பஞ்சாப் போலி என்கவுன்ட்டர்! 31 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு

நாட்டில் மனித உரிமை மீறல்கள், போலீஸ் லாக்கப் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன.

Update: 2024-06-18 04:08 GMT

போலி என்கவுன்ட்டர் வழக்கில் தண்டனை பெற்ற காவல்துறை அதிகாரிகள்

பஞ்சாப் மாநிலத்தில் 1990-களில் தீவிரவாதம் அதிகமாக இருந்தது. சந்தேகப்படுபவர்களையெல்லாம் காவல்துறையினர் பிடித்துச் சென்று காவலில் வைத்துக் கொண்டிருந்தனர். அப்படி, 1993-ம் ஆண்டு, ஜூன் 22 அன்று காய்கறி வியாபாரியான குல்ஷன் குமார் வீட்டுக்குள் காவல்துறை அதிகாரிகளான தில்பாக் சிங், குர்பச்சன் சிங் ஆகியோர் தலைமையில் போலீஸார் `திமுதிமு’வெனப் புகுந்தனர்.

குல்ஷன் குமார், அவருடைய சகோதரர்கள் பர்வீன் குமார், பாபி குமார், தந்தை சமன்லால் ஆகிய அனைவரையும் பிடித்துச் சென்றனர். தீவிரவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி, கைது செய்து சில நாள்கள் காவலில் வைத்தனர். பின்னர், குல்ஷன் குமாரைத் தவிர அனைவரையும் விடுவித்தனர்.

காவலில் வைக்கப்பட்டிருந்த குல்ஷன் குமாருக்கு, குடும்ப உறுப்பினர்கள் அவ்வப்போது சாப்பாடு எடுத்துப்போய் கொடுத்துவிட்டு வந்தனர். ஒரு மாதம் கடந்த நிலையில், ஜூலை 22 அன்று பஞ்சாப்பில் ஒரு என்கவுன்ட்டர். அதில், நான்கு பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதில் அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்தி, அந்த நான்கு பேரில் குல்ஷன் குமாரும் ஒருவர் என்பதுதான். அதுமட்டுமல்லாமல், அவரது உடலை குடும்பத்தாரிடம் கொடுக்காமல், `உரிமை கோரப்படாத உடல்' என்று பதிவுசெய்து, காவல்துறையே தகனமும் செய்து விட்டது.

பேரதிர்ச்சியிலிருந்து மீளாத குல்ஷன் குமாரின் குடும்பத்தினர் நீதி கேட்டு அலைந்தனர். பல இடங்களுக்கு அலைக்கழிக்கப்பட்ட குல்ஷன் குமாரின் தந்தை சமன்லால், இறுதியில் உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 1995-ம் ஆண்டு, வலக்கை நவம்பர் 15 அன்று சி.பி.ஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அப்படியிருந்தும் இந்த வழக்கு விசாரணை விரைவு பெறவில்லை. 1997-ம் ஆண்டுதான் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது, சி.பி.ஐ.

குற்றம்சாட்டப்பட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தில்பாக் சிங், காவல் ஆய்வாளர் குர்பச்சன் சிங், காவல் உதவி சப் ஆய்வாளர்அர்ஜூன் சிங், தேவிந்தர் சிங், பல்பிர் சிங் ஆகியோர்மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இரண்டு வருட விசாரணைக்குப் பிறகு 1999-ம் ஆண்டு, மே 7 அன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. சி.பி.ஐ விசாரணை நடந்த காலகட்டத்திலேயே அர்ஜூன் சிங், பல்பிர் சிங், தேவிந்தர் சிங் ஆகியோர் காலமாகி விட்டனர்.

இந்த வழக்கில் 32 பேரை சி.பி.ஐ சாட்சியங்களாகச் சேர்த்திருந்தது. குற்றம் நடந்து 30 ஆண்டுகள் கழித்த பிறகே, முதல் சாட்சியிடம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. வழக்கு விசாரணையின் போது 15 சாட்சிகள் இறந்து விட்டனர். மகனை என்கவுன்ட்டரில் கொலை செய்து விட்டனர் என்று புகார் கொடுத்த சமன்லால், சாட்சியம் அளிக்கும் முன்பே இறந்துபோனார்.

குற்றம் நடந்தது 1993-ம் ஆண்டு. ஆனால், குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டு 2022-ம் ஆண்டு, பிப்ரவரி 7 அன்றுதான் பதிவு செய்யப்பட்டது. இந்தக் கால இடைவெளியில், காவல்துறை அதிகாரி தில்பாக் சிங் டி.ஐ.ஜி-யாகவும், குர்பச்சன் சிங் டி.எஸ்.பி-யாகவும் பதவி உயர்வு பெற்றிருந்தனர்.

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி குப்தா முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. சி.பி.ஐ வழக்கறிஞர்களாக அன்மோல், சரப்ஜித் சிங் ஆஜராகி வாதாடினர். இந்த வழக்கில், குற்றம் நடந்து 31 ஆண்டுகள் கடந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குப்தா, குற்றம்சாட்டப்பட்ட, ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி தில்பாக் சிங்குக்கு 364-வது சட்டப் பிரிவின்கீழ் ஏழு ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தார். முன்னாள் டி.எஸ்.பி குர்பச்சன் சிங்குக்குக் கடத்தல், கொலை, சாட்சியங்களை அழித்தல் என 364, 302-வது பிரிவின்கீழ் ஆயுள் தண்டனை விதித்தார். தில்பாக் சிங்குக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், குர்பச்சன் சிங்குக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், `இது தீவிரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை தான்' என்றும் `முதுமை, உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டார். அவர்களின் வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார். சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

31 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைத்திருக்கிறது. ஆனால், `தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி' என்பதுதான் மறுபடியும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது! ஆம், குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே காவல்துறையினர். பலரும் பதவி உயர்வு பெற்று, அதை வைத்து ஆண்டு அனுபவித்து, பணி ஓய்வு பெற்று, கிட்டத்தட்ட வாழ்க்கை மொத்தத்தையும் சொகுசாக வாழ்ந்து முடித்து விட்டனர். சிலர், இறந்தும் போய் விட்டனர்.

இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தை அமல்படுத்துபவர்களாக இருப்பதால், காலம் கடந்தே நீதி கிடைக்கிறது. சில நேரங்களில் கிடைக்காமலேயும் போய்விடுகிறது. இதற்குப் பிறகு, அவர்களுக்கெல்லாம் வழங்கப்படும் தண்டனைக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?

Tags:    

Similar News