தமி்ழிசையை மட்டுமா கண்டித்தார் அமித்ஷா?

தமிழிசையை மட்டுமா கண்டித்தார் அமித்ஷா. அதிருப்தி தெரிவித்த அத்தனை பேரும் வாங்கிக்கட்டிக்கொண்டனர் என பா.ஜ.க.,வினர் கூறினர்.

Update: 2024-06-13 04:35 GMT

தமிழிசை சௌந்தரராஜன் 

தமிழிசையை மட்டுமா அமித் ஷா கண்டித்தார் என்பது குறித்த விளக்கத்தில் சில பாஜவினர் கூறும்போது  அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி இருந்திருந்தால், தி.மு.க-வுக்கு ஓர் இடத்தில்கூட வெற்றி இல்லாமல் போயிருக்கும். கூட்டணி வைக்கலாம் என்று தான் நாங்களும் வியூகம் அமைத்தோம். ஆனால், சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை” என்று வெளிப்படையாகப் போட்டு உடைத்திருக்கிறார்.

இதன் பின்னணி குறித்துப் பேசுகிற கமலாலய சீனியர்கள், “பா.ஜ.க ஒரு தேசியக் கட்சி, ஆனால், அதுவொரு மாநிலக் கட்சி போலவும், அதன் நிறுவனர்தான் தான் என்பது போலவும் நடந்துகொள்கிறார் அண்ணாமலை. மோடி ஜி, அமித் ஷா ஜி குறித்த பேச்சே இல்லாமல், முழுக்க முழுக்கத் தன்னைப் பற்றியே இருக்கும்விதமாகப் பார்த்துக்கொள்கிறார்.

டெல்லி தலைமையுடன் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதன் மூலம் எல்லோரையும் மிரட்டுகிறார். தமிழக பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, சகல அதிகாரங்களும் பொருந்திய ஒருவராகத் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் அண்ணாமலை. அதனால், கட்சியிலுள்ள சீனியர்களையும், பிரபலமானவர்களையும் வைத்து அவர் சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறார்.

உதாரணமாக, தமிழிசை எதிர்பார்த்த தொகுதியை அவருக்குக் கிடைக்கவிடாமல் செய்து, பல டேட்டாக்களைக் காரணமாகச் சொல்லி தென்சென்னை தொகுதியை அவருக்குத் தள்ளி விட்டார் அண்ணாமலை. இதேபோல் மத்திய சென்னையில் குஷ்புவுக்கு சீட் கிடைக்காததற்கும், திருவள்ளூரில் வானதியின் ஆதரவாளர் வெங்கடேசனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கும் பின்னணியில் இருப்பது அண்ணாமலைதான்.

கன்னியாகுமரிக்கான ரேஸில் விஜயதரணியை இறக்கிவிட்டு, பொன்னாருக்கும் கடைசிவரை நெருக்கடி கொடுத்தார். ஒருவழியாக அதிலிருந்து தப்பினார் பொன்னார். அண்ணாமலையின் ‘தனிப்பட்ட வளர்ச்சி’ அரசியலால், இன்று பா.ஜ.க-வால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. இதையடுத்து, கடுப்பில் இருந்த சீனியர்கள் பலரும் டெல்லிக்குப் புகார்களைத் தட்டிவிட்டிருக்கிறார்கள்.

அதில், ‘அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி முறிவுக்குக் காரணம் அண்ணாமலை தான். சீனியர்கள் சொல்வதைக் கேட்காமல் அவர் தன்னிச்சையாகவே செயல்படுகிறார். மூத்த தலைவர்களை வார்ரூம் மூலமாக அவதூறாகப் பேசிவருகிறார்’ என்றெல்லாம் தங்களது ஆதங்கங்களைக் கொட்டியிருக்கிறார்கள்.

அதனால், அண்ணாமலை தரப்பு அவர்மீது கடுப்பிலிருக்கிறது. எனவேதான், ‘தமிழிசையை வடஇந்தியாவுக்கு ஆளுநராக அனுப்புங்கள். அவர் அண்ணாமலையைத் தனியாகச் செயல்படவிட மாட்டார். எஸ்.வி.சேகர், கல்யாணராமன், தமிழிசை என பா.ஜ.க-விலுள்ள திராவிடக் கும்பல்களைக் கட்சியைவிட்டு நீக்க வேண்டும்’ என்றெல்லாம் அண்ணாமலை ஆதரவு நெட்டிசன்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவுசெய்திருந்தார்கள்.

