இந்தியா வருகிறார் ஜோபைடன்; என்ன செய்யப்போகிறார் ஜி ஜின்பிங்?
ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ஜி20 என அழைக்கப்படுகிறது.
இதனிடையே, ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா தலைமையில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 7ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வர உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் 7ம் தேதி இந்தியா செல்வார் என வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், 8ம் தேதி அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜோ பைடன் மற்றும் மோடி ஆலோசனை நடத்த உள்ளனர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தன்னால் வர இயலாது. தனக்கு பதிலாக தனது நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்பி வைக்கிறேன் என நம் பிரதமர் மோடியிடம் போனில் பேசி கூறி விட்டார். இப்போது சிக்கலில் மாட்டி விழி பிதுங்குவது ஜி ஜின்பிங் தான்.
உக்ரைன்- ரஷ்யா மோதலில் இந்தியா போல் நடுநிலை எடுக்காமல், ரஷ்யாவிற்கு ஆதரவு நிலையை எடுத்தது சீனா. தவிர தைவான் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் சீன- அமெரிக்க உறவு சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு வரும் ஜோபைடன் சீன அதிபரை சந்திக்க வாய்ப்பு இல்லை என வெளிப்படையாக அமெரிக்கா அறிவித்து விட்டது. அப்படி தன்னை ஒரு கூட்டத்தில் வைத்து அமெரிக்க அதிபர் கண்டுகொள்ளாமல் சென்று விட்டால், அசிங்கமாகி விடும் என சீனா உஷாராகி விட்டது.
இன்னொரு சிக்கல், இந்திய-சீன எல்லை மோதல். தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர் நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் பேசிய பின்னரும் சீன அதிபர், எல்லை விவகாரத்தில் தவறான வரைபடத்தை வெளியிட்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் வம்பு செய்ய தொடங்கியுள்ளார். ஜி-20 மாநாட்டிற்கு அவர் வந்தால் நிச்சயம் பிரதமர் மோடி சீனாவின் அடாவடிக்கு விளக்கம் கேட்காமல் விடமாட்டார். இந்த சிக்கலையும் சீனா எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறது. இதனால் சீன அதிபர் கிட்டத்தட்ட ஜி-20 மாநாட்டிற்கு வரமாட்டார் என்றே இதுவரை வெளியான தகவல்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
இந்த நிலையில், சீன அதிபர் வராவிட்டாலும் அந்நாட்டின் பிரதமர் பங்கேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எப்படியிருந்தாலும் ஜி-20 மாநாட்டு விஷயத்தில் புடின் இவ்வளவு நெருக்கடியிலும் மிகச்சரியாக கையாண்டுள்ளார். ஆனால் சீன அதிபர் சொதப்பி விட்டார் என இப்போதே உலக நாடுகளின் தலைவர்கள் விமர்சனங்களை தொடங்கி உள்ளனர்.