திருப்பதியில் வரும் 19ம் தேதி புஷ்ப யாகம்
புஷ்ப யாகம் நடைபெறுவதால் கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவை போன்ற நிகழ்ச்சிகளை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.;
திருமலையில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பிரம்மோற்ஸவம் முடிந்த பின் வரும், திருவோண நட்சத்திரத்தன்று, புஷ்பயாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
அதன்படி, வரும் நவம்பர் 19ம் தேதி திருமலையில் புஷ்பயாகம் நடக்கிறது. இதற்காக, நவம்பர் 18ம் தேதி மாலை 6 மணி முதல் 8 மணி வரை புஷ்ப யாகத்திற்கான அங்குரார்ப்பணம் நடக்கிறது.
புஷ்பயாகத்தன்று ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்பசுவாமி உற்சவர்களுடன் சம்பங்கி பிரதக்ஷிணத்தில் கல்யாணமண்டபத்திற்கு அழைக்கப்பட்டு ஸ்னபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
அதன்பின், உற்ஸவமூர்த்திகளை கோவிலுக்குள் உள்ள மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, சாமந்தி, ரோஜா, அரளி, சம்பங்கி, மல்லிகை, முல்லை, தாழம்பு, தேன்பூ, தாமரை, அல்லி உள்ளிட்ட மலர்கள், துளசி, வில்வம், மரிகொழுந்து, மருவம் உள்ளிட்ட இலைகளாலும், அர்ச்சகர்கள் புஷ்ப யாகத்தை நடத்துகின்றனர்.
மாலையில் சஹஸ்ரதிபாலங்கர சேவை முடிந்து மலையப்பசுவாமி கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இதன் காரணமாக கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவை போன்ற நிகழ்ச்சிகளை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.