு கேசவ விநாயகம் காட்டிய முக்கியத்துவத்தால், மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த் போன்றவர்கள் அப்செட். மேடையில் தமிழிசைக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. மொத்தத்தில், ஏக சொதப்பலில் நடந்து முடிந்திருக்கிறது உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி.
கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியுடன், தேசியத் தலைவரில் தொடங்கி, மண்டல் பொறுப்பாளர்கள் வரையில் அனைவரது கட்சிப் பதவிகளும் காலாவதியாகிவிட்டன. புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிந்தவுடன், மண்டல் தலைவர், மாவட்டத் தலைவர் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 1-ம் தேதி மாநிலத் தலைவர்களுக்கான தேர்தலும், அதன் தொடர்ச்சியாக தேசியத் தலைவருக்கான தேர்தலும் நடைபெறுகின்றன. தமிழகத்தில், தற்போது 66 மாவட்ட அமைப்புகள் பா.ஜ.க-வுக்கு இருக்கின்றன. மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்கிற விகிதத்தில் பிரித்து, மாவட்ட அமைப்புகளின் எண்ணிக்கையை உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது டெல்லி மேலிடம். அதற்காகத்தான் சீனியர்கள் பலரும் காத்திருக்கிறார்கள்.
தற்போதிருக்கும் மாவட்டத் தலைவர்களில் கணிசமானோர், அண்ணாமலையின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கும், புதிதாகச் சிலருக்கும் சேர்த்து பதவி வாங்கித்தரத் தயாராகிறார் அண்ணாமலை. அதற்கு முட்டுக்கட்டை போட நினைக்கும் தமிழிசை, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் போன்றவர்கள், தங்களின் ஆதரவாளர்களையும் மாவட்டத் தலைவர்களாக்கிவிடக் காய்நகர்த்துகிறார்கள். அணி நிர்வாகிகள் நியமனத்திலும் தங்களுக்குப் பங்கு கேட்கும் முடிவில் இருக்கிறார்கள்.
அதன் மூலமாக, கட்சிக்குள் தங்கள் செல்வாக்கை நிறுவியே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார்கள். இதுநாள் வரையில் அண்ணாமலையைக் காப்பாற்றிவருவது பி.எல்.சந்தோஷ்தான். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததிலிருந்து, ‘சொந்த ஊரிலேயே கோட்டைவிட்டுவிட்டார்’ என அவரது பதவியே ஊசலாட்டத்தில்தான் இருக்கிறது. குஜராத்திகளும் உத்தரப்பிரதேச நிர்வாகிகளும் சந்தோஷை விரும்பவில்லை. இந்த ஆடு புலி ஆட்டத்தில், சந்தோஷ் ஓரங்கட்டப்பட்டு விட்டால் அடுத்ததாக அண்ணாமலையும் வீழ்த்தப்படுவார். அதனால், இந்த முறை நடைபெறும் மாநிலத் தலைவர் தேர்தலில் அண்ணாமலையை எதிர்த்து, பல வேட்புமனுக்கள் தாக்கலாகும்.
இன்றைய தேதியில் கட்சிக்குள் கோஷ்டி மோதல் உச்சத்தில் இருக்கிறது” என்றனர். கட்சிக்குள் குழு, கோஷ்டி, முட்டல், மோதல் என ரணகளமாகிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில்தான், அமித் ஷாவை டெல்லிக்குச் சென்று சந்தித்திருக்கிறார் ஹெச்.ராஜா. தமிழக பா.ஜ.க-வின் நிலை குறித்து அமித் ஷாவிடம் விவரித்தவர், ஒருங்கிணைப்புக்குழுவுக்குப் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை எனப் புலம்பவும் செய்திருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து, அமித் ஷாவைச் சந்தித்திருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அ.தி.மு.க-வுடனான கூட்டணி உறவு குறித்து விரிவாகப் பேசியதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்த குஸ்திகளுக்கு இடையே, “வாசனையே மாநிலத் தலைவராக்கிவிட்டால் என்ன..?” என்று கோஷ்டிகளின் எண்ணிக்கையைக் கமலாலயத்தில் உயர்த்த ஒரு குழு குரலை உயர்த்துகிறது.
ஆக மொத்தத்தில், “ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்...” என டார்கெட் வைத்த டெல்லி மேலிடத்துக்கு, “ஒரு கோடி கோஷ்டிகள் வேண்டுமானால் சேர்க்கலாம்...” எனச் சட்டையைக் கிழித்துக்கொள்ளாத குறையாக பதில் சொல்கிறது கமலாலயம். டிசம்பருக்குள் இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகின்றனவோ..?