நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் அகற்றம்
நீதிமன்ற உத்தரவுப்படி சிவகங்கை கோவில் நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் அகற்றப்பட்டது.
சிவகங்கையில் கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை நீதிமன்ற உத்தரவுப்படி இந்து அறநிலையத் துறையினர் ஜேசிபி மூலம் அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகரில் உள்ள கௌரி விநாயகர் ஆலயத்திற்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை நீதிமன்ற உத்தரவுப்படி இந்து அறநிலைத் துறையினர் இன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றினர்.
கௌரி விநாயகர் ஆலயத்திற்கு சொந்தமான 144 ஏக்கர் 8 சென்ட் பரப்பளவு நிலங்கள் இந்து அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது. இந்த இடத்தில் 9 ஏக்கர் 58சென்ட் நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்கள் போலியாக பட்டா தயாரித்து ஆக்கிரமித்து அந்த இடத்தில் கம்பி வேலி அமைத்து வணிக வளாக கட்டிடம் கட்டி வந்தனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்க வேண்டும் கட்டிடபணிகளை நிறுத்த வேண்டும் என சிவகங்கை நகரச் செயலாளர் துரை.ஆனந்த் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனு அளித்திருந்தார். மேலும், சிவகங்கை மாவட்ட திமுக துணை செயலாளர் சேங்கை மாறன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் ஆதரவாளர்கள் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலத்தை மீட்க வேண்டும் அங்கு நடைபெற்று வரும் கட்டிட பணிகளை நிறுத்த வேண்டும் என கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்குதொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூன் 28-இல் ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறையின் உத்தரவின்படி கட்டிடங்களை அகற்ற வேண்டும் இல்லையெனில் அறநிலை துறையினர் கட்டிடங்களை இடித்து விட்டு அதற்கான செலவை ஆக்கிரமிப் பாளர்களிடம் வசூல் செய்து கொள்ள வேண்டுமென உத்தரவிட்டது.
அதனடிப்படையில் இன்று காலை இந்து அறநிலைத்துறைதுணை ஆணையர் செல்வி தலைமையில் வணிக வளாக கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்றது மூன்று ஜேசிபி இயதிரங்களைக் கொண்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது சிவகங்கை வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். சிவகங்கை டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.