பச்சைப்பொய் பழனிச்சாமி! முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
ஊடகங்கள் மூலமாகத்தான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாக கூறியது குறித்து பச்சைப்பொய் பழனிச்சாமி என கூறினார்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி போட்டியிடுகிறார். எப்போதும், தி.மு.க. கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்குத்தான் முதலில் தொகுதி பங்கீடு செய்யப்படும்! பேராசிரியர் காதர் மொய்தீன் எப்போதும் நமக்கு உறுதுணையாக இருப்பவர். ஏன் என்றால், தி.மு.க. எப்போதும் சிறுபான்மை இயக்கத்துக்குத் துணையாக இருக்கும் இயக்கம்.
அனைத்துத் தரப்பினரின் ஆதரவைப் பெற்று, ஏணி சின்னத்தில் போட்டியிடும், நவாஸ் கனியை கடந்த தேர்தலை விட, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள். கடந்த 2019 தேர்தலின் போது, நான் தூத்துக்குடியில் பேசிய போது, “என் தங்கை கனிமொழிக்கு வாக்களியுங்கள்… அவர் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார் – என் கடன் பணி செய்து கிடப்பதே என்று உழைப்பார்” என்று கூறி வாக்கு கேட்டேன். நீங்களும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைத்தீர்கள்.
தூத்துக்குடியில் மக்களுடன் மக்களாகக் கனிமொழி வாழ்ந்தார்; உழைத்தார்; போராடினார்; உங்களுக்காக நாடாளுமன்றத்தில் பேசினார். மழைவெள்ளம் ஏற்பட்டபோது, அவரே தண்ணீரில் இறங்கி, மக்களுடன் மக்களாக நின்று, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதையெல்லாம், நீங்களே பார்த்தீர்கள். இதைக் கூறினால், பிரதமர் நரேந்திர மோடி குடும்ப அரசியல் என்று பழைய பல்லவியைப் பாடுவார். எங்கள் மேல் எந்தக் குற்றச்சாட்டும் - விமர்சனமும் வைக்க முடியாதவர்கள் செய்யும் அவதூறு அது.
பிரதமர் மோடி அவர்களே… நாங்கள் உழைப்பதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறோம். ஊர் சுற்ற வரவில்லை! எப்படி மக்கள் பணியாற்றவேண்டும் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்தது யார்? தலைவர் கலைஞர் அவர்கள்! எங்களுக்கு என்றால், தனிப்பட்ட எனக்கும் - கனிமொழிக்கும் மட்டுமல்ல; இங்கு மேடையில் இருக்கும் நிர்வாகிகளுக்கு மட்டுமல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
அதனால்தான், அடிக்கடி சொல்கிறோம்; ஆமாம், நாங்கள் குடும்பக் கட்சி தான்! தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்மை செய்கின்ற கட்சி! ஒவ்வொரு நாளும் காலை முதல் - இரவு வரை மக்களுடன் மக்களாக இருந்து, மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டு இருக்கும் கட்சி! இந்த தமிழ்நாட்டை எப்படியாவது அடிமைப்படுத்தி விட முடியாதா? என்று பகல் கனவு காணும் உங்களின் தூக்கத்தைக் கெடுக்கும் கொள்கை வாரிசுகள் நாங்கள்! இப்படிப்பட்ட கொள்கை உரமிக்க தன்மானக் கூட்டத்தைப் பார்த்தால் உங்களுக்குக் கசக்கத்தான் செய்யும்!
ஜூன் 4-ஆம் தேதி பாருங்கள்… கனிமொழியை மீண்டும் தூத்துக்குடி மக்கள் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பத்தான் போகிறார்கள். அன்றைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பா.ஜ.க. அதைப் பார்க்கத்தான் போகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், தூத்துக்குடி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது எது? துப்பாக்கிச் சூடு! 13 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டதை மறக்க முடியுமா? அப்படியொரு மனிதநேயமற்ற கொடூரமான துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் தான் பழனிசாமி! தமிழ்நாட்டு வரலாற்றில் அ.தி.மு.க. ஆட்சியால் வைக்கப்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளி. துயரமும் - கொடூரமுமான அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் பதறுகிறது.
2018-ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான் உடனடியாகத் தூத்துக்குடிக்கு வந்தேன். துப்பாக்கிச் சூட்டின் சத்தமும் – மக்களின் மரண ஓலமும் ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் காட்சி, இப்போதும் என் மனதை விட்டு அகலவில்லை. இரத்தத்தை உறைய வைக்கும் இந்தச் சம்பவம் பற்றி அன்றைய முதலமைச்சர் பழனிசாமியிடம் ஊடகங்கள் கேட்டபோது, என்ன கூறினார்? “இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியாது. உங்களைப்போல் நானும் டி.வி. பார்த்துதான் தெரிந்துக் கொண்டேன்” என்று துளிகூட நெஞ்சில் ஈரம் இல்லாமல் பழனிசாமி பேட்டி அளித்ததை யாரும் மறந்திருக்கவே முடியாது.
”உள்துறையைக் கையில் வைத்திருந்த மாநிலத்தின் முதலமைச்சர் பேசும் பேச்சா அது?” என்று நாடே கோபத்தில் கொந்தளித்தது. நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் பழனிசாமி கூறியது பொய் என்று தெளிவாக வந்து விட்டது.
