வடக்கு நோக்கி நகரும் பாஜகவின் தேர்தல் வியூகம்..!
பாஜக தனது தேர்தல் வியூகத்தில் வட மாநிலங்களுக்கு அதிக முக்கித்துவம் கொடுத்துள்ளது.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என முனைப்புக் காட்டி வருகிறது பாஜக. இன்னும் எதிர்க்கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யாத நிலையில், பாஜக தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 34 மத்திய அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் 2 முன்னாள் முதல்வர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளன. முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் மொத்தமுள்ள 195 பேரில் 28 பெண்கள், 47 வேட்பாளர்கள் 50 வயதுக்குட்பட்டவர்கள், 57 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள், 27 பட்டியலின வேட்பாளர்கள், 18 பழங்குடியின வேட்பாளர்கள் ஆவர்.
தவிர, இந்த தேர்தலில் தென்னிந்தியாவில் பாஜக எதிர்ப்பார்த்த முன்னேற்றம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். எனவே, வட இந்தியாவை டார்கெட் செய்து வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க பாஜக முயன்று வருகிறது. இதனால், முதல்கட்ட வேட்பாளர்கள் வட இந்திய தொகுதிகளில் அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தென்னிந்தியாவை பொறுத்தவரை கேரளா, தெலங்கானா மட்டுமே இடம் பெற்றிருந்தது.
தென் இந்தியா தனக்கு கை கொடுக்காது என்பதை பா.ஜ.க., உணர்ந்து கொண்டதாலேயே வடக்கு மாநிலங்களில் தீவிர கவனம் செலுத்த பா.ஜ.க., முடிவு செய்து, அதற்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தென்னிந்தியாவில் தனது வியூகத்தை மாற்றும் நிர்பந்தத்திற்கு பா.ஜ.க., தள்ளப்பட்டுள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.