ராணுவத்துக்கு 8 ஏக்கர் பங்களா : நன்கொடை கொடுத்த டாடா..!

ராணுவத்திற்கு ஊட்டியில் எட்டு ஏக்கரில் பரந்து விரிந்திருந்த தனது பங்களாவை இலவசமாக வழங்கினார் டாடா.

Update: 2024-10-13 03:22 GMT

மறைந்த ரத்தன் டாடா 

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ‘தி ரத்தன் டாடா ஆபீசர்ஸ் ஹாலிடே ஹோம்’ டாடா குழும அறக்கட்டளைகளின் சேவை மரபைப் போற்றும் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது.

நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்த தங்கும் விடுதியின் சுவாரஸ்ய பின்னணி  குறித்து நம்மிடம் பகிர்ந்த நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் வேணுகோபால் தர்மலிங்கம் , " மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் தாத்தா சர். ரத்தன்ஜி டாடா, ஜாம்செட்ஜி டாடாவின் 2- வது மகன் ஆவார். சர். ரத்தன்ஜி கலை ஆர்வலராகவும், கொடையுள்ளத்தில் தாராள மனப்பான்மை கொண்டவராகவும் இருந்தார். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நன்கொடைகளை அளித்தவர். 1916- ல் ஆங்கிலேய அரசு அவருக்கு `நைட்’ பட்டம் வழங்கியது. சர் ரத்தன்ஜி 1893-ல் நவாஜ்பாயை மணந்தார்.

1900-ம் ஆண்டில் ஊட்டி பெய்டன் சாலையில் 8 ஏக்கர் நிலத்தில் அமைந்திருந்த பிரிட்டிஷ் பங்களாவை வாங்கினர். லண்டன் நகரின் வடமேற்கில் உள்ள ஒரு மலையின் பெயரான ‘ஹார்ரோ ஆன் தி ஹில்’ என்ற பெயரையே அதற்கு சூட்டப்பட்டது. 1841-ம் ஆண்டுக்கு முன்பே கட்டப்பட்ட இந்த பங்களா, ஊட்டியில் பழமையான பங்களாக்களில் ஒன்றாக இருக்கிறது . பின்னர், அதற்கு ‘ஹார்னஸ் ஆன் தி ஹில்’ என்று பெயரிடப்பட்டது.


சர்.ரத்தன்ஜி ஊட்டியில் குறுகிய காலமே தங்கியிருந்தார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், 1916-ல் இங்கிலாந்துக்கு சென்றார். அங்கு அவர் 1918-ல் உயிரிழந்தார். அவரது மனைவி நவாஜிபாய் டாடா மும்பைக்கு குடிபெயர முடிவு செய்து, 1919-ல் ஊட்டியில் உள்ள பங்களாவை உள்ளடக்கிய சொத்துக்களை சர். ரத்தன் டாடா அறக்கட்டளையாக உருவாக்கினார். 1922-ம் ஆண்டு லேடி வெலிங்டனின் வேண்டுகோளை ஏற்று, `ஹாரோ ஆன் தி ஹில்’ பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகளுக்காக டாடா அறக்கட்டளையால் நன்கொடையாக வழங்கப்பட்டது.

அப்போது ராணுவம், கடற்படை அதிகாரிகளுக்காக பயன்படுத்தப்பட்டது. ராணுவ அதிகாரிகளுக்கான ‘கன்வல்சென்ட் ஹோம்’ என்ற பெயரிடப்பட்டது. அதிகாரிகள் மட்டுமின்றி வீரர்கள் தங்குவதற்கு 19 இரட்டை படுக்கை அறைகள் கொண்ட பங்களாவாக இதை பிரிட்டிஷ் அரசு விரிவுபடுத்தியது. அதில் இரண்டு அறைகள், ஒரு பெரிய சாப்பாட்டுக் கூடம், சமையலர் குடியிருப்பு, ஸ்டோர் அறைகள் மற்றும் 43 பணியாளர்கள் குடியிருப்புகள் உள்ளன.

சுதந்திரத்துக்குப் பிறகு ஃபீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா, லேடி நவாஜ்பாய் டாடாவை அணுகி, அந்த சொத்தை இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் விடுமுறை இல்லமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு அவர் ஒப்புதல் அளித்தார். இதனால் ‘தி ஹாரோ ஆன் தி ஹில்’ ‘தி ரத்தன் டாடா ஆபீசர்ஸ் ஹாலிடே ஹோம்’ என்று மாறியது. இன்றளவும் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் படைப்பிரிவு ராணுவ மையத்தால் நிர்வகிக்கப்படுகிறது " என்றார்.

Tags:    

Similar News