உலககோப்பை செஸ் தொடர் பிரக்ஞானந்தா முன்னேற்றம்
உலக கோப்பை செஸ் தொடரின் 'ரவுண்டு-16' சுற்றுக்கு இந்தியாவின் பிரக்ஞானந்தா முன்னேறினார்;
நான்காவது சுற்றில் அமெரிக்காவின் நகமுராவை வீழ்த்தினார். அஜர்பெய்ஜானில், உலக கோப்பை செஸ் 10வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 10 வீரர்கள், 7 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதன் நான்காவது சுற்றில், உலக தரவரிசையில் 29வது இடத்தில் உள்ள தமிழகத்தின் பிரக்ஞானந்தா 18, உலகின் 'நம்பர்-2' அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா 35, மோதினர். முதலிரண்டு 'கிளாசிகல்' போட்டிகள் 1-1 என 'டிரா' ஆனது. பின், வெற்றியாளரை நிர்ணயிக்க 'ரேபிட்' முறையில் போட்டி நடத்தப்பட்டது.
இதன் இரண்டு போட்டியிலும் சாமர்த்தியமாக விளையாடிய பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். முடிவில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 'ரவுண்டு-16' சுற்றுக்கு தகுதி பெற்றார்.
முதன் முறையாக நகமுராவை வீழ்த்திய பிரக்ஞானந்தா, 'ரவுண்டு-16' போட்டியில் ஹங்கேரியின் பெரெங்க் பெர்க்சை எதிர்கொள்கிறார். மற்றொரு 4வது சுற்றில் இந்தியாவின் குகேஷ் 2.5 - 1.5 என ரஷ்யாவின் எசிபென்கோவை வீழ்த்தி 'ரவுண்டு-16' போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் நிஹால் சரின் 1-3 என ரஷ்யாவின் நெபோம்னியாச்சியிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஏற்கனவே இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, அர்ஜுன் எரிகைசி 'ரவுண்டு-16' போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர். பெண்கள் பிரிவில் ஹரிகா துரோணவள்ளி மட்டும் 'ரவுண்டு-16' போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பி, ஜார்ஜியாவின் பெல்லாவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.