அதிமுகவுக்கும் பாஜகவும் இடையே பிரச்சனையா? அண்ணாமலை பளிச் விளக்கம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்க சீர்கெட்டுள்ளதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.;
பாரதப் பிரதமர் மோடி இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், குஜாராத் மாநிலம் ஆனந்த் நகரில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம், இந்திய முழுவதும் உள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடினார். இதையொட்டி, நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில், இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு, மோடியின் பேச்சு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விவசாயிகளிடையே பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அதிமுக வலிமையான கட்சியாக இருக்க வேண்டுமென விரும்புகின்றோம். கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வடிவங்களில் வேளாண் சட்டங்கள் உள்ளன. மத்திய அரசின் சட்டம் சரியான புரிதல் இல்லாததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் இச்சட்டம் திரும்ப பெறப்பட்டது.
ஒருநாள் வேளாண் சட்டம் வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுப்பவர். அப்போது இந்த சட்டம் நிச்சயம் வரும். மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு விருது கொடுக்கவில்லை. ஏதோவொரு மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தியதற்காக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறோம். சமீபத்தில் அரசுப் பள்ளியின் பின்புறம் 10 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு இதைவிட வேறென்ன உதாரணம் தேவை.
ஒரு பெட்டிஷன், டிவிட்டர் செய்வதற்கெல்லாம் தேசத் துரோகம், குண்டாஸ் போன்ற வழக்ககள் தமிழகத்தில்தான் போடப்படுகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் வழக்கு பதிவு செய்வதில்லை. திமுக தலைமையிலான அரசு வந்த ஆறு மாத காலமாகவிட்டது. இதுவரை மக்கள் நலனுக்காக ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை. தமிழக அரசு பிரதமர் மோடியின் திட்டங்களை காப்பியடித்து செயல்படுத்தி வருகிறது. தேர்தல் சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் என்ன வாக்குறுதியளித்தாரோ அதுதான் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் புகாராக உள்ளது, என்றார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி, முன்னாள் எம்.பி ராமலிங்கம், மாநில விவசாயப்பிரிவு தலைவர் நாகராஜன், மாவட்ட தொழில் பிரிவு செயலாளர் விஜய், மாவட்ட செயலாளர் அகிலன், நகர செயலாளர் சரவணன், தேசிய செயற்குழு உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.