அத்துமீறும் கருத்து சுதந்திரம் : கொந்தளித்த சுப்ரீம் கோர்ட்..!
சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இதுவரை இப்படி ஒரு கடும் அதிருப்தி வெளியானதில்லை.;
இந்திய அரசியல் வரலாற்றில் தமிழக அரசியல் களத்தை போல் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் எந்த மாநிலத்திலும் எழுந்தது இல்லை. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி என பலரும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தாங்கள் குறி வைக்கும் நபரை விமர்சித்து வதைத்து எடுத்து விடுகின்றனர்.
குறிப்பாக அரசியல் விமர்சனங்கள் டிக்டாக், யூடியூப் ஷார்ட்ஸ், இன்ட்ஸ்ட்ரா ரீல்களில் வெளியாகும் போது பார்வையாளர்கள் அதிகம் கிடைக்கின்றனர். இப்படி அதிக பார்வையாளர்களை பெற வேண்டும் என்பதற்காக அத்துமீறி கருத்துக்கள் வெளியிடுபவர்களும் அதிகம் உள்ளனர். சில விமர்சகர்கள் மட்டும் மிக, மிக நாகரீகமாகவும், நேர்த்தியாகவும் விமர்ச்சிக்கின்றனர்.
இது ரசிக்கும் வகையில் உள்ளது. ஆனால் பலர் கருத்து என்ற பெயரில் மிகவும் மோசமான வார்த்தைக் கோர்வைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பல சங்கடமான வார்த்தைகள், தனிமனித தாக்குதல்கள், தனிமனித மனதை உடைக்கும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் கூட ஒரு அரசியல் வி.ஐ.பி., ‘நாய் கூட இப்போ பி.ஏ., படிக்குது’ என கூறியதை மக்கள் மன வருத்தத்துடன் எதிர்கொண்டனர்.
இப்படி வார்த்தைகளை விட்டுத்தான் சவுக்கு சங்கர் சிக்கிக்கொண்டார். இவரது கைது வழக்கு இப்போது சுப்ரீம் கோர்ட்டில் போய் நிற்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், சவுக்கு சங்கர் வெளியிட்ட கருத்துக்கள், பயன்படுத்திய வார்த்தைகள், அப்படி பேசும் போது அவர் காட்டிய உடல்மொழி அத்தனையையும் பார்த்து கொந்தளித்து விட்டனர்.
அவர்கள் கடுமையாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதுவரை சுப்ரீம்கோர்ட் கருத்து சுதந்திரம், விமர்சனங்களுக்கு எதிராக இப்படி ஒரு கோபத்தை வெளிப்படுத்தியதில்லை. சவுக்கு மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய அவரது தாயார் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனத்தை விளாசித்தள்ளி விட்டது.
தன்னுடை எல்லை மீறிய பேச்சு, நடத்தையால் எல்லா விதமான எல்லைகளையும் தாண்டும் வகையில் சவுக்கு சங்கர் நடந்து கொண்டுள்ளார் என்றும் கூறியுள்ளது.
ஏன் இப்படி ஒழுக்கமற்ற முறையில் சவுக்கு சங்கர் பேசியுள்ளார், நடந்துகொண்டார் என்று எங்களுக்கு தெரியவில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அவர் இப்படி சமூக வலைதளம், ஊடகம் மூலம் கொதித்துக்கொண்டே இருக்க என்ன காரணம், அவரை கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் எனவும் கூறியுள்ளனர். ஒரு படி மேலே போய் உயர்நீதிமன்றத்தில் கூட கண்ணியமான முறையில் சவுக்கு சங்கர் நடந்து கொள்ளவில்லை என்பது தெரிகிறது எனவும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இப்படி கடும் அதிருப்தியை பதிவு செய்த உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கும் அளவிற்கு அவர் சமூகத்திற்கு ஆபத்தானவரா என கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
சவுக்கு சங்கருக்கு எதிரான கருத்துகளை உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ள நிலையில், அவர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்தாவது கேள்விக் குறியாகியுள்ளது. உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தி உள்ள இந்த அதிருப்தி, சவுக்கு சங்கருக்கு மட்டும்தான் என நினைக்காதீர்கள். ஒட்டுமொத்த கருத்து கந்தசாமிகளுக்கும் இது பொருந்தும். இனியாவது அரசியல் களத்தில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அத்துமீறி விமர்சிக்காதீர்கள். நாகரீகமான கருத்துக்களை மட்டும் சொல்லுங்கள் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.