Breaking News: ஜம்மு காஷ்மீர் ராணுவ வாகனத்திற்குள் குண்டு வெடிப்பு: 3 வீரர்கள் காயம்
Kashmir Blast: சோபியானில் தனியார் வாகனம் வெடித்ததில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர், வெடிவிபத்துக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்;
தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் இன்று ராணுவ வீரர்கள் பயணித்த தனியார் வாகனம் மர்மமான முறையில் வெடித்ததில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் காயமடைந்தனர். குண்டுவெடிப்பின் தன்மை குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
ஷோபியானின் செடோவ் கிராமத்தில் ராணுவத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு தனியார் வாகனத்தில் வெடிப்பு நிகழ்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்பில் வீரர்கள் பயணித்த தனியார் பிக்-அப் வேனின் முன் பகுதி சேதமடைந்தது. இதில் 15 கர்வால் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த வீரர்கள் உடனடியாக ஷோபியானில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் ஸ்ரீநகரில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த வீரர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தனர்.