செயற்கை நுண்ணறிவில் (AI) பின்தங்கி உள்ளதா இந்தியா?
செயற்கை நுண்ணறிவு(AI) ஆராய்ச்சியில் உலகளவில் வெறும் 1.4% பங்களிப்புடன் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.;
இந்திய நாட்டில் மிகப்பெரிய தொழில்நுட்ப திறன்கள் கொண்டு இருந்தாலும், AI ஆராய்ச்சியில் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. உலகின் முதல் 10 AI ஆராய்ச்சி மாநாடுகளில் இந்தியாவின் காகித பங்களிப்பு(Research Papers) வெறும் 1.4 சதவீதத்துடன் (2018-2023) 14-வது இடத்தில் உள்ளதாக, Change Engine ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.
AI ஆராய்ச்சியில் அமெரிக்காவும் சீனாவும் முறையே 30.4% மற்றும் 22.8% பங்குகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் AI ஆராய்ச்சியில் இந்தியா 5% உலகளாவிய பங்கைப் பெற, தற்போதைய AI ஆராய்ச்சியை 40% வரை அதிகரிக்க வேண்டும் என்று Change Engine ஆய்வமைப்பு கூறியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு அதாவது ஏஐ உலகில் அறிமுகம் ஆன போதே, அதில் நன்மைகளை விட தீமைகளே அதிகம் உள்ளன. இந்த தொழில்நுட்பத்தை மிகவும் பக்குவமாக பயனுள்ள வகையில் கையாள வேண்டும் என்று இந்திய பிரதமரே எச்சரித்தார். அமெரிக்காவை பொறுத்தவரை அதிக சுதந்திரம் மிகுந்த நாடு. அதனால் என்ன நடந்தாலும் அவர்களுக்கு பின்னடைவு என்பது குறைவு. அவர்கள் கலாசாரம், பண்பாடு ஏஐ ஆபத்துக்களை மிகவும் பக்குவமாக எதிர்கொள்ளும்.
சீனாவோ மிகுந்த கட்டுப்பாடு கொண்ட நாடு. அந்த நாட்டு மக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வார்கள். சீனாவில் யாராவது அத்துமீறினால், உடனே மிக கடுமையான அல்லது கொடுமையான தண்டனை வழங்கப்படும். இந்தியா உலக அளவில் அதிக சுதந்திரம் கொண்டு, சிறப்பான பண்பாடு, கலாச்சாரம், கட்டுப்பாடான குடும்ப வாழ்க்கை கொண்ட அமைதியான நாடு. இந்தியாவில் ஏஐ தொழில் நுட்பத்தால், சமூக பாதிப்புகள் ஏற்பட்டால், மிகவும் பெரிய அளவில் சேதாரங்கள் உண்டாகும்.
எனவே ஏஐ தொழில்நுட்பத்தை மிகுந்த கட்டுப்பாடுகளுக்கு இடையே பயன்படுத்த வேண்டும் என இந்தியா முடிவு செய்துள்ளது. இதனால் ஏஐ விதிமீறல்களை தடுக்க தேவையான கட்டுப்பாடுகளை உருவாக்கிய பின்னரே அதனை மிக சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிக்க இந்தியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மற்றபடி ஏஐ தொழில் நுட்பத்தில் இந்தியா பின்தங்கி விடவில்லை. கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தி வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.