ரூ.18 லட்சத்தை தின்ற கறையான்: பெண் கதறல்..!
உத்தர பிரதேசத்தில், வங்கி லாக்கரில் வைத்திருந்த, 18 லட்சம் ரூபாயை கறையான்கள் அரித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
உ.பி.,யின், மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அல்கா பதக்,2022ம் ஆண்டு அக்டோபரில், பாங்க் ஆஃப் பரோடா வங்கியின், ஆஷியானா கிளையில் வங்கி லாக்கர் வைத்திருந்தார். இந்த லாக்கரில், தன் மகளின் திருமணத்துக்காக, 18 லட்சம் ரூபாயை அவர் சேமித்து வைத்திருந்தார்.
சமீபத்தில், லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க, அல்கா பதக்கை வங்கி ஊழியர்கள் அழைத்தனர். இதன்படி, வங்கிக்கு வந்த அவர், தன் லாக்கரை திறந்து பார்த்தார். அப்போது, அதில் வைக்கப்பட்டிருந்த, 18 லட்சம் ரூபாய் ரொக்கம் கறையான்களால் அரிக்கப்பட்டதை பார்த்து, அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனை கண்டு மனம் உடைந்து கதறி அழுத அல்காபதக் இது குறித்து வங்கி ஊழியர்களிடம் புகார் அளித்தார்.
'இந்த சம்பவம் குறித்து வங்கி தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம்' என, வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். ரிசர்வ் வங்கியின் புதிய விதிப்படி, வங்கி லாக்கரில் பணத்தை வைப்பது தடை செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் லாக்கர் ஒப்பந்தத்திலும், நகைகள், ஆவணங்கள் தவிர, லாக்கரில் ரூபாய் நோட்டுகளை வைக்கக் கூடாது என்றும், திருட்டு, கொள்ளை, தீ விபத்து போன்ற சம்பவங்களால் இழக்கும் பொருட்களுக்கு மட்டுமே வங்கி பொறுப்பு என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் இந்த பெண்ணுக்கு கரையான் தின்ற 18 லட்சம் ரூபாய் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ரிசர்வ் வங்கி லாக்கரில் பணம் வைக்கக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டவுடனேயே வங்கிக்கிளையின் நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு லாக்கர்களில் இருக்கும் பணத்தை சேமிப்பில் அல்லது உங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி இருக்க வேண்டும்.
அதை செய்யத் தவறிய வங்கியே அந்தப்பெண்ணின் பணத்துக்கு பொறுப்பாக முடியும். லாக்கர் வைத்துள்ள வங்கிக்கிளை கறையான் பாதுகாப்பும் செய்திருக்க வேண்டாமா..? பின்னர் எப்படி அது பாதுகாப்பு லாக்கர் (Safety Locker)என்று கூறமுடியும்? சட்டப்படி அந்தப்பெண் அணுகினால் வங்கிக்கிளை பணம் கொடுக்கவேண்டிய நிலை வரலாம்.