‘பச்சைப்பொய் பழனிசாமி’ என்று மக்கள் சும்மாவா சொன்னார்கள்! பழனிசாமிக்குத் தெரிந்து தான் துப்பாக்கிச் சூடு நடந்தது என்று ஆணையம் ஆதாரப்பூர்வமாக கூறியிருக்கிறது. ஆணையத்தில் சாட்சியாக விசாரிக்கப்பட்டவர்கள் யார் தெரியுமா? அப்போது இருந்த தலைமைச் செயலாளர்! அடுத்து, சட்டம்-ஒழுங்கு பொறுப்பிலிருந்த அப்போதைய டி.ஜி.பி.! அன்றாட நிகழ்வுகளை முதலமைச்சருக்கு சொல்லும் அப்போதைய உளவுத்துறை ஐ.ஜி.! இப்படி அரசின் உயர் பொறுப்புகளில் இருந்த அனைவரும் கூறிய சாட்சியத்தை வைத்துத்தான், பழனிசாமிக்கு தெரிந்து தான் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது என்று ஆணையம் உறுதி செய்தது!
தூத்துக்குடியில் நடக்கின்ற சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்திற்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமியிடம் அப்டேட் செய்ததாக அவர்கள் கூறினார்கள். எனவே, ஊடகங்கள் மூலமாகத்தான் துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாகப் பழனிசாமி கூறியது தவறானது என்று ஆணையத்தின் அறிக்கையில் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.
இவ்வாறு, பழனிசாமியின் பொய்யை அம்பலப்படுத்திய ஆணையம், தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்டதல்ல! அ.தி.மு.க. ஆட்சியில் பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதே அமைக்கப்பட்டது! தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், நம்முடைய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.
கலவரத்தில் ஈடுபடாத நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை திரும்பப் பெற்றோம். போராட்டத்தின்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்ட 93 நபர்களுக்கு, அவர்களும் - அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அனுபவித்த மன வேதனைகளின் பொருட்டு 1 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது. காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு இறந்த பரத்ராஜ் என்பவரின் தாயாருக்கு 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. திரும்பப் பெறத் தகுதியுள்ள 38 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காகத் "தடையில்லாச் சான்றிதழ்" வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இது எல்லாவற்றிற்கும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் – 26.05.2021 அன்றே உத்தரவிட்டோம்.
தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 21 நபர்களுக்கு, கடந்த ஆட்சியில் கண்துடைப்பாகச் சில பணிகள் வழங்கப்பட்டது. அவர்கள் தங்களின் படிப்புத் தகுதிக்கு ஏற்ற பணிகளைக் கேட்டார்கள். அதை நிறைவேற்றிக் கொடுத்ததும் தி.மு.க. அரசுதான்! அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற பணியிடங்கள் 18 நபர்களுக்கு வழங்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேல், இந்தத் துயரங்களுக்கு எல்லாம் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாகத் திறக்க முடியாதபடி சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் உறுதியான வாதங்களை முன்வைத்து வெற்றி கண்டது, நம்முடைய திராவிட மாடல் அரசுதான்!
ஒரு ஆட்சி நிர்வாகம் ஈவு இரக்கமில்லாமல் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு கடந்த அ.தி.மு.க. ஆட்சி! ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கண்ணீரைத் துடைத்து, அவர்களின் வாழ்க்கையில், ஒளி வீசும் உதயசூரியனாக இருக்கிறதுதான் நம்முடைய தி.மு.க. ஆட்சி!
மக்கள் விரோத ஆட்சி நடத்திய பழனிசாமி, தன் ஆட்சி அவலங்களை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறார். மக்களை ஏமாற்ற மீண்டும் அவர் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்னால் திருச்சியில் பேசிய பழனிசாமி, எனக்கு இரண்டு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.
ஒன்று, தி.மு.க.வுக்கும் - அ.தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்று கூறியிருக்கிறார். அந்தளவிற்காவது பழனிசாமிக்குப் புரிதல் இருக்கே என்று, எனக்கு முதல் மகிழ்ச்சி!
பழனிசாமி அவர்களே… களத்தில் மோதுவோம்! எங்கள் சாதனைகளையும் - உங்கள் துரோகங்களையும் எடைபோட்டு மக்கள் தீர்ப்பளிக்கட்டும்! எங்கள் கொள்கைகள் எப்படி உயர்வானது! அந்தக் கொள்கைகளுக்காக நாங்கள் எப்படி உறுதியுடன் நிற்கிறோம்! கொள்கை அடிப்படையில் ஆட்சி நடத்தி, திட்டங்களைச் செயல்படுத்துகிறோம் என்று ஒவ்வொரு நாளும் மக்கள் பார்க்கிறார்கள்…
அதேபோல், பழனிசாமி என்பவர் யார்? நேற்று யாருடன் இருந்தார்; இன்றைக்கு யாருடன் இருக்கிறார்; நாளைக்கு யாருடன் இருப்பார்; சுயநலத்தின் முழு உருவமாகத் தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படி அடகு வைத்தார்; நேரத்திற்கு ஏற்ற மாதிரி எப்படியெல்லாம் தவழ்ந்து… தவழ்ந்து பழனிசாமி போராடுவார் என்று மக்கள் எடைபோட்டுத் தீர்ப்பளிப்பார்கள்!
பழனிசாமிக்கு… முன்னாள் - இந்நாள் கிடையாது… எந்நாளும் பா.ஜ.க.தான் எஜமானர்கள்… இவ்வாறு பேசினார்.