கலக்கம் தரும் மணிப்பூர்.........அமித்ஷா அவசர ஆலோசனை
மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.;
பைல் படம்.
மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் தீவிரமடைந்துள்ளதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மணிப்பூர் மட்டுமல்லாது இதர வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். எனவே கர்நாடக மாநிலத்தின் தேர்தல் பரப்புரையில் அவர் ஈடுபடமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கு புறமும் மலைகள் சூழ்ந்துள்ள மணிப்பூர் மாநிலத்தில் தற்போது வன்முறை மேகம் சூழந்திருக்கிறது. மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின சமூக மக்களுக்கும் பழங்குடியினர் அல்லாத சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இந்த வன்முறைக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இங்குள்ள மலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் பழங்குடியினர் அதிக அளவில் இருந்தாலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 53 சதவிகிதம் பேர் பழங்குடியின சமூகமல்லாதோர் (மைத்தேயி சமூகத்தினர்) இருக்கின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கான சலுகைகள், இடஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களில் அடிக்கடி பிரச்னை எழுகிறது. எனவே இவர்களும் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதற்கு பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இந்த மலைகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் எங்களுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமை இதன் மூலம் நீர்த்து போய் விடும் என்று கூறுகின்றனர். இப்படியாக இரு தரப்பினருக்கும் மத்தியில் அடிக்கடி சிறு சிறு மோதல் சம்பங்கள் நடைபெறுவதுண்டு.
பெரும்பான்மையாக இருக்கும் மைத்தேயி சமூகத்தனரின் வாக்குகளை பெற அவர்களும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று சமீபத்தில் நடந்த தேர்தலில் வாக்குறுதியாக பாஜக கொடுத்திருந்தது. இதனையடுத்து பாஜக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்து விட்டது. எனவு தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மைத்தேயி சமூகத்தினர் நெருக்கடி கொடுக்க தொடங்கினர். மறுபுறம் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 19ம் தேதி மைத்தேயி சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் இணைப்பது குறித்து பாஜக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் பேரும் போராட்டங்களை நடத்த தொடங்கினர். பழங்குடி மாணவர் சங்கம் மணிப்பூர் (ATSUM) சார்பில் புதன்கிழமை பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திட்டமிட்டதை போல சேனாபதி, உக்ருல், காங்போக்பி, தமெங்லாங், சுராசந்த்பூர், சண்டேல் மற்றும் தெங்னௌபல் என 7 மாவட்டங்களில் இந்த பேரணி நடைபெற்றது. ஆனால் இதற்கு போட்டியாக பழங்குடியினர் அல்லாதவர்களும் பேரணி நடத்தினர். இப்படியாக நடத்தப்பட்ட போட்டி பேரணியானது சுராசந்த்பூர் மாவட்டத்தில் சந்தித்துக் கொண்டபோது கலவரமாக வெடித்து.
இந்த வன்முறையில் ஏராளமான வீடுகள், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழ்ந்த பகுதியும் இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் நிலைமையை கட்டுப்படுத்த ராணுவம், துணை ராணுவம், அசாம் ரைபிள் படைபிரிவு, அதிரடி படையினர் ஆகியோர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கலவரம் மற்ற மாநிலங்களுக்கு பரவாமல் இருக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்டை மாநிலங்களான மிசோரம், அசாம், நாகாலாந்து உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த கலவரத்தில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதால் விஷயம் மேலும் பெரியதாக வெடிக்காமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த கலவரத்தையடுத்து மாநிலத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அமித்ஷா நிலைமையை உற்றுநோக்கி வருகிறார்.
எனவே கர்நாடாக மாநில தேர்தலுக்காக திட்டமிடப்பட்டுள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் அவர் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் பிரசாரத்திற்காக ஏறத்தாழ அனைத்து பாஜக தலைவர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். அமித்ஷாவும் இதில் களமிறங்கி பிரசாரம் மேற்கொண்டிருந்தார். ஆனால் இந்த மணிப்பூர் பிரச்னை மேலெழுந்ததையடுத்து அவர் இனி அதில் முழு கவனம் செலுத்துவார் என்று சொல்லப்படுகிறது. தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு நாட்களாக பற்றி எரிந்த கலவம், மணிப்பூர் மாநிலத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என ராணுவம் அறிவித்துள்ளது.