சமூக ஆர்வலர் டூ டெல்லி முதல்வர்..! யார் இந்த அதிஷி மார்லெனா?
அதிஷி - டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.;
சமூக ஆர்வலராக இருந்து கல்வி அமைச்சராகப் பணி செய்து, தற்போது டெல்லி முதல்வராகப் பொறுப்பேற்கப் போகிறார். கடந்த மார்ச் மாதம் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமீன் கிடைக்க இருந்த நிலையில், ஜூலை மாதம் அதே வழக்கின் விசாரணைக்காக சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை, உச்ச நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து இரண்டு நாட்களில் (செப்டம்பர் 15) ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய அரவிந்த் கெஜ்ரிவால், இரண்டு நாட்களில் ராஜினாமா செய்யப்போவதாகவும், அடுத்து மக்கள் தீர்ப்பிற்குப் பிறகே (தேர்தலுக்குப் பிறகே) முதல்வர் நாற்காலியில் அமர்வேன் என்றும் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவைச் சந்தித்து தனது ராஜினாமா கடித்ததைக் கொடுத்தார். அரவிந்த் கெஜ்ரிவால். அதற்கு முன்பாக தனது வீட்டில் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில், அரவிந்த் கெஜ்ரிவாலால் அடுத்த முதல்வர் பதவிக்கு அதிஷி மர்லேனாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, கட்சி உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. டெல்லி முதல்வராக பதவி ஏற்க அதிஷி உரிமை கோரி உள்ளார். கவர்னரும் ஒப்புதல் அளித்ததால் அதிஷி முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
யார் இந்த அதிஷி?
1981-ம் ஆண்டு அதிஷி பிறந்தார். இவரது பெற்றோர் இருவருமே டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள். இவர் 2001-ம் ஆண்டு இளங்கலை வரலாற்றுப் படிப்பை முடித்துள்ளார். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 2003-ம் ஆண்டு உதவித்தொகை பெற்று முதுகலை வரலாறு படித்துள்ளார்.
இவரது முழுப்பெயர் 'அதிஷி மார்லெனா சிங்'. அவர் பெயரில் வரும் 'மார்லெனா' மார்க்ஸ் மற்றும் லெனின் பெயரை இணைத்துக் குறிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியினர் கூறுவர். ஆனால் 'மார்லெனா' என்பது அவரது பெற்றோர் பெயரிலிருந்து வந்த பெயராகும். 2018-ம் ஆண்டு தேர்தல் காரணங்களுக்காக 'மார்லெனா'வை தனது பெயரில் குறிப்பிடுவதை நிறுத்திவிட்டார் அதிஷி.
அரசியல் டைம்லைன்...
2013: சமூக ஆர்வலராக இருந்து அதிஷி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அப்போதே இவர் கட்சியில் கொள்கை திட்ட உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியுள்ளார்.
2015: மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஜல் சத்ய கிரகத்தில் கலந்து கொண்டார்.
2015 - 2018: டெல்லி துணை முதல்வர் சிசோடியாவிற்குக் கல்வித்துறை தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் ஆலோசகராக இருந்துள்ளார்.
2019: டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில், பா.ஜ.க., வேட்பாளர் கௌதம் கம்பீரிடம் 4.5 லட்ச வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
2020: டெல்லி சட்டமன்ற தேர்தலில் தெற்கு டெல்லியில் உள்ள கல்காஜி தொகுதியில் பா.ஜ.க.,வை எதிர்த்து களம் கண்டார். அதில், 11,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2023: கல்வி, பொதுப்பணித்துறை, கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
கல்விப்பணி...
இவர் ஆரம்பத்திலிருந்தே ஆம் ஆத்மி ஆட்சியின் கல்வித்துறை மாற்றங்களில் முக்கிய நபராக இருந்துள்ளார். அதில் டெல்லி அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, பள்ளி மேலாண்மை கமிட்டி அமைப்பு, தனியார்ப் பள்ளிகளில் கட்டண உயர்வைத் தடுத்தது ஆகியவை குறிப்பிடத்தக்கது.
இவர், பள்ளி பாடத்திட்டத்தில் 'ஹேப்பிநஸ்' என்பதை அறிமுகப்படுத்தியது மிக மிக முக்கியமானது. ஹேப்பிநஸ் பாடத் திட்டம் மாணவர்களின் சமூக மற்றும் உணர்வு பயிற்றுதலை ஊக்குவிக்கிறது.
டெல்லி துணை முதல்வர் சிசோடியா மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதானதிலிருந்தே, ஆம் ஆத்மி அரசின் முக்கிய முகமாக இருந்து வந்த இவரை, இனி டெல்லி முதல்வராகப் பார்க்கலாம்.