அரவிந்த் கெஜ்ரிவால் விஷயத்தில் காங்., கட்சியின் கபட நாடகம்..!
இன்று அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்துள்ள காங்., தான் அன்று அவரை கைது செய்ய வேண்டும் என புகார் கொடுத்தது.;
பா.ஜ.க.,வின் மருத்துவப்பிரிவு நிர்வாகி டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., கூறியதாவது:
கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது. அதில் பங்கேற்பவர்கள் யார்?
காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரிநேத். டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் அனில் சௌத்ரி மற்றும் அல்கா லம்பா. முழுக்க முழுக்க அரவிந்த் கெஜ்ரிவால் மாற்றியமைத்த எக்சைஸ் கொள்கை, அதன் காரணமாக டெல்லியெங்கும் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் மதுபானம், விதிகளுக்குப் புறம்பாக கமிஷன் தொகையை பலமடங்கு உயர்த்தியது.
அனுமதி பெறாத இடங்களில் மது விற்பனைக்கு அங்கீகாரம் வழங்கியது. மது உற்பத்தியாளர்களிடமிருந்து கையூட்டாக பணம் பெற்றது என தற்போது எந்த வழக்கில், எந்த அடிப்படையில் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கிறாரோ, அத்தனை குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து நடத்தப்பட்ட காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு அது. அர்விந்த் கேஜ்ரிவாலின் முறைகேடு குறித்து காங்கிரஸ் மேலும் வெளியிட்ட தகவல்கள் என்ன? தெரியுமா?
1. டெல்லி காங்கிரஸின் அனில் சௌத்ரி தலைமையில் ஒரு குழு மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியைச் சந்தித்து முறைகேடு குறித்து புகார் அளித்தது.
2 டெல்லி மாநகரக் காவல் ஆணையரை சந்தித்து, அனுமதி பெறப்படாத இடங்களில் மதுவிற்பனை தொடங்கியிருப்பது குறித்து புகார் அளித்தது.
3. அர்விந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் ஆசான் அன்னா ஹஜாரேக்கு கடிதம் எழுதி, ‘உங்கள் சிஷ்யன் பண்ணுகிற அக்கிரமத்தைப் பாருங்கள்,’ என்று முறையிட்டது. அது மட்டுமா? இந்த ஊழலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது நாங்கள், மக்களிடம் எடுத்துச் சென்றது நாங்கள், கெஜ்ரிவால்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியது நாங்கள் என்றெல்லாம் மார்தட்டியதோடு நில்லாமல்... பாஜக அர்விந்த் கேஜ்ரிவாலுடன் கைகோர்த்துக் கொண்டு, இந்த ஊழலை மறைக்கப் பார்க்கிறது. அதற்கு பதிலாக மது உற்பத்தியாளர்களிடமிருந்து நன்கொடை பெற்றிருக்கிறது என்றெல்லாம் குற்றப்பத்திரிகை வாசித்தது.
இத்தனையும் செய்து விட்டு, இன்று அதே குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்திருப்பதோடு, ஒவ்வொரு கட்டத்திலும் அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டபூர்வமானவை என்பதையும் உறுதிபடுத்திய பிறகு, அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இது அனைவரும் எதிர்பார்த்ததே. இப்படியிருக்க.. இப்போது கேஜ்ரிவால் குடும்பத்தைச் சென்று சந்திப்பேன்; சட்ட உதவி மேற்கொள்வேன் என்று காங்., சொல்வதெல்லாம் அரசியல் பல்டி., அரசியல் வேஷம் என்பதை தவிர வேறென்ன?
இதைவிட சந்தர்ப்பவாத அரசியலை வேறெங்கு பார்க்க முடியும். இது போன்ற சந்தர்ப்பவாத அரசியல் நாடு முழுவதும் பரவி வருகிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியலை ஒழிக்க இப்போது நாட்டு மக்களுக்கு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்... மிகவும் யோசித்து ஓட்டுப்போடுங்கள். இவ்வாறு கூறினார்.