ஜம்மு- காஷ்மீரில் ஊடுருவிய இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு- காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.;
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இப்படி சல்லடை போட்டு தேடும் பணியில் ஈடுபடும் போது ராணுவத்தினருக்கும் அவர்களுக்கும் இடையே சண்டையும் நடப்பது உண்டு. இதுபோன் சண்டையின்போது தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் த ஊடுருவியுள்ள ரகசிய திட்டம் தொடர்பாக பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம், அல்ஷிபோரா பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதைக் கண்டு அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த 2 தீவிரவாதிகளும் மோரிபத் மக்பூல் மற்றும் ஜசீம்அல்லது அப்ரர் என்று அடையாளம் காணப்பட்டது. இவர்கள் லஸ்கர் -இ – தொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். உயிரிழந்த தீவிரவாதிகளில் அப்ரர் என்பவர் காஷ்மீரி பண்டிட் சஞ்சய் சர்மா கொலையில் தொடர்புடையவர் ஆவார்.
பிப்ரவரி 23 அன்று புல்வாமாவின் அச்சன் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வெளியே காஷ்மீரி பண்டிட் சஞ்சய் சர்மா கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கியின் கிராமக் கிளையில் ஏடிஎம் காவலாளியாக இவர் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே துப்பாக்கிச் சண்டையை அடுத்து ஷோபியான் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.