திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம்: நன்றி கூறி ஸ்டாலின் பேட்டி
உள்ளாட்சித் தேர்தல் வெற்றியானது, திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்து;
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி அதிக வார்டுகளை வென்று முன்னிலையில் உள்ளது.
அதேபோல், 138 நகராட்சிகளில் 130 நகராட்சிகளை கைப்பற்றும் வகையில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 6 நகராட்சிகளில் மட்டுமே முன்னிலை பெற்று இருந்தது. அத்துடன், 489 பேரூராட்சிகளில் 405 பேரூராட்சிகளின் முன்னிலை நிலவரம் வெளியானது. அதில் தி.மு.க. கூட்டணி 389 பேரூராட்சிகளை கைப்பற்றும் வகையில் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், திமுக வெற்றி குறித்து, முதலமைச்சரும், அக்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியாதாவது:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்திருப்பது, 9 மாத அரசின் நல்லாட்சிக்கு கிடைத்த நற்சான்று. திமுக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி.
சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்காதவர்களும், வருந்தும் வகையில் எங்கள் ஆட்சி சிறப்பாக இருக்கும் என்றேன். அதேபோல், மக்கள் திமுக ஆட்சி மீது நம்பிக்கை கொண்டு, அதிமுக கோட்டையென்று கூறப்பட்ட பகுதிகளிலும் திமுகவுக்கு இம்முறை பெரும் வெற்றியை தந்துள்ளனர்.
திமுகவின் திராவிட மாடல் பாணி ஆட்சிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இது. மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் செயல்படுவார்கள். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயகக்கூட்டணி தேர்தல்கால கூட்டணியல்ல; கொள்கைக்கான கூட்டணி. இந்த வெற்றியில் கூட்டணி கட்சியினரின் பங்கும் உள்ளது. வெற்றியை திமுகவினர் எளிமையாக கொண்டாட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.