பிரதமருடன் உரையாட ஒரு கோடி பேர் பதிவு செய்து சாதனை

தேர்வு குறித்த உரையாடல் 2024-க்கு ஒரு கோடி பேர் பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர்.;

Update: 2024-01-05 15:17 GMT

பிரதமர் மோடி (கோப்பு படம்)

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடனான பிரதமர் திரு நரேந்திர மோடியின் கலந்துரையாடல் திட்டத்தின் 7 வது பதிப்பு "தேர்வு குறித்த உரையாடல் 2024"-ல் இன்று வரை, மைகவ் இணையதளத்தில் 1 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். இந்தத் தனித்துவமான நிகழ்வில் பங்கேற்கவும், பிரதமருடன் கலந்துரையாடவும் ஆர்வமாக உள்ள நாடு தழுவிய மாணவர்களிடையே பரந்த உற்சாகத்தை இது காட்டுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தேர்வு குறித்த உரையாடல் என்ற இந்தத் தனித்துவமான கலந்துரையாடல் நிகழ்ச்சியை உருவாக்கினார். இதில் நாடு முழுவதிலுமிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவருடன் தொடர்பு கொண்டு தேர்வுகள் மற்றும் பள்ளிக்குப் பிந்தைய வாழ்க்கை தொடர்பான விஷயங்கள் குறித்து உரையாடுகின்றனர். கல்வி அமைச்சகத்தின் சார்பில் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்நிகழ்வு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, இந்நிகழ்ச்சி 2024, ஜனவரி 29 அன்று காலை 11 மணி முதல் புது தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள ஐ.டி.பி.ஓவில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் சுமார் 4,000 பேர் பிரதமருடன் கலந்துரையாட உள்ளனர். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் மற்றும் கலா உத்சவ் மற்றும் வீர் கதா போட்டியில் வெற்றி பெற்றவர்கள் முக்கிய நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட உள்ளனர்.

ஆன்லைன் எம்.சி.க்யூ போட்டி மைகவ் இணையதளத்தில் 2023, டிசம்பர் 11 முதல் 2024, ஜனவரி 12 வரை, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் நேரலையில் போட்டியில் பங்கேற்று வருகின்றனர். 2024 ஜனவரி 5 ஆம் தேதி நிலவரப்படி, 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் சுமார் 2 லட்சம் பெற்றோர்கள் இதுவரை பதிவு செய்துள்ளனர்.

இளைஞர்களுக்கு மன அழுத்தம் இல்லாத சூழலை உருவாக்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 'தேர்வு வீரர்கள்' என்ற பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாக தேர்வு குறித்த உரையாடல் உள்ளது.

ஒவ்வொரு குழந்தையின் தனித்துவம் கொண்டாடப்படும், ஊக்குவிக்கப்படும் மற்றும் தன்னை முழுமையாக வெளிப்படுத்த அனுமதிக்கப்படும், சூழலை வளர்ப்பதற்காக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தை ஒன்றிணைக்க பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் உந்தப்பட்ட இயக்கம் இது. இந்த இயக்கத்திற்கு உத்வேகம் அளிப்பது பிரதமர் நரேந்திர மோடியின் 'தேர்வு வீரர்கள் ' என்ற புத்தகமாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு, முக்கிய நிகழ்வாக, 2024 ஜனவரி 12 அதாவது இளைஞர் தினம் முதல் 2024 ஜனவரி 23 வரை, பள்ளி அளவில் மாரத்தான் ஓட்டம், இசைப் போட்டி, மீம்ஸ் போட்டி, தெருக்கூத்து, மாணவர் – தொகுப்பாளர் – மாணவர் - விருந்தினர் கலந்துரையாடல் போன்ற மகிழ்ச்சியான கற்றல் நடவடிக்கைகள் நடைபெறும். 2024 ஜனவரி 23 ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தியை முன்னிட்டு, நாடு முழுவதும் 500 மாவட்டங்களில் ஓவியப் போட்டி சந்திரயான், இந்தியாவின் விளையாட்டு வெற்றி போன்ற தலைப்புகளில் நடைபெறும். இந்த நிகழ்வு, தேர்வுகள் வாழ்க்கையின் கொண்டாட்டமாக எவ்வாறு இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.

சுமார் 2050 பங்கேற்பாளர்கள் மைகவ் இணையதளத்தில் உள்ள கேள்விகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மேலும் பிரதமரால் எழுதப்பட்ட இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியான தேர்வு வீரர்கள் புத்தகம் மற்றும் சான்றிதழை உள்ளடக்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

Tags:    

Similar News