உருமாறிய கொரோனா ஒமிக்ரான்: மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

புதிய தொற்றாளர்கள் வேலூரில் 37.63 %, திருவள்ளூரில் 14.24 %, சென்னையில் 16.09 % கடந்த ஒரு வாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2021-12-04 11:33 GMT

உருமாறிய கொரோனா ஒமிக்ரான் கண்காணிப்புக் குறித்து தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உருமாறிய கொரோனா ஒமிக்ரான் குறித்து மாநிலங்களுக்கு 2021 நவம்பர் 27 தேதியிட்ட கடிதம் அனுப்பபட்டிருந்தது. சர்வதேச பயணிகளின் கண்காணிப்பை விரிவுப்படுத்தவும், தீவிரமாக பரவிவரும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், நோய்தொற்று ஏற்பட்ட தனிநபர்கள் உடனான இதர நபர்களின் தொடர்பை முறையாக கண்டறியவும் பதினான்கு நாட்களுக்கு கண்காணிப்பில் வைத்திருக்கவும், நோய்தொற்று உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை உடனடியாக INSACOG பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பிவைக்கவும், (ஊரக பகுதிகள் மற்றும் குழந்தைகளுக்கான நோய்தொற்று உட்பட) சுகாதார கட்டமைப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மிக முக்கிய கவனம் செலுத்தவும், அனைத்து மாநிலங்களும் அறிவுறுத்தப்பட்டிருந்தன.

டிசம்பர் 3-ம் தேதியுடன் முடிவடைந்த 30 நாட்களில், தமிழ்நாட்டில் 23,764 புதிய தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். வேலூரில் 37.63 சதவீதமும், திருவள்ளூரில் 14.24 சதவீதமும், சென்னையில் 16.09 சதவீதமும் தொற்றாளர்கள் கடந்த ஒரு வாரத்தில் அதிகரித்துள்ளனர்.

இந்த சூழலில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும், உயிரிழப்பைத் தடுக்கவும், பரிசோதனை தொடர்பு கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல், கொரோனா நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றுதல் ஆகிய உத்திகள் மூலமாக நிலையை கட்டுக்குள் வைத்திருக்கத், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கொரோனா தொற்றுக்கு எதிரான ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வழங்கும். இவ்வாறு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News