இந்தியாவில் ஷேக் ஹசீனா...! வங்கதேச உறவை பாதிக்குமா?
ஷேக்ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பதால், இந்தியா- வங்கதேச உறவுகள் பாதிக்கப்படாது என அந்த நாடு அறிவித்துள்ளது.;
சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதற்கிடையில், அவர் இங்கிலாந்தில் குடியேறவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட செய்தி எதுவுமில்லை.
அதைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத், `ஷேக் ஹசீனாவின் உயிரை பாதுகாக்கும் விதமாக இந்தியாவின் விரைவான நடவடிக்கைகளுக்காக, இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வங்கதேச தலைநகர் டாக்காவில், வங்கதேசத்தின் வெளிநாட்டு தூதர்களுடனான சந்திப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து, தற்போதைய வங்கதேச அரசின் வெளியுறவு ஆலோசகர் முஹம்மது தௌஹித் ஹுசைன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததாக ஆரம்பத்தில் புரிந்து கொள்ளப்பட்டது. இதனால் இரு நாடுகளின் உறவும் மிகப்பெரிய பிரச்னையாக மாறும் எனக் கூறப்பட்டது. ஆனால், உண்மையான நட்பு என்பது பரஸ்பர ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டது.
நாங்கள் எப்பொழுதும் இந்தியாவுடன் எங்களின் நல்லுறவை பேண பாடுபடுவோம். யாரேனும் ஒருவர் ஒரு நாட்டில் தங்குவதால், அந்தக் குறிப்பிட்ட நாட்டுடனான உறவுகள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்." எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், `` இந்தியாவில் தங்குவது குறித்த ஷேக் ஹசீனாவின் திட்டங்களுக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவருடைய திட்டங்களைப் பற்றிய எந்த அறிவிப்பும் எங்களிடம் இல்லை. ஷேக் ஹசீனா தான் இது தொடர்பான விவரங்களை வெளியிட்டு, விஷயங்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
வெளிநாட்டு ஆலோசகருடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சீன தூதர் யாவ் வென்னும் இருந்தார். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``அரசியல் மாற்றம் என்பது வங்கதேசத்தின் உள்விவகாரம். எந்த நாட்டின் விவகாரங்களிலும் தலையிடுவது சீனாவின் கொள்கையல்ல. எனவே, இருநாடுகளின் மூலோபாய உறவின் நோக்கத்தை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.