சுவை மாறுமா திருப்பதி லட்டு ?
திருப்பதி லட்டின் சுவையினை பாராட்டாத விரும்பி ருசிக்காத நபர்களை பார்க்கவே முடியாது.
திருப்பதி லட்டுவின் சுவைக்கு காரணம் என்ன? என்பது குறித்து எத்தனை பட்டிமன்றம் நடத்தினாலும், விடை காணவே முடியாது. இந்த சுவைக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருளை தாண்டி ஏதோ ஒரு தெய்வீகத்தன்மையும் உள்ளது என்று பக்தர்கள் திடமாக நம்புகின்றனர்.
இப்போதும் திருப்பதி செல்பவர்கள், அங்கு இலவசமாக வழங்கப்படும் லட்டினையும் வாங்கிக் கொண்டு, கூடுதலாக பணம் கொடுத்தும் லட்டு வாங்கி வந்து தனது நெருங்கிய சொந்தங்களுக்கு கொடுப்பது ஒரு நடைமுறையாகவே இருந்து வருகிறது. இந்த திருப்பதி லட்டுக்கு ஏறக்குறைய 300 ஆண்டுகள் வயதுடையது. இதன் சுவையும் மணமும் சேர்த்து வந்த கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்தின் ‘நந்தினி’ நெய்யை இனி வாங்குவதில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக பால் கூட்டுறவு சங்க (KMF) தலைவர் பீமா நாயக் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்திடம் இருந்து இந்த ஆண்டு நெய் கொள்முதல் செய்யப்போவதில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. KMF நிறுவனத்தை விட வேறு ஒரு நிறுவனம் குறைந்த விலைக்கு நெய் விற்பனை செய்ய ஒப்பந்தம் கோரியதை அடுத்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திருப்பதி லட்டின் சுவை மற்றும் மணத்திற்கு ‘நந்தினி’ நெய்யின் தரம் தான் காரணம் என்று தேவஸ்தானம் பலமுறை கூறியுள்ள நிலையில் விலை காரணமாக தற்போது இதை வாங்க மறுத்திருப்பது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
உண்மையில் நந்தினி நிறுவனத்திற்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த திருப்பதி பக்தர்களுக்கும் இது அதிர்ச்சியான செய்தி தான் என்பது திருப்பதி தேவஸ்தானத்திற்கு தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் அவர்கள் இந்த திடமான முடிவை எடுத்துள்ளனர் என்றால் ஏதோ மிகப்பெரிய வலுவான காரணம் இருந்திருக்கும். புதியதாக வாங்கும் நெய்யை பயன்படுத்தி சோதனை முறையில் லட்டு தயாரித்து சுவைத்துப்பார்த்திருப்பார்கள். புதிய நெய் கலந்த லட்டு ஒன்று சுவை அதிகமாக இருக்கும். குறைந்தபட்சம் தற்போது உள்ள சுவை குறையாமலாவது இருந்திருக்கும். இதனால் தான் திருப்பதி தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது என பக்தர்கள் தரப்பிவ் கூறுகின்றனர்.