கர்நாடகாவில் மதமாற்ற தடைச் சட்டம் வாபஸ்
கர்நாடகாவில் மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்ப பெறும் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
கர்நாடக மாநிலத்தில் முந்தைய பாஜக ஆட்சியின் போது மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் வாயிலாக கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 25,000 வரை அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு சட்டவிரோதமாக மதமாற்றம் செய்யப்பட்ட நபர் மைனராகவோ, பெண்ணாகவோ அல்லது எஸ்சி/எஸ்டி ஆகவோ இருந்தால், அத்தகைய செயல்களுக்கு மூன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் மதமாற்றம் செய்பவர்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் மதமாற்ற நோக்கங்களுக்காக நடக்கும் திருமணங்கள் செல்லாமல் போகும். மதம் மாறிய ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் காவல்துறையில் புகார் அளிக்கவும் இச்சட்டம் அனுமதிக்கிறது. அதோடு சட்டப்பூர்வமாக தனது சொந்த விருப்பத்தின் பேரில் மற்றொரு மதத்திற்கு மாறுவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் இந்த மதமாற்ற தடைச் சட்ட மசோதா வகுத்துள்ளது.
இந்த சட்டத்தை ஆரம்ப நிலையில் இருந்தே காங்கிரஸ் கட்சியினரும் கிறிஸ்தவ மத தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி பாஜக அரசு கர்நாடக சட்டப்பேரவையில் மதமாற்ற தடை சட்டத்தை நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில் கடந்த கர்நாடாகாவில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனை அடுத்து பாஜக கொண்டு வந்த சர்ச்சைக்குரிய சட்ட மசோதாக்களில் ஒன்றான மதமாற்ற தடை சட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது மதமற்ற தடை சட்டத்தை திரும்ப பெற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனை அடுத்து விரைவில் அச்சட்டம் திரும்ப பெறப்படும் என தெரிகிறது.