வயநாட்டில் ராகுல்காந்தி : 10 நாட்கள் தேர்தல் பிரசாரம்..!
பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி இன்று செல்கிறார்.
கடந்த லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல்காந்தி, வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இப்போது வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவர் நாளை (புதன்கிழமை) வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இதையொட்டி கல்பெட்டாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் முன்பு வரை ரோடு ஷோ (வாகன அணிவகுப்பு) நடைபெறுகிறது. இதில் பிரியங்கா காந்தியுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார்கள். இதற்காக அவர்கள் 3 பேரும் இன்று (செவ்வாய்க்கிழமை) வயநாட்டுக்கு செல்கின்றனர்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், பிரியங்கா காந்தி 10 நாட்கள் வயநாட்டில் தங்கி இருந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். கேரள காங்., கட்சியினர் இதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர். வயநாட்டில் காங்., தனது கூட்டணி கட்சியை எதிர்த்தே களம் காண்கிறது. இருப்பினும் பிரியங்கா காந்திக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என கேரள மாநில காங்., நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.