தனிநபர் கடன் விதிமுறைகள் : கடுமையாக்கியது ரிசர்வ் வங்கி..!
தேசிய மயமாக்கப்பட்டவங்கிகளில் தனிநபர் கடன் வழங்கும் நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.;
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கான விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி மேலும் அதிகரித்து உள்ளது. இதைத் தொடர்ந்து, தனிநபர் கடன்களுக்கான 'ரிஸ்க் வெயிட்டேஜ்' 25 சதவீத புள்ளிகள் உயர்த்தப்பட்டு, 125 சதவீத புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும் வீடு, கல்வி, வாகனம், தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கான கடன்கள், தொடர்ந்து 100 சதவீத ரிஸ்க் வெயிட்டேஜ் கொண்டதாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக ரிஸ்க் வெயிட்டேஜ் விதிக்கப்பட்டால், அந்த பிரிவில், வங்கிகளின் கடன் வழங்கும் தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது என்பது பொருள். வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் வரவுகள் மீதான ரிஸ்க் வெயிட்டேஜும் 25 சதவீத புள்ளிகள் உயர்த்தப்பட்டு, முறையே 150 சதவீத புள்ளிகளாகவும், 125 சதவீத புள்ளிகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், நுகர்வோர் கடன் பிரிவின் சில உட்பிரிவுகளில், கடன் வளர்ச்சி அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, வங்கிகள் கண்காணிப்பு நெறிமுறைகள், ரிஸ்க்குகளை கண்டறிந்து, அவற்றை சரி செய்யத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.