எம்ஜிஆர் கனவை நிறைவேற்ற அம்பையில் மோடி உறுதி..!
தமிழகத்தில் எம்ஜிஆரின் கனவுகளை நிறைவேற்ற பாஜக பாடுபட்டு வருகிறது என பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.;
8வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை தந்தார். கேரளாவில் இருந்து வருகை தந்த அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் எனக்கு கூடும் கூட்டத்தை பார்த்து இந்தியா கூட்டணிக்கு தூக்கம் தொலைந்திருக்கும். தமிழ் புத்தாண்டு தினத்தில் தான் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தென்னிந்தியாவிலும் புல்லட் ரயில் இயக்கப்படும் என பாஜக வாக்குறுதி அளிக்கிறது. தமிழ் மொழியை உலக அளவில் பிரபலப்படுத்த பாஜக உறுதி பூண்டுள்ளது. தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த ஆதரவால் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் எம்ஜிஆரின் கனவுகளை நிறைவேற்ற பாஜக பாடுபட்டு வருகிறது
தாய்மார்களுக்கு தொண்டு செய்ததால் அவர்களின் அன்பு எனக்கு கிடைத்திருக்கிறது. தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை நேசிக்க தொடங்கியவர்கள், பாஜகவை நேசிக்க தொடங்கி விட்டார்கள். செங்கோலாக இருக்கட்டும், ஜல்லிக்கட்டாக இருக்கட்டும். திமுக அதனை எதிர்த்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், ஆகியோர் சுதந்திரத்திற்காக போராடியவர்கள்.
முத்துராமலிங்க தேவர் தந்த எழுச்சியால், நேதாஜி ராணுவத்தில் பல இளைஞர்கள் இணைந்தனர். பாஜகவும் வ.உ.சி போல தமிழகம் மற்றும் இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்ற விரும்புகிறது. இந்த கூட்டத்துடன் தமிழ்நாட்டில் எனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறேன்”. இவ்வாறு பேசினார்.