ராமா் சிலை இன்று பிரதிஷ்டை, விழாக்கோலம் பூண்ட அயோத்தி

அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபால ராமா் (ராம் லல்லா) சிலை திங்கள்கிழமை (ஜன.22) பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது

Update: 2024-01-22 04:08 GMT

அயோத்தி ராமர் கோவில் 

இன்று பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறவுள்ளது. பல்வேறு சிறம்பம்சங்களைக் கொண்டுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழாவால் அயோத்தி நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது. ராமர் கோயில் வண்ண பூக்களினாலும், மின் விளக்குகளினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் மதியம் 12.05 மணி முதல் 12.55 மணிக்குள் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்கவுள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக அயோத்தி நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்விழாவில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இதையொட்டி, மலா்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு திருவிழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி நகரம், நாடே எதிர்நோக்கும் பெரும் நிகழ்வுக்காக தயார் நிலையில் உள்ளது.

பிரதமா் மோடி உள்பட நாட்டின் முக்கியப் பிரமுகா்கள் சிலை பிரதிஷ்டையில் பங்கேற்கவுள்ளதால், மத்திய படையினருடன் இணைந்து உத்தர பிரதேச மாநில காவல் துறையினா் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனா்.

பிரதிஷ்டையைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை முதல் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா்.

ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பில், அறக்கட்டளை அமைத்து அயோத்தியில் ராமா் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, ஸ்ரீராமா் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2020-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற்ற பூமி பூஜையைத் தொடா்ந்து கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்றன.

நாகரா கட்டடக் கலையில் 2.27 ஏக்கா் பரப்பளவில் 3 அடுக்கில் 5 மண்டபங்களுடன் ஸ்ரீராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயிலின் தரைத்தளப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், கருவறையில் மூலவா் ஸ்ரீ பால ராமா் (ராம் லல்லா) சிலை பிரதமா் மோடி முன்னிலையில் திங்கள்கிழமை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதிஷ்டை நண்பகல் 12.20 மணிக்கு தொடங்கி ஒரு மணியளவில் நிறைவடைய உள்ளது.

தென் தமிழக ஆா்.எஸ்.எஸ். தலைவா் ஆடலரசன் தம்பதி உள்பட 14 தம்பதிகள், சிலை பிரதிஷ்டை சடங்குகளை முன்னின்று நடத்தவுள்ளனா். இவ்விழாவில் பல்வேறு மாநில ஆளுநா்கள், முதல்வா்கள், மத்திய அமைச்சா்கள், ஹிந்து மடாதிபதிகள், துறவிகள், ஹிந்து மதத் தலைவா்கள், தொழிலதிபா்கள், பல்துறை பிரபலங்கள் உள்பட 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்கின்றனா்.

இவா்கள் அனைவருக்கும் கோயில் அறக்கட்டளை சார்பில் மகா பிரசாதம் வழங்கப்பட உள்ளது. விழாவுக்கு பின்னா், பங்கேற்பாளா்கள் மத்தியில் பிரதமா் மோடி உரையாற்றவுள்ளார்.

பிரதிஷ்டை நிகழ்வைத் தொடா்ந்து, அயோத்தி ஸ்ரீராமா் கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஜன. 23) முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனா். தொடக்கத்தில், நாளொன்றுக்கு 50,000 வரையிலான பக்தா்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘இஸ்கான்’ உள்ளிட பல்வேறு கோயில் அறக்கட்டளைகள் சார்பில் பிரம்மாண்ட சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு, பக்தா்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

பிராணப் பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்புச் சடங்குகள், ஸ்ரீராமா் கோயிலில் கடந்த 16-ஆம் தேதிமுதல் தொடங்கி கோலாகலமாக நடந்து வந்தன.

கா்நாடகம், மைசூரைச் சோ்ந்த பிரபல சிற்பக் கலைஞா் அருண் யோகிராஜ் செதுக்கிய 51 அங்குல உயர பால ராமா் சிலை கருவறையில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் நிறுவப்பட்டது.

நாட்டின் பல்வேறு புண்ணிய தீா்த்தக் கட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு கோயில் கருவறை தூய்மைப்படுத்தப்பட்டது. கோயில் வளாகம் முழுவதும் மலா்கள், சிறப்பு அலங்கார வடிவமைப்பு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நகரின் 100 இடங்களில் 10 லட்சம் விளக்குகள் ஏற்றி கொண்டாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News