தலைகளே பின்வாங்கினா எப்படி? பாஜகவில் குமுறும் தொண்டர்கள்

பாஜக சார்பாக தமிழ்நாட்டில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான இரண்டு பேர் தேர்தலில் போட்டியிடவில்லை

Update: 2024-02-16 16:04 GMT

நீலகிரி லோக்சபா தொகுதியில் மத்திய பாஜக இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் தற்போது திமுக எம்பி ஆ. ராசாவிற்கு ரூட் கிளியர் ஆகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் எல் முருகன் மீண்டும் தேர்வாகிறார். மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார்.

இதனால் அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை. இதனால் திமுக எம்பி ஆ. ராசாவிற்கு பெரிய அளவில் இனி நீலகிரியில் போட்டி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்னொரு பக்கம் மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன். கோவை தேர்தலில் கண்டிப்பாக நிற்க மாட்டேன். எனக்கு தலைவராக பணிகளை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று பாஜகவின் அண்ணாமலை அறிவித்துள்ளார் .

அண்ணாமலையின் இந்த முடிவிற்கு என்ன காரணம் இருக்கும் என்ற கேள்விகள் எழுந்த நிலையில்,  பெரும்பாலும். மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். அதாவது மக்களவை தேர்தல் நெருங்கிய நிலையில் மத்திய உளவுத்துறை சார்பாக மத்திய பாஜக அரசுக்கு ரிப்போர்ட் சென்று இருக்கும்.

தேர்தல் தொடர்பாக எங்கே நிற்கலாம், யார் நிற்கலாம், எங்கே நிற்க கூடாது என்று ரிப்போர்ட் சென்று இருக்கும். அந்த ரிப்போர்ட் காரணமாக தேர்தலில் நிற்க மாட்டேன் என்ற முடிவை அண்ணாமலை , மற்றும் எல் முருகன் எடுத்து இருக்கலாம்.

மக்களவை தேர்தலில் பாஜகவின் இரண்டு டாப் தலைவர்கள் போட்டியிடாத காரணத்தால் கட்சி உள்ளே இருக்கும் மற்ற தலைவர்கள் அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக இந்த தேர்தலில் எச். ராஜா போன்ற மற்ற மூத்த தலைவர்கள் போட்டியில்லை. வேறு சில மூத்த தலைவர்கள் ஏற்கனவே ஆளுநர் ஆகிவிட்டனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை , எல் முருகன் ஆகியோர் கட்சி வளர்ந்து விட்டதாக தொடர்ந்து பேசி வந்தனர்.

இப்படி இருக்க தற்போது தேர்தலில் நிற்காமல் பின்வாங்கி உள்ளனர். இதனால் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கடுமையாக அப்செட் ஆகி உள்ளனராம். நம்மை மட்டும் களமிறக்குகிறார்களே, பெரிய தலைகள் வந்தால் தானே தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள் என்ற எண்ணம் நிர்வாகிகள் இடையே உள்ளதாம்.

தமிழ்நாடு மக்களவை தேர்தலில் பாஜக மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உறுதியாக இருக்கும் அதிமுக: அதன்படி ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதனால் பாஜக தனியாக 3வது அணியை உருவாக்க முயன்று வருகிறது.

பாஜக உருவாக்கும் இந்த அணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் ஆகியோர் வழங்கும் முக்குலத்தோர் வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும். இப்படி தினம், தினம் அரசியல் சூழ்நிலை மாறி வரும் நிலையில், பா.ஜ.க.,வின் முக்கிய தலைவர்கள் பி்ன்வாங்கியது அக்கட்சியினர் மத்தியில் பெரும் சோர்வினை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News