இதில் கடுப்பானதால் தான் ‘எதிர்க்கட்சி இணையதளவாசிகளை எதிர்ப்பது போலவே, உட்கட்சி இணையதளவாசிகளையும் நான் விமர்சிக்கிறேன். உள்ளே நடக்கும் கட்சிப் பிரச்னைகள் பற்றியும், கட்சித் தலைவர்கள் பற்றியும் தவறாக எழுதுவீர்கள் என்றால், முன்னாள் மாநிலத் தலைவர் என்ற முறையில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் எச்சரிக்கிறேன்.

நான் கவர்னராக இருக்க வேண்டுமா, தலைவராக இருக்க வேண்டுமா என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். நான் முடிவு செய்து விட்டேன். தமிழ்நாடு களத்தில்தான் நான் நிற்பேன்’ என அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு எதிராகக் கொதித்து விட்டார் தமிழிசை. பல சீனியர்களுக்கும் இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார் தமிழிசை.

இதற்கிடையே, ஹெச்.ராஜாவின் ஆதரவாளரும், பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவைச் சேர்ந்தவருமான கல்யாணராமன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘`பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சி.பி.ஆர்., தமிழிசை, இல.கணேசன் போன்றோர் அண்ணாமலை தலைமையிலான வார்ரூம் குண்டர்களால் சிறுமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். கட்சியின் பணத்தைக்கொண்டு அண்ணாமலையை விளம்பரப்படுத்தவும், சொந்தக் கட்சித் தலைவர்களையே வசைபாடவும்தான் அண்ணாமலையின் வார் ரூம் செயல் பட்டுவருகிறது.

கட்சியில் முக்கியமானவர்களையெல்லாம் முடித்துவிட வேண்டும் என்று விரும்புகிறார் அண்ணாமலை. கூட்டணி குறித்து தமிழிசையும் வேலுமணியும் குறிப்பிட்டிருப்பது உண்மை. அண்ணாமலை வழக்கம் போல மத்திய தலைமையைத் தவறாக வழிநடத்துகிறார். 2014 தேர்தலை விட இப்போது குறைவான வாக்குகளையே பா.ஜ.க பெற்றிருக்கிறது என்பதுதான் அப்பட்டமான உண்மை.

கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளை, தன்னால் கிடைத்த வாக்குகள் என்று வெற்று தம்பட்டம் அடிக்கிறார். தன்னிடம் கொஞ்சமாவது தார்மிக அறமுள்ள எந்த மனிதனும் இந்தத் தோல்விக்கு ராஜினாமா செய்வார். ஆனால், அண்ணாமலைக்கு நேர்மை குறைவு. அது எனக்குத் தெரியும்’’ என்று வெடித்திருக்கிறார்.

கட்சியின் மாநிலத் தலைமைக்கு எதிராக வெடித்திருக்கும் இந்த உட்கட்சி மோதல்கள், பா.ஜ.க-வின் அகில இந்திய தலைமைக்குத் தலைவலியைக் கொடுத்திருக்கிறது. “இதே நிலை நீடித்தால், அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலிலும் கட்சிக்கு நெருக்கடி ஏற்படும். இதை அகில இந்திய தலைமை உணர வேண்டும்” என்கின்றனர் தொண்டர்கள்.

அண்ணாமலை தவறான நபர்களை வைத்து தவறான அரசியலைச் செய்கிறார். அவர் எதிர்க்கப்பட வேண்டியவர்; ஆபத்தானவர்” என்று கொதித்தார். உட்கட்சிப்பூசல் மெல்ல மெல்லப் புகைந்து கமலாலயக் கூரைக்கு மேல் வரை வந்து விட்டது. எந்நேரமும் பற்றிக்கொள்ளலாம் எனக்கூறுகின்றனர்.

இதனையடுத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவே அமித்ஷா இப்படி ஒரு கண்டிப்பு காட்டியிருக்கிறார். பொதுமேடையில் தமிழிசையிடம் இப்படி கண்டிப்பு காட்டிய அமித்ஷா, இதர தலைவர்களிடம் எப்படி கண்டிப்பு காட்டியிருப்பார் என நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என கூறினர்.

ஆனாலும் ஒரு தேசிய தலைவர், கட்சியின் முன்னாள் தமிழக தலைவர், முன்னாள் கவர்னர் அவரிடம் பொதுமேடையில் அப்படி ஒரு கண்டிப்புக்கட்டவேண்டுமா? அதை கட்சி அலுவலகத்திலோ அல்லது தனியாக அவரை அழைத்தோ கண்டிப்புக் காட்டி இருக்கலாமே என்று சில நடுநிலை அரசியல் நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.

Tags:    

Similar News