பாஜக-வில் இணைகிறார் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன்..!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் பா.ஜ.க.,வில் இணைகிறார்.;

Update: 2024-08-28 05:19 GMT

அமித்ஷாவுடன் சம்பாய் சோரன்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், நிலமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டபோது, சம்பாய் சோரனுக்கு முதல்வராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. 2 பிப்ரவரி, 2024 முதல் 3 ஜூலை, 2024 வரை ஜார்க்கண்டின் முதலமைச்சராக அவர் பதவி வகித்தார். ஹேமந்த் சோரன் விடுவிக்கப்பட்டதும் மீண்டும் முதல்வர் பதவியை அவரே மீட்டுக்கொண்டார். இந்த நிலையில், சம்பாய் சோரன் பா.ஜ.க-வில் இணையவிருப்பதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ``என் முழு வாழ்க்கையையும் எந்தக் கட்சிக்காக அர்ப்பணித்தேனோ, அந்தக் கட்சியில் எனக்கு எந்த மரியாதையும் இல்லை. பல அவமானகரமான சம்பவங்கள் நடந்தன. அதை நான் இப்போது குறிப்பிட விரும்பவில்லை. இத்தனை அவமானங்களுக்கும் அவமதிப்புகளுக்கும் பிறகு, மாற்றுப் பாதையைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கான பா.ஜ.க-வின் தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா,``இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலின் போது, சம்பாய் சோரன் பா.ஜ.க-வில் சேர்ந்து எங்களை பலப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் சம்பாய் சோரன், அமித் ஷாவைச் சந்திக்கும் படத்தைப் பதிவிட்ட ஹிமந்த பிஸ்வா சர்மா, ``ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், நமது நாட்டின் புகழ்பெற்ற பழங்குடியின தலைவருமான சம்பாய் சோரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அவர் ஆகஸ்ட் 30-ம் தேதி ராஞ்சியில் அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க-வில் இணைவார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Tags:    

Similar News